worldcup 2023 | India vs Pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 12வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Pakistan Live Score, World Cup 2023
டாஸ் வென்ற இந்தியா பவுலிங்; பாக்., முதலில் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் - இமாம்-உல்-ஹக் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியை உடைக்க இந்திய பவுலர்கள் முதல் 7 ஓவர்களாக போராடிய நிலையில், 7.6 -வது ஓவரில் சிராஜ் தனது துல்லியமான பந்துவீச்சால் அப்துல்லா ஷபீக்கை எல்.பி.டபிள்யூ எடுத்தார். 3 பவுண்டரிகளை விரட்டிய ஷபீக் 20 ரன்னில் நடையைக் கட்டினார்.
கேப்டன் பாபர் அசாம் உடன் ஜோடியில் இருந்த தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் ஹர்திக் பாண்டியா வீசிய 12.3 வது ஓவரில் கீப்பர் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாபர் அசாம் 57 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், அவர் சிராஜ் வீசிய 29.4 வது ஓவரில் போல்ட்-அவுட் ஆகி வெளியேறினார்.
களத்தில் இருந்த முகமது ரிஸ்வானுடன் சவுத் ஷகீல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்த ஜோடிக்கு குலதீப் சுழல் வலை விரித்த நிலையில், அவர் வீசிய 32.2வது பந்தில் சவுத் ஷகீல் (6 ரன்) எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த இப்திகார் அகமது (4 ரன்) குலதீப் வீசிய அதே ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட் சரிவு நடக்க மறுமுனையில் 48 ரன்னுடன் தாக்குப்பிடித்து வந்த முகமது ரிஸ்வான் பும்ரா பந்துவீச்சில் (33.6) போல்ட்-அவுட் ஆகி வெளியேறினார். இதன்பின்னர் களத்தில் இருந்த முகமது நவாஸ் - ஷதாப் கான் ஜோடியில் ஷதாப் கானை போல்ட் அவுட் எடுத்து மிரட்டினார் பும்ரா. முகமது நவாஸ் ஹர்திக் பாண்டியா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களில் ஹசன் அலி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்த பாகிஸ்தானின் பேட்டிங் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரில் ஷர்துல் தாக்கூரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். இருப்பினும் 4 பவுண்டரிகளுடன் 16 ரன்களில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி ரோகித்க்கு கம்பெனி கொடுத்தார். அதிரடியை தொடர்ந்த ரோகித் 36 பந்துகளில் அரை சதம் விளாசினார். இந்திய அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது.
ஒருமுனையில் ஸ்ரேயாஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ஆடிய ரோகித் பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கினார். சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி ரன்களை குவித்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.
இருப்பினும் சிறிது நேரத்தில் ரோகித் அவுட் ஆனார். அவர் 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். அடுத்ததாக ஸ்ரேயாஸ் உடன் ராகுல் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். பாகிஸ்தான் பவுலர்கள் விக்கெட் வீழ்த்த கடுமையாக முயற்சி எடுத்தனர். ஆனால், சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அரை சதம் அடித்தார். ராகுல் 19 ரன்கள் எடுத்திருந்தப்போது இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது. ஸ்ரேயாஸ் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்களையும், ஹசன் அலி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்த வெற்றி மூலம், இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கூடுதலாக ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாறையும் தக்கவைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: 36 ரன்களில் 8 விக்கெட் அவுட்: பாகிஸ்தான் பேட்டிங் தடம் புரண்டது எப்படி?
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
சிறப்பு நிகழ்ச்சி நேரலை இல்லை
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக நடைபெறும் சிறப்பு இசை நிகழ்ச்சி நேரலை செய்யப்படாது என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. மைதானத்திற்குள் இருப்பவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நேரலையில் ஒளிபரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் ஆடுகளம் எப்படி?
அகமதாபாத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இரவில் பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். வானிலையை பொறுத்தவரை, மழை பெய்ய வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.