இந்தியா vs இங்கிலாந்து இறுதி டி20 போட்டி: கோப்பையைக் கைப்பற்றி அசத்திய இந்தியா!

சிறிய எல்லைகள் கொண்ட மைதானம் என்பதால் இரு அணி வீரர்களும் பேட்டிங்கில் வெளுத்து வாங்கினர். 

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

மாலை 06.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், இந்திய கேப்டன் கோலி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன.  குல்தீப் யாதவிற்கு பதிலாக தீபக் சாஹரும், புவனேஷ் குமாருக்கு பதிலாக சித்தார்த் கவுலும் அணியில் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் நாம் முன்பே சொன்னது போல, ஜோ ரூட் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

மேலும் படிக்க – இந்திய அணியின் தொடர் உலக சாதனையை முறியடிக்குமா இங்கிலாந்து?

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 31 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். பட்லர் 34 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 30 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா நான்கு ஓவர்கள் வீசி, 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், தவான் 5 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 19 ரன்னில் அவுட்டானாலும், ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடினார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் விராட் கம்பெனி கொடுக்க, சிக்ஸர்கள் பவுண்டரிகள் என விளாசினார் ரோஹித். அரைசதத்தை கடந்த ரோஹித், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், கோலி 43 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா களமிறங்கி அவரும் அதிரடி காட்டினார். இறுதியில், 56 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உதவியுடன் சதம் விளாசினார் ரோஹித். ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 33 ரன்களை குவிக்க, இந்திய அணி 18.4வது ஓவரிலேயே, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் எடுத்து வென்றது.

இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் டி20 கோப்பையை வென்று அசத்தியுள்ளது டீம் இந்தியா!.

×Close
×Close