தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இளம் இந்திய வீரர்கள் 4 கேட்ச்களை கோட்டைவிட்டது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. மழைக் காரணமாக போட்டி இரண்டு அணிகளுக்கும் தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இதில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி 250 ரன்களை இலக்காகக் கொண்டு தற்போது விளையாடி வருகிறது.
இதையும் படியுங்கள்: யாரப்பா அது? பருப்பு சோறுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இந்திய வீரர்… போட்டு உடைத்த கோலி!
இந்தநிலையில், இந்தப்போட்டியில் இந்திய வீரர்கள் மூன்று முக்கிய கேட்ச்களை கோட்டை விட்டனர். தென்னாப்பிரிக்கா அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்து விளையாடி வந்த நிலையில், ஜேன்மேன் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர் சுப்மன் கில் தவறவிட்டார். சுமாராக விளையாடிய ஜேன்மேன் பின்னர் 22 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்ததாக அரைசதம் அடித்து அதிரடியாக ஆடி வந்த டேவிட் மில்லர் 51 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ருதுராஜ் தவறவிட்டார். அதன்பின்னர் மில்லர் கூடுதலாக 24 ரன்கள் சேர்த்து, மொத்தம் 75 ரன்கள் அடித்தார்.
அடுத்து மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த கிளாசன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிராஜ் கோட்டை விட்டார். மேலே தூக்கி அடிக்கப்பட்ட பந்தை எளிதாக பிடிக்க வாய்ப்பு இருந்தும் சிராஜ் கோட்டை விட்டார்.
அடுத்த பந்திலே கிடைத்த மற்றொரு கேட்ச் வாய்ப்பும் மீண்டும் நழுவியது. இம்முறை பந்தை காற்றில் பறக்க விட்டவர் டேவிட் மில்லர். எளிதான வாய்ப்பை இம்முறை தவறவிட்டவர் ரவி பிஷ்னோய்.
ஒரே போட்டியில் 4 கேட்ச் வாய்ப்புகளை இந்திய அணி வீணடித்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தென்னாப்பிரிக்க தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil