India vs New zealand  {IND vs NZ } 2nd T20 match Highlights in tamil - IND vs NZ 2nd T20: கடைசி வரை பரபரப்பு... நியூசி,.-யை சாய்த்த இந்தியாவுக்கு திரில் வெற்றி! | Indian Express Tamil

IND vs NZ 2nd T20: கடைசி வரை பரபரப்பு… நியூசி,.-யை சாய்த்த இந்தியாவுக்கு திரில் வெற்றி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

IND vs NZ 2nd T20 Match 2023 Live Score | IND vs NZ இரண்டாவது டி20 போட்டி 2023 நேரலை ஸ்கோர்
IND vs NZ 2nd T20 Match 2023 Live Cricket Score Streaming Online

IND vs NZ 2nd T20 Match 2023 Highlights in tamil இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் பறிகொடுத்தது. தற்போது அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.

New Zealand in India, 3 T20I Series, 2023Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow   25 March 2023

India 101/4 (19.5)

vs

New Zealand   99/8 (20.0)

Match Ended ( Day – 2nd T20I ) India beat New Zealand by 6 wickets

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணியில் களமாடிய டாப் ஆடர் வீரர்களான ஃபின் ஆலன் (11), டெவோன் கான்வே (11), மார்க் சாப்மேன் (14) என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பிறகு வந்த க்ளென் பிலிப்ஸ் (5), டேரில் மிட்செல் (8) ஒற்றை இலக்கங்களில் தங்களின் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சான்டனர் 19 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 98 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 99 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணித் தரப்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 99 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் சுப்மான் கில் 11 ரன்னிலும், இஷான் கிஷான் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி 13 ரன்னில் அவுட் ஆனார். களத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் – வாஷிங்டன் சுந்தர் சிறிது நேரம் விக்கெட் சரிவை தடுத்தனர். ஒரு பவுண்டரியை விரட்டி 10 ரன்கள் எடுத்த வாஷிங்டன் சுந்தர் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர், சூரியகுமாருடன் ஜோடி அமைத்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இந்த ஜோடி ஆட்டத்தை மெதுவாக நகர்ந்தினர். இந்தியாவின் வெற்றிக்கு 60 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்று இருந்த கட்டத்தில் இருந்து, 12 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற ஒரு இக்கட்டான கட்டத்தை நோக்கி ஆட்டம் சென்றது. அந்த நேரத்தில் 43 பந்துகளுக்குப் பிறகு கேப்டன் பாண்டியா ஒரு பவுண்டரியை விரட்டினார்.

இருப்பினும், கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. இதனால் ஆட்டத்தில் இருந்த பரபரப்பு அதன் உச்சத்திற்கே சென்றது. ஏன்னென்றால், மிகவும் மந்தமான லக்னோ ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் ரன்கள் சேர்க்க தொடக்கம் முதலே திணறி வந்தனர். போதாக்குறைக்கு நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர்களே கொடுக்காமல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க செய்தார். இந்த ஆட்டத்தில் மட்டும் 17 ஓவர்களை நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர்கள் வீசினர்.

ஒருபுறம் மந்தமான ஆடுகளம், மறுபுறம் ஸ்பின்னர்களின் குடைச்சலைத் தாண்டி இந்தியாவின் வெற்றிக்கு 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்று நெருங்கியது. இந்த தருணத்தில் பந்தை எதிர்கொண்ட சூரியகுமார் ஒரு பவுண்டரியை விரட்டி ஆட்டத்தை முடித்து வைத்தார். இறுதியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சூரியகுமார் 26 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த தொடரை யார் கைப்பற்ற போவது? என்பதை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி வருகிற புதன் கிழமை (பிப்ரவரி 1 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Live Updates
22:24 (IST) 29 Jan 2023
இந்தியாவின் வெற்றிக்கு 6 பந்துகளில் 6 ரன்கள் தேவை!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு 6 பந்துகளில் 6 ரன்கள் தேவை.

22:22 (IST) 29 Jan 2023
45 பந்துகளுக்குப் பிறகு முதல் பவுண்டரி !

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணி 45 பந்துகளுக்குப் பிறகு முதல் பவுண்டரியை விரட்டியுள்ளது.

22:18 (IST) 29 Jan 2023
இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 13 ரன்கள் தேவை!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 13 ரன்கள் தேவை.

22:14 (IST) 29 Jan 2023
இந்தியாவின் வெற்றிக்கு 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை.

22:11 (IST) 29 Jan 2023
இந்தியாவின் வெற்றிக்கு 24 பந்துகளில் 23 ரன்கள் தேவை!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு 24 பந்துகளில் 23 ரன்கள் தேவை.

21:42 (IST) 29 Jan 2023
இந்தியாவின் வெற்றிக்கு 60 பந்துகளில் 51 ரன்கள் தேவை!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு 60 பந்துகளில் 51 ரன்கள் தேவை.

20:49 (IST) 29 Jan 2023
நியூசி,. வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்… பந்துவீச்சில் மிரட்டிய இந்தியாவுக்கு 99 ரன்கள் இலக்கு !

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் முன்னணி வீரர்கள் பலரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். அதிகபட்சமாக கேப்டன் சான்டனர் 20 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 98 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 99 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

20:27 (IST) 29 Jan 2023
கே.எல். ராகுல் திருமணம்: தங்க நிற காஞ்சிப் பட்டில் ஜொலித்த அதியா ஷெட்டி; விலை எவ்ளோ இருக்கும்?!

நடிகை அதியா ஷெட்டி முஹூர்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கே.எல். ராகுல் திருமணம்: தங்க நிற காஞ்சிப் பட்டில் ஜொலித்த அதியா ஷெட்டி; விலை எவ்ளோ இருக்கும்?!
20:26 (IST) 29 Jan 2023
அதிரடி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் அவுட்!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் 14 ரன்கள் எடுத்த அதிரடி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

20:24 (IST) 29 Jan 2023
17 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.

20:22 (IST) 29 Jan 2023
பவுலிங், பேட்டிங்கில் மிரட்டிய இந்திய மகளிர் அணி… முதல் உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தல்!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

பவுலிங், பேட்டிங்கில் மிரட்டிய இந்திய மகளிர் அணி… முதல் உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தல்!
20:19 (IST) 29 Jan 2023
16 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

20:07 (IST) 29 Jan 2023
மார்க் சாப்மேன் ரன் அவுட்!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் 14 ரன்கள் எடுத்த மார்க் சாப்மேன் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

19:57 (IST) 29 Jan 2023
டேரில் மிட்செல் அவுட்!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் டேரில் மிட்செல் குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி கிளீன் போல்ட்-அவுட் ஆனார். அவர் 8 ரன்கள் எடுத்து இருந்தார்.

19:40 (IST) 29 Jan 2023
பவர் பிளே முடிவில் நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீரர்களான ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே தலா 11 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினர்.

18:42 (IST) 29 Jan 2023
நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவன்!

ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்.

18:42 (IST) 29 Jan 2023
இந்திய அணியின் பிளேயிங் லெவன்!

சுப்மான் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

18:41 (IST) 29 Jan 2023
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு; இந்தியா பவுலிங்!

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இதனால், இந்திய அணி முதலில் பவுலிங் செய்யும்.

18:24 (IST) 29 Jan 2023
லக்னோ ஆடுகளம் எப்படி?

லக்னோ மைதானத்தில் இதுவரை 5 சர்வதேச டி20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் அடங்கும்.

இங்கு நடந்துள்ள 5 டி20 போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியை ருசித்துள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். ஆட்டம் போகப்போக இந்த ஆடுகளத்தின் தன்மை மெதுவானதாக மாறும் என்றும் முதலில் வேகப்பந்து வீச்சும், போகப்போக சுழற்பந்து வீச்சும் எடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

18:11 (IST) 29 Jan 2023
இந்தியா vs நியூசிலாந்து: யாருக்கு வெற்றி?

2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் டி20 போட்டி தொடரை வெல்லாத நியூசிலாந்து அணி அந்த நீண்ட கால ஏக்கத்தை தணித்து கொள்ள எல்லா வகையிலும் போராடும். மறுபுறம், இந்திய அணிக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டம். ஏனெனில் இதில் இந்திய அணி தோற்றால் தொடரை இழப்பதுடன், டி20 போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பறிகொடுக்க வேண்டியது வரும். எனவே இந்திய அணியினர் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரில் நீடிக்க தீவிரமாக போராடுவார்கள். மேலும், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போட்டி போடும். எனவே, இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

18:07 (IST) 29 Jan 2023
இரு அணிகளின் உத்தேச பட்டியல்!

நியூசிலாந்து:

பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), சோதி, லோக்கி பெர்குசன், ஜேக்கப் டப்பி, பிளேர் டிக்னெர்.

18:07 (IST) 29 Jan 2023
இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

இந்தியா:

சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

17:47 (IST) 29 Jan 2023
தரமான ஃபார்மில் நியூசிலாந்து!

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை, கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய டேவான் கான்வே (52 ரன்கள்), டேரில் மிட்செல் (ஆட்டம் இழக்காமல் 59 ரன்கள்), தொடக்க வீரர் ஃபின் ஆலென் (35 ரன்கள்) ஆகியோரையே பேட்டிங்கில் அதிகம் நம்பி இருக்கிறது. அவர்களும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் மிட்செல் சான்ட்னெர், மைக்கேல் பிரேஸ்வெல், லோக்கி பெர்குசன், ஜேக்கப் டப்பி, சோதி ஆகியோர் பந்து வீச்சில் வலுசேர்க்கின்றனர்.

17:45 (IST) 29 Jan 2023
முதல் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய அணியின் பேட்டிங்கில் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் (46 ரன்கள்), ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் (50 ரன்கள்) தவிர யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்தியாவின் டாப் ஆடர் படுமோசமாக விளையாடியது. சுப்மன் கில், இஷான் கிஷன் ஒற்றை இலக்கத்திலும், ராகுல் திரிபாதி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். தீபக் ஹூடா உள்பட பின்வரிசை வீரர்களும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடாததால் இந்திய அணி 155 ரன்னில் அடங்கியது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கிய சுப்மன் கில் டி20- யில் சொதப்புகிறார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய இஷான் கிஷன் அதன் பிறகுடி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது கடைசி 7 இன்னிங்சில் முறையே 37, 2, 1, 5,8 (நாட்-அவுட்) 17, 4 என்று தடுமாறி வருகிறார். இந்திய அணியின் கடைசி கட்ட பந்து வீச்சு மட்டுமின்றி, பேட்டிங்கும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.

17:42 (IST) 29 Jan 2023
முதல் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை. வேகப்பந்து வீச்சாளாரான அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் வள்ளலாக மாறி 27 ரன்களை வாரி வழங்கினார். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட தாண்டி 176 ரன்களை எட்டியது. அதுவே இந்திய அணியின் பாதகத்துக்கு வழிவகுத்தது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒரு ஓவர் மட்டும் பந்து வீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சும் கச்சிதமாக இல்லை.

17:20 (IST) 29 Jan 2023
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Ind vs nz 2nd t20 match 2023 live score updates in tamil