இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கடந்த வாரம் மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று(ஆக.19) தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தலைமையில் கூடும் கூட்டத்தில், இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இதில், பவுலிங் கோச் பாரத் அருண் மற்றும் பீல்டிங் கோச் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் மீண்டும் தங்கள் பதவியில் தக்க வைப்பார்கள் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தனது பதவியை தக்க வைக்க கடுமையாக போராடும் சூழலில் இருப்பதாக தெரிகிறது. முன்னாள் இந்திய டெஸ்ட் ஓப்பனர் விக்ரம் ரத்தோர் இதே பதவிக்கு விண்ணப்பத்திருக்கும் நிலையில், சஞ்சய்க்கு இவர் கடும் போட்டியாளராக விளங்குகிறார்.
ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், 2021 டி20 உலகக் கோப்பைத் தொடர் வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருடன் பயணித்த இதர 'மும்மூர்த்தி' துணை பயிற்சியாளர்களும் 2021 வரை மீண்டும் தொடருவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா பேட்டிங்கில் டாமினேட் செய்து வருகிறது, பவுலிங்கும் சிறப்பாக உள்ள நிலையில், உலகில் சிறந்த பீல்டிங் யூனிட் கொண்ட அணியாக இந்தியா விளங்குவதாக சாஸ்திரி நம்புகிறார்.
மேலும் படிக்க - இரண்டு அரைசதம் அடித்ததற்காக இல்லை... அந்த தில்லுக்கு தான் மதிப்பே! க்ளீயரான 'நம்பர் 4' ஸ்பாட்
இந்நிலையில், பேட்டிங் கோச் பதவிக்கே அதிக விண்ணப்பங்கள் குவிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்ரம் ரத்தோர், 1990களில் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறார். இவரைத் தவிர, ராபின் சிங், ரிஷிகேஷ் கனித்கர், லால்சந்த் ராஜ்புட், மிதுன் மன்ஹாஸ் மற்றும் ப்ரவின் ஆம்ரே ஆகிய இந்திய வீரர்கள் பேட்ஸ்மேன் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோனதன் டிராட் மற்றும் மார்க் ராம்பிரகாஷ் ஆகிய வெளிநாட்டினரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
பவுலிங் கோச் பதவிக்கு பாரத் அருணுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர் வெங்கடேஷ் பிரசாத். தவிர, சுனில் ஜோஷியும் இப்பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
இருப்பினும், இந்தியர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் பிசிசிஐ உள்ள நிலையில், பீல்டிங் கோச் பதவிக்கு மட்டும், அந்த அழுத்தத்தைத் தளர்த்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஏனெனல், பீல்டிங் கோச் பதவிக்கு விண்ணப்பித்திருப்பது ஜாண்டி ரோட்ஸ்.
இந்த நேர்காணல் 3 அல்லது 4 நாட்களில் நிறைவு பெற்று, அதன் பிறகு புதிய பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்த முறையான அறிக்கை வெளியிடப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.