மெல்போர்னில் இன்று தொடங்கிய 'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் மாயங்க் அகர்வால், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
முரளி விஜய், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்ட நிலையில், தொடக்க வீரர்களாக ஹனுமா விஹாரி, மாயங்க் அகர்வால் களமிறங்கினர்.
மேலும் படிக்க - மாயங்க் அகர்வாலை கீழ்த்தரமாக விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள்!
66 பந்துகளை சந்தித்த விஹாரி 8 ரன் எடுத்திருந்த போது, பேட் கம்மின்ஸின் மிக அபாரமான ஷார்ட் பிட்ச் பந்தில், தனது தலையை தற்காத்துக் கொள்ள பந்தை தொட, இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஃபின்ச்சிடம் எளிதாக கேட்ச் ஆனார்.
அதேசமயம், தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடிய மாயங்க் அகர்வால், கொஞ்சம் கூட பதட்டப்படாமலும், பயப்படாமலும் நேர்த்தியான ஷாட்கள் மூலம் அரைசதம் அடித்து, கேப்டன் கோலி கோச் சாஸ்திரியை குஷிப்படுத்தினார்.
ஆனால், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட் கம்மின்ஸ் ஓவரில், விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து 161 பந்தில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். இருப்பினும், முதல் ஆட்டத்திலேயே, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அரைசதம் அடித்து அசத்தினார் மாயங்க் அகர்வால்.
இந்தியாவுக்காக, கடந்த 10 ஆண்டுகளில், களமிறங்கிய முதல் டெஸ்ட் இன்னிங்சிலேயே அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார் மாயங்க்.
ஷிகர் தவான் - 187 ரன்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2013)
ப்ரித்வி ஷா - 134 ரன்கள் - விண்டீஸுக்கு எதிராக (2018)
மாயங்க் அகர்வால் - 76 ரன்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2018)
மறுபக்கம் நங்கூரம் போட்டு ஆடி வரும் புஜாரா, ஆஸ்திரேலிய வீரர்களை பெரியளவில் டயர்டாக்கிவிட்டார். 200 பந்துகளை சந்தித்த புஜாரா 68 ரன்கள் அடித்து களத்தில் நிற்கிறார். கேப்டன் விராட் கோலி, 107 பந்தில் 47 ரன்கள் எடுத்து களத்தில் சப்போர்ட் செய்ய, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருக்கிறது.
இருப்பினும், நாளையும் இந்திய அணி சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம். பெர்த்தில் செய்த தவறு ரிப்பீட் ஆகாமல், இந்திய பேட்ஸ்மேன்கள் நாளை பெருமளவில் ரன்களை குவிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், ஆஸ்திரேலிய பவுலர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால், இந்திய பேட்ஸ்மேன்களின் கதி அவ்வளவு தான்!.