India vs England, 5th Test, Dharamsala: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (மார்ச் -7 ஆம் தேதி) காலை 9.30 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டி இந்திய வீரர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு 100-வது சர்வதேச டெஸ்டாக அமைந்தது.
முதல் நாள் ஆட்டம்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடியது. இங்கிலாந்து அணியில் சாக் கிராலி - பென் டக்கெட் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 4 பவுண்டரியை விரட்டிய பென் டக்கெட் 27 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த ஒல்லி போப் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனிடையே சிறப்பாக விளையாடி வந்த வந்த தொடக்க வீரர் சாக் கிராலி அரைசதம் அடித்தார். அவர் 108 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் வந்த வீரர்களில் ஜானி பேர்ஸ்டோ 29 ரன்னுக்கும், ஜோ ரூட் 26 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (0) விக்கெட்டை கைப்பற்றியதுடன் சுழலில் மிரட்டி வந்த குலதீப் தனது 5வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தொடர்ந்து வந்த டாம் ஹார்ட்லி 6 ரன்னுக்கும், மார்க் வூட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
களத்தில் சில ஓவர்கள் தாக்குப்பிடித்த பென் ஃபோக்ஸ் - சோயிப் பஷீர் ஜோடியில், ஃபோக்ஸ் 24 ரன்னிலும், அடுத்து வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 11 ரன்களுடன் சோயிப் பஷீர் இருக்க இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. மிகச்சிறப்பாக பந்துவீசிய இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 10 விக்கெட்டையும் வீழ்த்தியது சுழற்பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பேட்டிங்
இதனையடுத்து, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடியது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கி அதிரடியாக மட்டையை சுழற்றினார்கள். இந்த ஜோடியில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த கில் கேப்டன் ரோகித்துடன் ஜோடி அமைத்தார்.
இந்த ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ரோகித் 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் இருக்க முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை விட 83 ரன்கள் பின்னிலையில் இருந்தது.
2ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. களத்தில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடி மளமளவென ரன்களை எடுத்து வந்தனர். இதில் அரைசதத்தை கடந்திருந்த கேப்டன் ரோகித் சர்மா 1000 ரன்களை கடந்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
தொடர்ந்து சிறப்பாக மட்டையை சுழற்றிய இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் 154 பந்துகளில் சதம் விளாசி தனது 12வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதேபோல், அவருடன் முனையில் இருந்த கில் 137 பந்துகளில் சதம் விளாசி தனது 4வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இருவரும் 171 ரன்கள் குவித்த நிலையில், அவர்களின் பார்ட்னர்ஷிப்பை சோயப் பஷீர் முடிவுக்கு கொண்டு வந்தார்.
சோயப் பஷீர் வீசிய 61.1 ஓவரில், 162 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்த ரோகித் அவுட் ஆனார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய அடுத்த ஓவரில் 150 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் எடுத்த கில் அவுட் ஆனார். இவர்களைத் தொடர்ந்து களம் புகுந்த தேவ்தத் பாடிக்கல் - சர்பராஸ் கான் ஜோடியும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர்.
60 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து சர்பராஸ் கான் அவுட் ஆனார். அறிமுக வீரராக களமாடி அரைசதம் விளாசி அசத்திய தேவ்தத் பாடிக்கல் 103 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த வீரர்களில், ரவீந்திர ஜடேஜா மற்றும் துருவ் ஜூரல் தலா 15 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமல் டக் -அவுட் ஆகி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து வந்த குல்தீப் யாதவ் - ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து தலா 2 பவுண்டரிகளை விரட்டினர். குல்தீப் 27 ரன்னுடனும், பும்ரா 17 ரன்னுடனும் களத்தில் இருக்க, 2ம் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 120 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலையில் இருந்தனர்.
3ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை 3ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் - ஜஸ்பிரித் பும்ரா ஜோடி அசத்தலாக மட்டையை சுழற்ற தொடங்கிய நிலையில், முதல் 10 நிமிடங்களே தாக்குப்பிடித்து குல்தீப் 30 ரன்னுக்கும், பும்ரா 20 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளையும், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து பேட்டிங்
இதனையடுத்து, இங்கிலாந்து அணி அதன் 2வது இன்னிங்சில் ஆடியது. அந்த அணியில் சாக் கிராலி - பென் டக்கெட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த பென் டக்கெட் 2 ரன்னிலும், சாக் கிராலி ரன் எதுவும் எடுக்காமலும் அஸ்வின் சுழலில் சிக்கி வெளியேறினர்.
இதன்பிறகு களத்தில் இருந்த ஒல்லி போப் - ஜோ ரூட் ஜோடியில், 3 பவுண்டரியை விரட்டி 19 ரன் எடுத்த ஒல்லி போப் விக்கெட்டை அஸ்வின் சுருட்டினார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ ஜோ ரூட் உடன் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில், அவர் 39 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அஸ்வின் சுழலில் சிக்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னுக்கு நடையைக் கட்டினார்.
மதிய உணவு இடைவேளையின் போது, ரூட் 34 ரன்களுடன் களத்தில் இருக்க, 22.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பு 103 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 156 ரன்கள் பின்னிலையில் இருந்தது. இதன்பின்னர், களத்தில் இருந்த ஜோ ரூட் உடன் ஜோடி அமைத்த பென் ஃபோக்ஸ் 8 ரன்னுக்கும், டாம் ஹார்ட்லி 20 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்களில் மார்க் வூட் ரன் எதுவும் எடுக்காமலும், சோயிப் பஷீர் 13 ரன்னுக்கும் அவுட் ஆகினர்.
களத்தில் தனிஒருவனாக போராடி அரைசதம் அடித்திருந்த ஜோ ரூட் 84 ரன்கள் எடுத்த நிலையில், குலதீப் சுழலில் சிக்கி அவுட் ஆனார். இறுதியில், 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும், தொடரை 4-1 என்கிற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி தரப்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் 5 விக்கெட்டையும், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டத்தின் நாயகன் விருதை குல்தீப் யாதவும், தொடரின் நாயகன் விருதை யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் வென்றனர்.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், தேவ்தத் பாடிக்கல், ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
இங்கிலாந்து அணி: சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இந்த தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் அசாத்தியமான முன்னிலை பெற்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க, மற்றொரு வெற்றியுடன் தொடரை முடிக்க குறி வைக்கும். இந்தியா 8 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை விட முன்னிலை பெற்று, 64.58 சதவீத புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து 8வது இடத்தில் உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England Live Score, 5th Test Day 3
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG 5th Test Day 2 Live Score
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England Live Score, 5th Test
இதையும் படியுங்கள்: அதிவேக 50 விக்கெட்: சாதனை படைத்த குல்தீப்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.