கிரிக்கெட்டை பெரிதும் நேசிக்கும் இரு நாடுகள்! அடுத்தடுத்து சிக்கும் வீரர்கள்! ஏன் இந்த அவலம்?

வேலை வெட்டியை விட்டு, கிரிக்கெட்டை ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவமானப்படுத்தும் செயல்

நிறவெறியுடன் பேசிய விவகாரத்தில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவுக்கு அடுத்த 4 போட்டிகளுக்கு விளையாட தடை விதித்து ஐசிசி இன்று உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கடந்த ஜன.22ம் தேதி டர்பனில் நடைபெற்றது. ஆட்டத்தின் 37வது ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் ஃபெலுக்வாயோ பேட்டிங் செய்து கொண்டு இருக்கும்போது, விக்கெட் கீப்பராக செயல்பட்டு கொண்டு இருந்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது இனவெறியை தூண்டும் வகையில் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அவர் ஃபெலுக்வாயோவை நோக்கி “ஏய் கருப்பு வீரனே, இன்று உன் தாய் எங்கே இருக்கிறார்?, உனக்காக அவர் இப்போது என்ன பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்?” என்று கூறினார்.

இந்த கருத்துக்கள் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சோயிப் அக்தர், “சர்ப்ராஸின் செயல் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் கண்டிப்பாக அவரது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து சர்ப்ராஸ் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். மேலும் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஃபெலுக்வாயோவை நேரடியாக சந்தித்தும் மன்னிப்பு கேட்டார்.

போட்டி நடுவரும் நடந்த சம்பவங்களை அறிக்கையாக ஐசிசியிடம் அளித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், ஐசிசி இன்று அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அடுத்துவரும் 4 போட்டிகளுக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் விளையாடத் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்து வரும் 2 ஒரு நாள் போட்டிகளிலும், இரு டி20 போட்டிகளிலும் அவர் விளையாட முடியாது.

இது குறித்து ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்ஸன் அளித்த பேட்டியில், “நிறவெறியுடன் நடந்து கொள்வதிலும், பேசுவதிலும் ஐசிசி எந்த விதத்திலும் யாரையும் சமரசம் செய்து கொள்ளாது. சர்ப்ராஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், தன்னுடைய செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்டு, வெளிப்படையாகவும் மன்னிப்பு கோரிவிட்டார். இதைக் கருத்தில் கொண்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறவெறிக்கு எதிரான விதிமுறைள் பிரிவு 7.3ன்படி, சர்ப்ராஸ் அகமது நிறவெறி விழிப்புணர்வு குறித்த பயிலரங்குக்கு செல்ல வேண்டும். இது குறித்து ஐசிசி பாகிஸ்தான் வாரியத்துடன் கலந்து பேசி எப்போது எப்படி நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும்” என்றார்.

ஏற்கனவே, அவசரப்பட்டு நிறவெறி குறித்து பேசி, பல எதிர்ப்புகளை உள்நாட்டில் இருந்தே சந்தித்து வந்த சர்ப்ராஸ், தற்போது நான்கு போட்டியிலும் விளையாட தடை பெற்றிருக்கிறார். இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் நிறவெறி குறித்தும் பாலியல் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யாவும், லோகேஷ் ராகுலும் தடை பெற்றனர். எங்கே என்ன பேசுவது? என்று கூட தெரியாத சிறு பிள்ளைகளைப் போல இருவரும் பேசி இருந்தனர். அதனை, இந்தியாவே போற்றும் இயக்குனர் ஒருவர் கேட்டு ரசித்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது தடை விலக்கப்பட்டு மீண்டும் அவர்கள் கிரிக்கெட்டுக்கு திரும்பினாலும், இதனால் ஏற்பட்ட விளைவை அவர்கள் கடந்த சில வாரங்களாக அழுத்தமாக அனுபவித்தனர். வீட்டை விட்டுக் கூட வெளியில் செல்ல முடியாத சூழல்.

இப்போது, பாகிஸ்தான் கேப்டன் எனும் மிகப் பெரிய பொறுப்பான இடத்தில் இருந்து கொண்டு, மிகவும் கீழ்த்தரமான நிறவெறி வார்த்தைகளை உதிர்த்து சர்ப்ராஸ் தடை வாங்கி உட்கார்ந்து இருக்கிறார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் கிரிக்கெட்டை பெரிதளவு நேசிக்கும் நாடுகள். சச்சின் விளையாட வந்தால், மக்கள் தங்கள் தினசரி பணியை ஆஃப் செய்துவிட்டு, டிவியை ஆன் செய்வார்கள் என்று கூறப்படும் அளவிற்கு கிரிக்கெட்டை கொண்டாடும் நாடு இந்தியா. அதுபோலத் தான் பாகிஸ்தானும்.

வீரர்கள் இங்குதான் ஹீரோக்களாக கொண்டாடப்படுகிறார்கள். அது சரியா, தவறா என்பது வேற விவாதம். ஆனால், இப்படி ஆராதிக்கப்படும் இடத்தில் இருந்து கொண்டு, வெறுக்கத்தக்க வகையில் அந்த ஹீரோக்கள் செயல்படுவது என்பது அவர்களை அவமானப்படுத்தும் செயல் அல்ல… வேலை வெட்டியை விட்டு, கிரிக்கெட்டை ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவமானப்படுத்தும் செயல்!.

இறுதியாக ஒன்று… “ஒரு வீரரை சரியாக உருவாக்குவதில் பயிற்சியாளருக்கு இருக்கும் அதே பங்களிப்பு பெற்றோருக்கும் உண்டு. இளம் வயதில் அவரைக் கட்டமைப்பது பெற்றோர் தான். குழந்தைகள் செய்த தவறையும், ஏமாற்றுத்தனத்தையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், அங்குதான் பிரச்சினை உருவாகும். தவறையும், ஏமாற்றுத்தனத்தையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும், சரியானது அல்ல என உணர்த்த வேண்டும்” என்று ராகுல் டிராவிட் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

மேலும் படிக்க – சஸ்பென்ஷனுக்கு பிறகு 1000 பந்துகளை அடித்து விளாசிய ஹர்திக் பாண்ட்யா! மிரண்டு போன பயிற்சியாளர்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close