ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று(ஜூன்.9) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
பும்ரா, புவனேஷ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
மேலும் படிக்க - உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது எப்படி? ஸ்பெஷல் ஹைலைட்ஸ் தருணங்கள் இதோ
ரோஹித் ஷர்மா 23 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் 4-வது வீரராக இணைந்தார். அதே சமயம் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்திருக்கிறார். 37 இன்னிங்ஸில் 2,037 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000+ ஒருநாள் ரன்கள் அடித்த வீரர்கள்:
3077 - சச்சின் (Avg 44.59)
2262 - ஹெய்ன்ஸ் (40.39)
2187 - விவியன் ரிச்சர்ட்ஸ் (50.86)
2037 - ரோஹித் ஷர்மா (62.68)
ஐ.சி.சி. நடத்தும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் டெண்டுல்கர், கங்குலி (தலா 7 சதம்) முதலிடத்தில் உள்ளனர். 2-வது இடத்தை ரிக்கி பாண்டிங், சங்கக்கரா ஆகியோருடன் ஷிகர் தவான் (தலா 6 சதம்) பகிர்ந்துள்ளார். தவான் உலக கோப்பையில் 3 சதமும், சாம்பியன்ஸ் கோப்பையில் 3 சதமும் அடித்துள்ளார்.
சாதனைகள் ஒருபுறமிருக்க, இப்போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது, இந்திய ரசிகர்கள் சிலர், ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தை கேலி செய்யும் விதமாக கோஷமிட்டனர். அவரது Ball Tampering பிரச்சனையை மையப்படுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
இதைப் பார்த்து கடுப்பான கேப்டன் கோலி, ரசிகர்களிடம் இது போன்று செய்ய வேண்டும் என்றும், ஸ்மித்தை உற்சாகப்படுத்தும் விதமாக கைத் தட்டுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
இவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருத்த ஸ்மித், கோலிக்கு கைக் கொடுத்து, தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக தட்டிக் கொடுத்தார்.
இச்சம்பவம் ரசிகர்கள், விமர்சகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஆஸி., ஊடகங்கள் கோலியின் ஸ்போர்ட்மேன்ஷிப்பை பெரிதும் பாராட்டி வருகின்றன.