Advertisment

Ind vs Ban 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; இந்தியா அபார வெற்றி

இந்தியா- வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட்; 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

author-image
WebDesk
New Update
ind vs ban test series: press conference by KL Rahul in tamil

IND vs BAN: India Test Squad for Bangladesh Tamil News

IND vs BAN 1st Test Day 4 Score TAMIL NEWS: வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகளில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

Advertisment

இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 14 ஆம் தேதி) காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இரு அணி ஆடும் லெவன் வீரர்கள் விபரம்:

இந்தியா: கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேசம்: ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, லிண்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), யாசிர் அலி, நுருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலித் அகமது, எபாதத் ஹூசைன்.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் - முதல் நாள் ஆட்டம்

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - சுப்மான் கில் ஜோடி களமிறங்கினர். இதில் 40 பந்துகளில் 3 பவுண்டரிகளை விரட்டிய கில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, களத்தில் இருந்த கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் புஜாரா. அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துக் கொண்டிருந்த இந்த ஜோடியில் 3 பவுண்டரியை விரட்டிய ராகுல் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் கோலி. அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தைஜுல் இஸ்லாம் வீசிய 19.3வது பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.

இதையும் படியுங்கள்: ‘தவறுகளை திரும்பிப் பார்க்காதே..!’ அஷன்- நரேந்தர்- பவார் கூட்டணி வெற்றி மந்திரம் இதுதான்!

இதன்பிறகு களம்புகுந்த பண்ட் புஜாராவுடன் சேர்ந்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்தார். 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் என மிரட்டல் அடி அடித்த அவர் அரைசதம் விளாசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் புஜாராவுடன் சிறப்பான ஜோடியை அமைத்தார்.

இந்த ஜோடி அணிக்கு தேவையான ரன்களை அசத்தலாக குவித்து வந்தனர். மேலும், இருவருமே அரைசதம் விளாசி அசத்தினர். தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடியில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 203 பந்துகளில் 11 பவுண்டரிகளை விரட்டி 90 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து வந்த அக்சர் படேல் (14), முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வர இருந்த 90 வது ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபிள்யூ ஆகி அவுட் ஆனார்.

இறுதியில், முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது இந்தியா. 82 ரன்களுடன் ஷ்ரேயாஸ் களத்தில் இருந்தார்.

வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படியுங்கள்: ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட வங்கதேச கோச்: இவ்ளோ பெருந்தன்மையா?

2 வது நாள் ஆட்டம் - அஸ்வின் - குல்தீப் ஜோடி அசத்தல் பேட்டிங்:

முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 2 வது நாள் ஆட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்தார் அஸ்வின். இதில் 192 பந்துகளில் 10 பவுண்டரிகளை விரட்டிய ஷ்ரேயாஸ் 86 ரன்கள் எடுத்தது அவுட் ஆனார். அதன்பிறகு வந்த குல்தீப் யாதவ் களத்தில் இருந்த அஷ்வினுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அணிக்கு வலுவான ரன்களை சேர்த்தனர். இன்றைய நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 120 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது அஸ்வின் 40 ரன்களுடனும், குல்தீப் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய அஸ்வின் 113 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டர்களுடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 5 பவுண்டரிகளை விரட்டிய குல்தீப் 40 ரன்னிலும், சிராஜ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்களை குவித்துள்ளது.

வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4 விக்கெட்டுகளையும், எபடோட் ஹொசைன் மற்றும் கலீத் அகமது தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

2வது ஆட்ட நாள் - வங்கதேசம் பேட்டிங்

தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ, இந்திய வீரர் சிராஜ் வீசிய முதல் வேகப்பந்தில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த யாசிர் அலி உமேஷ் யாதவ் வீசிய 3.3வது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் தடுமாறி வந்த வங்கதேச அணி மீது இந்தியா தொடர் வேகத்தாக்குதல் தொடுத்தது. அதற்கு விரைவில் பலனும் கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர் சிராஜின் பந்துகளில் லிட்டன் தாஸ் 24 ரன்னிலும், தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையும் படியுங்கள்: ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட வங்கதேச கோச்: இவ்ளோ பெருந்தன்மையா?

அடுத்ததாக இந்திய அணி இரண்டு சுழல் மன்னர்களை கொண்டு நெருக்கடி கொடுத்தது. இதற்கு தாக்குபிடிக்காத வங்கதேச வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்த வீழ்ந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தி இருந்தார் மாயாஜால சுழல் வீரர் குல்தீப் யாதவ். அஸ்வினுக்கு விக்கெட்டுகள் ஏதும் கிடைக்கவில்லை.

இறுதியில், 2வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் 16 ரன்னுடனும், எபாடோட் ஹொசைன் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி வங்கதேச அணியை விட 271 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதையும் படியுங்கள்: கடைசி கட்டத்தில் நிகழ்ந்த ஆல் அவுட்… போராடி வெளியேறிய தமிழ் தலைவாஸ்!

3வது நாள் ஆட்டம் - வங்கதேசம் ஆல் அவுட்

இந்த நிலையில், இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி சார்பில் களத்தில் இருந்த எபாடோட் ஹொசைன் 17 ரன்னிலும், மெஹிதி ஹசன் மிராஸ் 25 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 55.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் -அவுட் ஆனது.

இந்தியாவின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்காத வங்கதேச அணியில் ஒருவர் கூட 30 ரன்னை தாண்டவில்லை. அந்த அணி சார்பில் அதிகப்பட்சமாக முஷ்பீர் ரகுமான் 28 ரன்கள் எடுததார். சிறப்பாக பந்துவீசிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங் - ராகுல் - கில் ஜோடி சிறப்பான தொடக்கம்

வங்கதேச அணி பாலோ ஆன்-ஆன நிலையிலும், இந்திய அணியே தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. தற்போது உணவு இடைவேளையின் போது இந்திய அணி 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் தொடக்க ஜோடியான ராகுல் - கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த ஜோடியில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் அவுட் ஆனார்.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த கில் - புஜாரா, அணிக்கு வலுவான ரன்களை சேர்ந்தனர். இந்த ஜோடியில் சுப்மான் கில் சதம் விளாசினார். அவர் 152 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 110 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து புஜாராவுடன் விராட் கோலி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த ஜோடி அணிக்கு வலுவான ரன்களை குவித்தது. இதில், புஜாரா 130 பந்துகளில் சதம் விளாசி அசத்தினர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த அவர் தனது டெஸ்ட் சத தாகத்தை தீர்த்துக்கொண்டார். அவர் சதம் விளாசி உடனே இந்தியா 2வது இன்னிங்சை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அப்போது 13 பவுண்டரிகளை விரட்டிய புஜாரா 102 ரன்களுடனும், விராட் கோலி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி 61.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து, வங்கதேச அணியை விட 512 ரன்கள் முன்னிலை பெற்றது.

வங்கதேச அணி அதன் 2வது இன்னிங்சில், 512 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த களமிறங்கிய நிலையில், அந்த அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 25 ரன்களுடனும், ஜாகிர் ஹசன் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதையும் படியுங்கள்: அதிக எடை, சுறுசுறுப்பு இல்லை… பண்ட் குறித்து முன்னாள் பாக்,. வீரர் சர்ச்சை கருத்து

4வது நாள் வங்கதேசம் பேட்டிங்

இன்று 4வது நாள் ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - ஜாகிர் ஹசன் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்து வந்தனர். மேலும் நிலைத்து நின்று விளையாடி இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் விளாசினார். இந்த ஜோடியை உடைக்க இந்திய வீரர்கள் போராடி வந்த நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ. பின்னர் வந்த யாசிர் அலி 5 ரன்களிலும் , லிட்டன் தாஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜாகிர் ஹசன் சதமடித்தார். அவர் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்களும் , நுருல் ஹசன் 3ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 4வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி சார்பில் அக்சார் படேல் 3 விக்கெட்டும் . உமேஷ் யாதவ் , அஸ்வின் , குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேச அணி வெற்றி பெற இன்னும் 242 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணி மீதமுள்ள 4 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறும். ஷாகிப் 40 ரன்னுடனும், மெஹிதி ஹசன் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

கடைசி நாள் ஆட்டத்தில், வங்கதேசம் 52 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்களையும் வீழ்ந்தது. ஒருமுனையில் ஷகிப் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், மெஹிடி 13 ரன்களில் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஷகிப் 84 ரன்களில் அவுட் ஆனார். அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் விளாசினார். அடுத்து இஸ்லாம் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் விளையாடி வந்த ஹொசைன் டக் அவுட் ஆனார். சிறிது நேரத்திலே இஸ்லாம் 4 ரன்களில் அவுட் ஆக வங்கதேச அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி சார்பில் அக்சார் படேல் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ், அஸ்வின், சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Kl Rahul Indian Cricket India Vs Bangladesh Shakib Al Hasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment