இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று டவுண்டனில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதியது வங்கதேச அணி.
முதல் இன்னிங்க்ஸ்
டாஸை வென்ற வங்கதேச அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக க்றிஸ் கெயில் மற்றும் லூயிஸ் களம் இறங்கினார்கள். அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் சைபதீன் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அவருக்கு பின்பு களம் இறங்கிய ஹோப் எவின் லூயிஸூடன் இணைந்து மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 96 ரன்கள் குவித்து ஹோப் ஆட்டம் இழந்தார். எவின் லூயிஸ் மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் அரை சதங்களை கடக்க என்ன செய்வதென்று சற்றே திணறிவிட்டனர் வங்க தேச அணியினர்.
104 மீட்டர் தொலைவிற்கு சிக்ஸை பறக்கவிட்ட மே. தீவுகள் அணியின் ஷிம்ரான் ஹெட்மியர்
லூயிஸ் 70 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஹெட்மியர் 26 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். ஸ்கிப்பர் ஜேசன் ஹோல்டர் ஒரு 33 ரன்கள் அடிக்க மிகப்பெரிய இலக்கினை வைத்தது மேற்கிந்திய தீவுகள் அணி. 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. 104 மீட்டர் தொலைவிற்கு சிக்ஸை பறக்கவிட்ட மே. தீவுகள் அணியின் ஷிம்ரான் ஹெட்மியர் நேற்று மிகவும் கவனிக்கப்பட்ட ஆட்டக்காரர் ஆவார்.
இரண்டாவது இன்னிங்க்ஸ்
இந்த கடினமான இலக்கினை மனதில் வைத்துக் கொண்டு களம் இறங்கிய சௌமியா சர்கார் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு சாகிப் அல் ஹசன் களம் இறங்கி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சினை பதம் பார்க்கத் துவங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த தமீம் இக்பால் 48 ரன்களில் வெளியேறினார். அதனை அடுத்து களம் இறங்கிய ரஹிம் ஒரே ஒரு ரன் எடுத்து ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்தார். 5வது வீரராக களம் இறங்கிய லிட்டோன் தாஸ் - சாகிப் கூட்டணியில் மேற்கிந்திய தீவுகள் அணியை பதம் பார்க்க துவங்கினார்கள்.
ஷாகிப் அல் ஹசனின் ஒன் மேன் ஷோ தான் நேற்றைய் ஆட்டம். ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் எடுத்து வங்கதேசத்தின் வெற்றிக்கு வித்திட்டார். உலககோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது ஆட்டக்காரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார் ஷாகிப் அல் ஹசன். மேலும் அவர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. லிட்டோன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் கூட்டணி அதிரடியில் இறங்கி 189 ரன்கள் எடுத்தது. லிட்டோன் தாஸ் 94 ரன்களுக்கு ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
வங்கதேச அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ரன்கள் (7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்) எடுத்து வெற்றியை உறுதி செய்தது.
ப்ளேயர் ஆஃப் தி மேட்சினை பெற்ற சாகிப் (124* ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்)
தரவரிசைப் பட்டியலில் இரண்டு அணிகளின் நிலவரம் என்ன?
இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்களில் 5 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியது வங்கதேச அணி. 5 ஆட்டங்களில் 3 புள்ளிகள் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
மேலும் படிக்க : குல்தீப் யாதவ் பந்தில் இருக்கும் மேஜிக்..மீண்டும் வரலாறு படைக்க காரணமான விக்கெட் வீடியோ!