ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: மறக்க வேண்டிய 2006! கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்?

'தலைசிறந்த அணி' எனும் பெயருக்கு அருகில் இருக்கும் அணி

ஆசைத் தம்பி

FIFA World Cup Foot Ball 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொழும்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் அடிப்படையில் தேர்வாகி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். இன்று நான்காவது அணியாக பிரான்ஸைப் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க – தொடர் தோல்விகள்… ஜெர்மனி அணி கோப்பையை தக்க வைக்குமா?

1904ம் ஆண்டு முதன் முதலாக பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி உருவாக்கப்பட்டது. மே 1, 1904ம் ஆண்டு பெல்ஜியம் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச கால்பந்து போட்டியை ஆடியது பிரான்ஸ். இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவானது. 1905ம் ஆண்டு தனது சொந்த மண்ணில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக முதன் முதலில் விளையாடிய பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆச்சர்யம் என்னவெனில், அப்போட்டியை நேரில் ரசித்தது வெறும் 500 பேர் தான்.

கால்பந்து உலகில் பிரான்ஸை பொறுத்தவரை ‘தலைசிறந்த அணி’ எனும் பெயருக்கு அருகில் இருக்கும் அணி. உலகக் கோப்பையை பொறுத்த வரைக்கும் கூட அப்படியொரு பெயரையே பெறுகிறது பிரான்ஸ். இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே ஃபிபா உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் பட்டத்தை இரு முறையும், ஒரு முறை ஒலிம்பிக் பட்டதையும், இருமுறை ஃபிபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளது. ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்ற நான்கு அணிகளுள் பிரான்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 1930ம் ஆண்டு முதன்முறை உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய அணிகளில் பிரான்ஸும் ஒன்று. ஆறு முறை தகுதிச் சுற்றோடு வெளியேறி இருக்கிறது. குறிப்பாக, இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பைத் தொடரிலும் தவறாமல் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாக பிரான்ஸும் திகழ்கிறது.

1998ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் டைடியர் டெஸ்சேம்ப்ஸ் தலைமையில் களமிறங்கிய பிரான்ஸ், ஜிடேனின் உதவியோடு முதன் முதலாக தனது உலகக் கோப்பையை ருசித்தது. இரண்டு வருடங்கள் கழித்து, UEFA யூரோ 2000 கோப்பையை பிரான்ஸ் வென்றது. அதேபோல், 2001 மற்றும் 2003ம் ஆண்டு கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையை வென்ற பிரான்ஸ், 2006ல் நடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதில் 5-3 என்ற கோல் கணக்கில் பெனால்டியில் தோல்வி அடைந்தது பிரான்ஸ். 2016ல் நடந்த UEFA யூரோ தொடரில், இறுதிப் போட்டியில் 1-0 என போர்ச்சுகல் அணியிடம் பிரான்ஸ் தோற்றது.

கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பெர்லின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியுடன் இத்தாலி மோதிக் கொண்டிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து, 90 நிமிட நேர ஆட்டத்தை சமனில் முடித்தன. கூடுதல் நேரத்தில் 110வது நிமிடத்தில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் உலகையே அதிர வைத்தது.

பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கும், இத்தாலி மிட்பீல்டர் மார்கோ மெட்ரசிக்கும் மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில், ஜிடேனின் குடும்பத்தார் குறித்து மெட்ரசி ஏதோ கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜிடேன், மெட்ரசியை தலையால் முட்டி கீழே தள்ளினார்.

இந்த போட்டியை உலகம் முழுக்க தொலைகாட்சிகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டிருந்தனர். மைதானத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் உலகையே அதிர வைத்தது. இதனால் நேரடி சிவப்பு அட்டை காட்டப்பட்ட ஜிடேன், உடனடியாக களத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பிரான்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வி கண்டு, 2வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இத்தாலி அணி 4வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இறுதி போட்டி முடிந்ததும் ஜிடேன்,”கோடிக்கணக்கான குழந்தைகள் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வன்முறையை வெளிப்படுத்தும் விதத்தில், நடந்து கொண்டது குறித்து நான் வெட்கப்படுகிறேன். கால்பந்து ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும் ” என்று கூறினார்.

இந்நிலையில், 2018 உலகக் கோப்பையில் ‘A’ பிரிவில் இடம்பெற்றுள்ளது பிரான்ஸ். நெதர்லாந்து மற்றும் சுவீடன், பல்கேரியா, பெலாரஸ், லூக்சம்பெர்க் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் அணி பட்டியல் பின்வருமாறு,

கோல் கீப்பர்கள்:

ஹுகோ லோரிஸ், ஸ்டீவ் மடண்டா, அல்போன்ஸ் ஏரியோலா.

டிஃபென்டர்:

பெஞ்சமின் பவர்ட், ப்ரெஸ்நெல் கிம்பெம்பே, ரஃபெல் வரனே, சாமேவேல் உம்டிடி, அடில் ராமி, ஜிப்ரில் சிடிபே, லூகாஸ் ஹெர்னாண்டஸ், பெஞ்சமின் மென்டே.

மிட் ஃபீல்டர்:

பவுல் போக்பா, தாமஸ் லெமர், கோரெண்டின் டோலிசோ, என்’கோலோ கன்டே, பிளைஸ் மடுடி, ஸ்டீவென் சோன்சி

ஃபார்வேர்ட்ஸ்:

ஆன்டோய்ன் க்ரீஸ்மேன், ஒலிவியர் கிரவுட், கைலியன் பேப், அவுஸ்மேன் டெம்பலே, நபில் ஃபெகிர், ஃப்ளோரியன் தாவின்.

குரூப் A பிரிவில் உள்ள பிரான்ஸ், தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுக்கு கடும் போட்டி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது பிரான்ஸ் இருக்கும் ஃபார்மை வைத்து பார்க்கும் பொழுது, இந்த ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் வரலாற்றில் தியரி ஹென்றி அதிகபட்சமாக 51 கோல்கள் அடித்துள்ளார். தற்போது உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ள வீரர்களில் ஒலிவியர் 73 ஆட்டங்களில் 31 கோல்கள் அடித்திருக்கிறார்.

பிரான்ஸ் இந்த உலகக் கோப்பையை வெல்லும் என்று இதுவரை வல்லுநரும் ஆருடம் சொல்லவில்லை. இருப்பினும், உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சவால் அளிக்கக் கூடிய அணி பிரான்ஸ் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. அன்று ஜிடேன் செய்த தவறால் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கையில் இருந்து நழுவவிட்ட பிரான்ஸ், இம்முறை நிச்சயம் தன் கையில் கோப்பையை ஏந்த வேண்டும் என்பதே பிரான்ஸ் கால்பந்து ரசிகர்களின் கனவாக உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close