பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான இன்சமாம்-உல் -ஹாக் இந்திய லெஜண்ட் சுனில் கவாஸ்கரைப் பாராட்டியுள்ளார். உலக கிரிக்கெட்டில் முதன்முதலில் 10,000 டெஸ்ட் ரன்கள் எடுத்து உலகிற்கு வழி காட்டியது கவாஸ்கர் தான் என்று இன்சமாம் கூறியுள்ளார்.
1992 முதல் 2008 வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இன்சமாம், தனது யூடியூப் சேனல் வீடியோவில், ”உலக கிரிக்கெட்டில் பல சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்தனை ரன்களை குவித்த சன்னி பாய் (சுனில் கவாஸ்கர்) எப்போதும் தனித்து நிற்பார். நான் அவருடன் விளையாட விரும்பினேன். 10,000 டெஸ்ட் ரன்கள் எடுத்த முதல் மனிதர் இவர். அவர் நம்மில் பலருக்கு அப்பால் சிந்திக்கவும் விளையாட்டில் சிறந்து விளங்கவும் உதவினார்.
கைக் கொடுக்கும் கை: லுங்கி இங்கிடிக்கு ஆம்லா ‘பலத்த’ ஆதரவு
“அவர் ஒரு திறமையான ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரை மதிக்கிறார்கள். பிட்சுகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லாத சூழலில் கூட, அவர் 10,000 ரன்கள் எடுத்தார், கிரிக்கெட் பேட்களும் கூட அப்போது அவ்வளவு சிறப்பாக இல்லை. உங்களிடம் இருந்ததெல்லாம் உங்கள் டைமிங்கும், திறமையும் மட்டுமே. அந்த கடினமான பேட்டிங் நிலைமைகளில் அவரது 10,000 ரன்கள் என்பது, நவீன கால கிரிக்கெட்டின் 15000- 16000 ரன்களுக்கு சமம் என்று நான் நம்புகிறேன்.
சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987 வரை கிரிக்கெட் விளையாடினார். 125 டெஸ்ட் போட்டிகளில், 51.12 ஆவரேஜுடன் 10122 ரன்கள் எடுத்தார். இதில் 34 சதங்கள் அடங்கும். அந்த நேரத்தில் இது மாபெரும் சாதனையாக இருந்தது.
1992 இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், இன்சமாம் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் பெரும் சிக்கல்களை சந்தித்தார். இதுகுறித்து நினைவு கூர்ந்த அவர், “1992 உலகக் கோப்பைக்குப் பிறகு நான் இங்கிலாந்து சென்றேன். எனக்கு ஒரு சிறந்த உலகக் கோப்பைஅமைந்தது, ஆனால் நான் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக மோசமாக விளையாடினேன். நான் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தேன், பின்னர் நான் ஒரு தொண்டு நிறுவன போட்டியில் சன்னி பாயை சந்தித்தேன், ஷார்ட் பந்துகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று கேட்டேன்.
‘ஒரு வீரரைப் பார்த்தால் மட்டும் பயந்து நடுங்குவேன்’ – கபில் தேவ்
அவர் ஐந்தே நொடிகளில் எனக்கான தீர்வை சொல்லிவிட்டு, ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வது பற்றி நான் நினைப்பதை நிறுத்தும் வகையில், வலைப்பயிற்சிக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளச் சொன்னார். நான் அதைப் பின்பற்றினேன், அதன்பிறகு, 1992 முதல் 2008 வரை, ஷார்ட் பந்துகளை விளையாடுவது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய பலமாக இருந்தது”.
1992 முதல் 2008 வரை இன்சமாம் 120 டெஸ்ட் மற்றும் 378 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் அவர் 8830 டெஸ்ட் மற்றும் 11,739 ஒருநாள் ரன்களை குவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil