Advertisment

IND vs PAK Highlights: கடைசி ஓவர் வரை விறுவிறுப்பு; சிக்சர் அடித்து இந்தியாவை ஜெயிக்க வைத்த பாண்டியா

IND vs PAK Asia Cup 2022; India won by 5 wickets Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் க 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs PAK Asia Cup 2022 match highlight in tamil

IND PAK: India won by 5 wkts; PLAYER OF THE MATCH Hardik Pandya Tamil News

IND vs PAK Asia Cup 2022 match highlights in tamil: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திய லீக் ஆட்டம் நேற்று இரவு 7:30 மணிக்கு துபாய் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறியது. முன்னதாக 7:00 மணிக்கு டாஸ் சுண்டப்பட்ட நிலையில், அதை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். மேலும், அணியில் விக்கெட் கீப்பர் வீரர் பண்ட்-க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இணைவதாகவும், வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கானும் ஆடும் லெவனில் இடம் பிடிக்கிறர் என்றும் கூறினார்.

Advertisment

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை ஓடவிட்ட கேப்டன் பாபர் அசாம் 10 ரன்னிலும், பின்னர் வந்த ஃபகார் ஜமானும் 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த இப்திகார் அகமது ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகளை விரட்டி 22 ரன்னில் அவுட் ஆனார்.

நீண்ட நேரம் களத்தில் மட்டையைச் சுழற்றிய தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 42 பந்துகளில் ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஹர்டிக் பாண்டிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த வீரர்கள் இந்திய பந்துவீச்சு தாக்குதலுக்கு தாக்குபிடிக்கமால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மேலும் 147 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 148 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய இந்திய அணியில் கே.எல் ராகுல் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன்பிறகு களத்தில் இறங்கி தனது 100வது டி-20யில் பேட்டிங் செய்த விராட் கோலி அசத்தலாக தொடங்கினார். சிக்ஸர், பவுண்டரி என பந்துகளை தெறிக்கவிட்டார். அவருடன் ஜோடியில் இருந்த ரோகித் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸரை விளாசினார். மீண்டும் அடுத்த பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதுவரை அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா - சூர்யகுமார் யாதவ் அதிரடி கலந்த நிதானத்தை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் ரேட்டை உயர்த்தினர். ஆனால், ரன் பொழிவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி18 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் - அவுட் ஆனார்.

இதன்பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார். மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஜோடி 50 ரன்களுக்கு மேல் பர்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா (35) போல்ட் -அவுட் ஆனார்.

ஜடேஜாவின் விக்கெட்டுக்கு பிறகு ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அந்த தருணத்தில் நிதானமாக முகமது நவாஸின் 4வது பந்தை சந்தித்த ஹர்திக் பாண்டியா தனது ஸ்டைலில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். இறுதியில், இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அசத்தல் வெற்றியை ருசித்தது. மேலும், டி-20 உலக கோப்பையில் கண்ட தோல்விக்கு பதிலடியை கொடுத்து மிரட்டியுள்ளது.

இந்த ஆட்டத்தில் பவுலிங், பேட்டிங்கில் ஜொலித்த ஆல்ரவுண்டர் வீரர் ஹர்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதைச் தட்டிச்சென்றார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil


  • 23:50 (IST) 28 Aug 2022
    சிக்ஸர் அடித்து முடித்து வைத்த ஹர்திக் பாண்டியா; பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 148 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அச்சத்தல் வெற்றியை ருசித்தது. ஹர்திக் பாண்டியா தனது ஸ்டைலில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார்.


  • 23:06 (IST) 28 Aug 2022
    சூர்யகுமார் யாதவ் அவுட்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் களமாடிய சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரியை விரட்டிய நிலையில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 51 ரன்கள் தேவை


  • 22:36 (IST) 28 Aug 2022
    10 ஓவர்கள் முடிவில் இந்தியா!

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 148 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்துள்ள இழப்பிற்கு 62 ரன்களை எடுத்துள்ளது.

    கேப்டன் ரோகித் - கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், கேப்டன் ரோகித் 12 ரன்களுடனும், கோலி 35 ரன்னுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 86 ரன்கள் தேவை


  • 22:33 (IST) 28 Aug 2022
    கோலி அவுட்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் களமாடிய விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸரை பறக்கவிட்ட அவர் 35 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.


  • 22:26 (IST) 28 Aug 2022
    கேப்டன் ரோகித் அவுட்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமாடிய கேப்டன் ரோகித் சர்மா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 12 ரன்னில் ஆட்டமிழந்தார்


  • 22:17 (IST) 28 Aug 2022
    பவர் பிளே முடிவில் இந்தியா!

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 148 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களை எடுத்துள்ளது.

    இந்திய அணியில் தொடக்க வீரராக களமாடிய ராகுல் பூஜ்ஜிய ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். தற்போது களத்தில் கேப்டன் ரோகித் - கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கேப்டன் ரோகித் 4 ரன்களுடனும், கோலி 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


  • 21:59 (IST) 28 Aug 2022
    பந்துவீச்சில் தெறிக்கவிட்ட இந்தியா; 147 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்!

    ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்காத பாகிஸ்தான் 147 ரன்னில் சுருண்டது.

    பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


  • 21:44 (IST) 28 Aug 2022
    ராகுல் அவுட்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமாடிய ராகுல் பூஜ்ஜிய ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.


  • 21:25 (IST) 28 Aug 2022
    9 - வது விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான்!

    ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி அதன் 9 - வது விக்கெட்டை இழந்துள்ளது. தற்போது அந்த அணி 19 -வது ஓவர் முடிவில் 136 ரன்களை எடுத்துள்ளது. இந்திய தரப்பில் அதிகபட்சாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    "வெந்து தணித்தது காடு, புவனேஷ்வர் குமாருக்கு வணக்கத்த போடு" - என்று தமிழ் கமெண்டரியில் ஆர்ஜே. பாலாஜி கூறியுள்ளார்.


  • 21:16 (IST) 28 Aug 2022
    7 - வது விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான்!

    ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 7 - வது விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. தற்போது அந்த அணி 18 -வது ஓவர் முடிவில் 124 ரன்களை எடுத்துள்ளது.


  • 21:14 (IST) 28 Aug 2022
    இப்திகார் அகமது அவுட்!

    ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் இப்திகார் அகமது 28 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் ஹர்திக் பாண்டியா.


  • 20:48 (IST) 28 Aug 2022
    இப்திகார் அகமது அவுட்!

    ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் இப்திகார் அகமது 28

    10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் ஹர்திக் பாண்டியா.


  • 20:30 (IST) 28 Aug 2022
    10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் - 68/2 (10)

    ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 68 ரன்களை எடுத்துள்ளது.

    அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 10 ரன்னிலும், அடுத்து வந்த ஃபகார் ஜமான் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 26 ரன்னுடனும், இப்திகார் அகமது 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


  • 20:18 (IST) 28 Aug 2022
    பவர் பிளே முடிவில் பாகிஸ்தான்!

    ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டை இழந்து 43 ரன்களை எடுத்துள்ளது.

    அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 10 ரன்னிலும், அடுத்து வந்த ஃபகார் ஜமான் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.


  • 20:12 (IST) 28 Aug 2022
    ஃபகார் ஜமான் அவுட்!

    ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டுக்குப் பின் களமிறங்கிய ஃபகார் ஜமான் 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் அவேஷ் கான்.


  • 19:56 (IST) 28 Aug 2022
    இதே துபாயில்தான் அந்த சம்பவம்… 10 விக்கெட் தோல்விக்கு இந்தியா பதிலடி என்ன?

    கடந்த ஆண்டு இதே துபாய் மைதானத்தில் நடந்த டி-20 உலக கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் மோசமாக தோற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது.

    https://tamil.indianexpress.com/sports/ind-vs-pak-olden-memory-in-dubai-will-india-response-to-the-10-wicket-defeat-501425/


  • 19:53 (IST) 28 Aug 2022
    பாபர் அசாம் அவுட்!

    ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் புவனேஷ்வர் குமார்.


  • 19:33 (IST) 28 Aug 2022
    ஆட்டம் இனிதே துவக்கம்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று இரவு 7:30 துபாயில் அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் தற்போது தூண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதல் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி களமாடியுள்ளனர். இந்திய அணி தரப்பில் முதலாவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசுகிறார்.


  • 19:16 (IST) 28 Aug 2022
    ஆடும் லெவனில் பண்ட் இல்லை!

    ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட்க்கு அணியில் இடம் இல்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் கீப்பராக இணைந்துள்ளதாக கேப்டன் ரோகித் தெரிவித்துள்ளார். பந்துவீச்சில் மற்றொரு சீமராக அவேஷ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


  • 19:12 (IST) 28 Aug 2022
    ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா- பாகிஸ்தான் - இரு அணி சார்பில் களமாடும் வீரர்கள் பட்டியல்!

    இந்தியா (பிளேயிங் லெவன்): ரோகித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

    பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷாநவாஸ் தஹானி


  • 19:09 (IST) 28 Aug 2022
    டாஸ் வென்ற இந்தியா அணி பவுலிங் தேர்வு – பாகிஸ்தான் முதலில் பேட்டிங்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று துபாயில் அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் தற்போது தூண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதல் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யும்.


  • 18:55 (IST) 28 Aug 2022
    ‘கோலி, ரோஹித் பற்றி பயமில்லை… ஆனா அந்த 360 டிகிரி வீரர்தான்..!’ பாகிஸ்தானை பயமுறுத்தும் இளம் இந்திய வீரர்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியில் 360 டிகிரி கோணத்தில் பந்துகளை பறக்கவிடும் வீரர் தங்களை பயமுறுத்தும் வீராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

    https://tamil.indianexpress.com/sports/babar-azam-talks-about-suryakumar-yadav-ahead-of-ind-vs-pak-asia-cup-cricket-2022-match-501388/


  • 18:22 (IST) 28 Aug 2022
    இந்தியா vs பாகிஸ்தான் - இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான்.


  • 18:22 (IST) 28 Aug 2022
    இந்தியா vs பாகிஸ்தான் - இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா.


  • 17:58 (IST) 28 Aug 2022
    இந்தியா vs பாகிஸ்தான் - இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்!

    பாகிஸ்தான் அணி:

    பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது ஹஸ்னைன், ஷதாப் கான், உஸ்மான் காதர், ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, முகமது நவாஸ், ஹசன் ஏ , ஹைதர் அலி


  • 17:58 (IST) 28 Aug 2022
    இந்தியா vs பாகிஸ்தான் - இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்!

    இந்திய அணி:

    ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக். , ரவி பிஷ்னோய்


  • 17:42 (IST) 28 Aug 2022
    பாகிஸ்தான் எப்படி?

    பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை, கேப்டன் பாபர் அசாமும், துணை கேப்டன் முகமது ரிஸ்வானும் அணியின் முதுகெலும்பாக உள்ளனர். இதில் கேப்டன் பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ரன்குவிக்கும் எந்திரமாக திகழ்ந்து வருகிறார். கடைசியாக ஆடிய 12 சர்வதேச போட்டிகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்திலும் குறைந்தது அரைசதம் அடித்துள்ளார். எனவே இந்த கூட்டணியை சீக்கிரம் உடைப்பது தான் இந்திய பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    பாகிஸ்தான் அணியின் அபாயகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷகீன் ஷா அப்ரிடி முழங்கால் காயத்தால் ஒதுங்கி இருப்பது அந்த அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய பின்னடைவு தான். கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் அவர் தான் இந்தியாவின் டாப்-3 வீரர்களை வரிசையாக வீழ்த்தி ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். அத்துடன் வளரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிமும் முதுகுவலியால் விலகி இருக்கிறார். ஆனாலும் நசீம் ஷா, முகமது நவாஸ், ஷதப் கான், ஹாரிஸ் ரவுப் என்று தரமான பந்துவீச்சாளர்களுக்கு குறைவில்லை.


  • 17:31 (IST) 28 Aug 2022
    பழிதீர்க்குமா இந்தியா?

    ஆசிய கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக வலம் வரும் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த டி-20 உலக கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் மோசமாக தோற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

    இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் லேகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் தொடக்க பேட்டிங் வரிசையை பலப்படுத்துகிறார்கள். இதில் ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும் கோலி ரன்மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

    மிடில் வரிசையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் வழக்கம் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு வலுவான ஸ்கோர் உறுதி. அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஒரு வேளை அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் ரவீந்திர ஜடேஜா வெளியே உட்கார வேண்டியிருக்கும். பந்து வீச்சில் காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில் புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹலைத் தான் இந்திய அணி அதிகமாக நம்பியுள்ளது.


  • 17:16 (IST) 28 Aug 2022
    இந்தியா vs பாகிஸ்தான்: நேருக்கு நேர்

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள், ஒட்டுமொத்தமாக, 200 போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் இந்தியாவும், 5-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. மழையால் ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சந்திப்பது இது 9-வது நிகழ்வாகும். முன்னதாக நடந்த 8 ஆட்டங்களில் 6-ல் இந்தியாவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது. அதிலும் 'பவுல்-அவுட்' முறையில் இந்தியா வெற்றி கண்டது.


  • 17:13 (IST) 28 Aug 2022
    இந்தியா vs பாகிஸ்தான், ஆசிய கோப்பை ஆடுகளம் எப்படி?

    ஐக்கிய அமீரக ஆடுகளங்கள் பொதுவாக சுழலுக்கு ஓரளவு கைகொடுக்கும். இங்கு பகலில் வெயில் வாட்டி வதைக்கும். இரவில் புழுக்கத்தில் வியர்த்து கொட்டும். இத்தகைய சூழலை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கனியும்.

    துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளத்தில் 160 முதல் 170 ரன்கள் வரை குவித்தால், ஒரு நல்ல ஸ்கோராக இருக்கும். இங்கு சேஸிங் செய்யும் அணிகளே அதிக முறை வென்றுள்ளன. இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சவாலாக இருக்கும்.


  • 17:12 (IST) 28 Aug 2022
    6 அணிகள் - சூப்பர் 4 சுற்று?

    ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்த ஆறு அணிகளும் தற்போது இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இதில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.


  • 16:57 (IST) 28 Aug 2022
    ஏன் டி-20 வடிவத்தில்?

    ஆசிய கோப்பை கிரிக்கெட், பொதுவாக ஒருநாள் போட்டியாக நடத்தப்படும் நிலையில், வருகிற அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு, இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுகிறது.


  • 16:53 (IST) 28 Aug 2022
    ஆசிய கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏன் நடத்தப்படுகிறது?

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது பதிப்பு தீவு நாடான இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி, நேற்று முதல் தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.


  • 16:53 (IST) 28 Aug 2022
    தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.


Sports Cricket Indian Cricket Team Indian Cricket India Vs Pakistan Pakistan Asia Asian Games
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment