India Vs New Zealand : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பும்ரா வீசிய முதல் பந்திலேயே வாட்லிங் (14 ரன்) விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டிம் சவுதி 6 ரன்னில் வெளியேற்றப்பட்டார். கைல் ஜாமிசன், இந்திய பந்து வீச்சை பிரித்து மேய்ந்தார். முகமது ஷமியின் ஓவர்களில் 2 சிக்சர், அஸ்வினின் ஒரே ஓவரில் 2 பிரமாதமான சிக்சர் என்று அதிரடி வேட்டை நடத்தி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். கிராண்ட்ஹோமுடன் இணைந்த கைல் ஜேமிசன் அதிரடியாக விளையாடி, நியூசிலாந்தின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இருவரும் இணைந்து 71 ரன்கள் குவித்தனர்.
10-வது விக்கெட்டுக்கு வந்த டிரென்ட் பவுல்ட்டும் பந்துகளை விளாசியதால், நியூசிலாந்தின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட விஞ்சியது. பவுல்ட் 24 பந்துகளில் 38 ரன்கள் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 100.2 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
Advertisment
Advertisement
இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் விளையாடினர்.
நியூசிலாந்து பயணத்தில் இந்த இன்னிங்ஸும் விராட் கோலிக்கு ஏமாற்றத்திலேயே முடிந்தது. அவர் 19 ரன்களில் (43 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆனார். பின்னர் 4-வது நாள் ஆட்டத்தினை துவங்கிய இந்திய அணியில் ரஹானே 29 ரன்களும், விஹாரி 15 ரன்களும், ஆர். அஸ்வின் 4 ரன்களும், இஷாந்த் சர்மா 12 ரன்களும், ரிஷாப் பண்ட் 25 ரன்களும், பும்ரா (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். முடிவில் முகமது சமி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 81 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், கிராண்ட் ஹோம் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆகையால் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.