'வாசிம் அக்ரம் என்னிடம் அப்படி கேட்டிருந்தால் கொன்றிருப்பேன்' - சோயப் அக்தர்
முதலில் ஆட வருபவர்களின் விக்கெட்டுகளை எடுத்து என்னை எவ்வளவு முறை காப்பாற்றியிருக்கிறார் என்று என்னால் கூற முடியும். நான் விக்கெட் எடுக்க, கடைசியில் ஆட வருபவர்களை மீதம் வைப்பார்
மேட்ச் ஃபிக்ஸிங் செய்யச் சொல்லி வாசிம் அக்ரம் என்னை கேட்டிருந்தால், அவரைக் கொன்றிருப்பேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
Advertisment
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வாசிம் அக்ரம் பற்றி அக்தர் பேசுகையில், "90-களின் ஆட்டங்கள் சிலவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தனது அட்டகாசமான பந்துவீச்சின் மூலமாக, கடினமான சூழலிலிருந்து பாகிஸ்தானை வாசிம் அக்ரம் எப்படி ஜெயிக்க வைத்தார் என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் என்னை மேட்ச் ஃபிக்ஸிங் செய்யச் சொல்லி அக்ரம் அணுகியிருந்தால் அவரை அழித்திருப்பேன், அல்லது கொன்றிருப்பேன். ஆனால் அவர் அப்படி எதையும் என்னிடம் சொன்னதில்லை.
அவரோட 7-8 வருடங்கள் விளையாடியிருக்கிறேன். முதலில் ஆட வருபவர்களின் விக்கெட்டுகளை எடுத்து என்னை எவ்வளவு முறை காப்பாற்றியிருக்கிறார் என்று என்னால் கூற முடியும். நான் விக்கெட் எடுக்க, கடைசியில் ஆட வருபவர்களை மீதம் வைப்பார். என்னை விட அதிக விக்கெட் எடுத்த அனுபவசாலியாக இருந்தாலும் என் விருப்பம் போல அவர் பந்து வீச அனுமதிப்பார்" என்று அக்தர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில் அக்தர் பேசுகையில், “நான் ஒருபோதும் பாகிஸ்தானை ஏமாற்ற மாட்டேன். மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதில்லை. ஆனால் நான் மேட்ச் பிக்ஸர்களால் சூழப்பட்டேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிஃப், முகமது ஆமிர் ஆகியோர் மேட்ச் பிக்ஸிங்கில் தங்கள் நற்பெயரை மட்டுமல்லாது கரியரையும் இழந்தார்கள். ஆமிர் மட்டும் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”