இந்திய அணியின் 'லேட் பிக்கப்' இரண்டாம் நாள் ஆட்டத்தால், சிறிதளவு நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எந்தளவுக்கு அறுவடை செய்யப்படும் என்று தெரியவில்லை.
நேற்று (பிப்.21) முதல் நாள் ஆட்டத்தில், இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரிஷப் பண்ட் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
ரன் அவுட்டுக்கு வித்திட்ட ரஹானே, கடுப்பான ரிஷப் பண்ட் - வீடியோ
அஷ்வின் தனது முதல் பந்திலேயே சவுதி ஓவரில் போல்டாக, ரஹானே 46 ரன்களில் சவுதி ஓவரில் கேட்ச் ஆனார். இதனால் இந்தியா 165 ரன்களில் ஆல் அவுட்டாக, 'எதிர்பார்த்தது தானே' என்றிருந்தது ரசிகர்களுக்கு. நியூஸி., தரப்பில் சவுதி, ஜேமிசன் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பிறகு, இந்தியாவின் பெஸ்ட் டெஸ்ட் பவுலிங் அட்டாக்கை எதிர்கொள்ள தயாரானது நியூஸி.,
இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை டெஸ்ட் போட்டிகளில் கலங்க வைத்த இந்திய பவுலர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஒருநாள் போட்டிகளில் 'எங்கப்பா பும்ரா' என்று கேட்கும் நிலைமைக்கு சென்றதால், டெஸ்ட்டில் ஆதிக்கம் எழுத்த வேண்டிய சிறிய கட்டாயம் அவருக்கு இருந்தது.
குட் லென்த், ஷார்ட் பால், ஃபுல்லர் லென்த், ஃபுல்லர் லென்த் அவுட் சைட் ஆஃப் என்று வேரியேஷன் காட்டியும் பும்ராவால் இன்றைய நாள் முழுவதிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.
நியூஸி., தொடக்க வீரர் டாம் லாதமை, ரவுண்ட் தி விக்கெட்டில் வீசிய இஷாந்த், எட்ஜ் செய்து கீப்பரிடம் கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றினார், வெறும் 11 ரன்களில்.
தொடர்ந்து டாம் பிளண்டல் 30 ரன்களில், இஷாந்த் வீசிய ஸ்விங் பந்தில் ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுக்க, நியூஸி., இரண்டாவது விக்கெட்டை இழந்தது.
இந்தியா vs நியூஸி : முதல் டெஸ்ட்டின் லைவ் ஸ்கோர் கார்டு
இதற்கடுத்து களமிறங்கிய ராஸ் டெய்லர், கேப்டன் வில்லியம்சனுடன் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, வெல்லிங்டனின் வெள்ளைத் தோல்கள் உற்சாகமாகின.
சிறப்பாக ஆடிவந்த டெய்லர், இஷாந்த் வீசிய எதிர்பாராத பவுன்சில் அப்பட்டமாக தடுமாற பந்து கிளவுசில் பட்டு, ஸ்கொயர் லெக்கில் நின்று கொண்டிருந்த புஜாராவிடம் பேபி கேட்ச்சானது. சல்லீசான விக்கெட்டாக இன்ஃபார்ம் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் அவுட்டானது தான், இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சிறந்த தருணம் எனலாம்.
இரண்டாம் நாள் முடிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, கோலி & கோ-வுக்கு கிடைத்த பம்பர் பரிசு கேப்டன் வில்லியம்சன் விக்கெட். ஷமி ஓவரில் வில்லியம்சன் டிரைவ் செய்ய, கவர் திசையில் நின்றிருந்த ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 89(153) ரன்களில், ஒரு வெல் டிசர்வ் சதத்தை தவறவிட்டு 'போச்சே மை சன்!' என்று வெளியேறினார் வில்லியம்சன்.
ஆனால், இங்கு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், வெல்லிங்டன் போன்ற விக்கெட்டுகளில் எப்படி இன்னிங்சை தொடங்க வேண்டும் என்று நமது வீரர்களுக்கு பாடம் எடுத்து சென்றிருக்கிறார் வில்லியம்சன். குறிப்பாக கேப்டன் கோலிக்கு.
இந்தியாவின் அட்டாக்கிங் பேஸ் பவுலர்களின் பந்துகளை அவர் துளியும் பொருட்படுத்தாமல், அவர்களை வீசச் செய்து கொண்டே இருந்தார். எந்த பந்துகளையும் அடிக்க நினைக்கவில்லை. ஏன், தொட கூட விரும்பவில்லை. மிக மிக நிதானம் காட்டி, கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்து, அதற்கு பிறகு தான் ரொட்டேட் செய்யவே தொடங்கினார்.
ஆனால், அதன் பிறகு அப்படியே தனது கியரை சீரான இடைவெளியில் மாற்றிக் கொண்டே செல்வதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். பேஸ், ஸ்பின் என அனைத்து ரக பந்துகளையும் சிறப்பாக அடித்து ஆடி, தனது தொடக்க 'கட்டை'களை சமன் செய்து விடுகிறார்.
இங்கே, கோலி இதை கவனத்தில் எடுத்துக் கொண்டால் நல்லது. வந்த உடனேயே டிரைவ் செய்வது அவரது மைன்ஸ். இதனால் மிக எளிதாக தனது விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார்.
இறுதியில் நிகோல்ஸ் 17 ரன்களில் அஷ்வின் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேற, நியூஸி., உண்மையில் ஏமாற்றமடைந்தது.
நாளை மூன்றாவது நாளில், நியூஸி., வாலை விரைவில் நறுக்கி, இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினால், இப்போட்டியை டிரா செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.