ஐ.பி.எல் சீசனின் 43 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படியுங்கள்: ஜடேஜா ஆட்டம் மோசம்; குத்திக் காட்டினாரா தோனி? சி.எஸ்.கே வீக்னஸ் அம்பலம்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இரு அணி விளையாடும் வீரர்களின் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, கர்ண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர்
பெங்களூரு பேட்டிங்
பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டூ பிளசிஸ் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். லக்னோ சிறப்பாக பந்துவீசியதால் இந்த ஜோடி முதல் விக்கெட்க்கு 8.6 ஓவர்களில் 62 ரன்களே எடுத்தது. கோலி 31 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அனுஜ் ராவத் 9 ரன்களிலும், மேக்ஸ்வெல் 4 ரன்களிலும், பிரபுதேசாய் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஆடி வந்த டூ பிளசிஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லோம்ரோர் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ஹசரங்கா களமிறங்கிய சிறிது நேரத்தில் தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதற்கிடையில் மழைக் குறுக்கீட்டால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. அடுத்து வந்த கரண் சர்மா 2 ரன்களிலும், சிராஜ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். அடுத்ததாக ஹேசல்வுட் களமிறங்கி 1 ரன் அடித்த நிலையில், பெங்களூரு அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹசரங்கா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்களையும், ரவி பிஷ்னோய் மற்றும் அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்களையும், கிருஷ்ணப்பா கவுதம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
லக்னோ பேட்டிங்
லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மேயர்ஸ் மற்றும் படோனி களமிறங்கினர். மேயர்ஸ் 2 ஆவது பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்து அதிரடியாக 3 பவுண்டரிகள் விளாசிய க்ருனால் பாண்டியா 14 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக தீபக் ஹூடா களமிறங்கிய நிலையில், படோனி 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கி 1 சிக்ஸ் அடித்தார். இந்தநிலையில் மறுமுனையில் ஆடிய ஹூடா 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நிக்லோலஸ் பூரன் ஒரு சிக்சருடன் 9 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதனால் லக்னோ அணி 38 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து தடுமாறியது.
அடுத்ததாக ஸ்டாய்னிஸ் உடன் கிருஷ்ணப்பா கவுதம் ஜோடி சேர்ந்தார். கவுதம் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். அவர் 1 சிக்சர் 2 பவுண்டரிகள் விளாசினார். இந்தநிலையில் மறுமுனையில் ஆடி வந்த ஸ்டாய்னிஸ் 13 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக ரவி பிஷ்னோய் களமிறங்கிய நிலையில் கவுதம் 23 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக அமித் மிஸ்ரா களமிறங்கினார். இந்த நிலையில் பிஷ்னோய் 5 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக நவீன் களமிறங்கினார். மிஸ்ராவும் நவீனும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.
இந்தநிலையில் நவீன் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து காயம் காரணமாக தொடக்கத்தில் களமிறங்காமல் இருந்த ராகுல் களமிறங்கினார். இந்தநிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்துகளில் ரன் எடுக்காத மிஸ்ரா 3 ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 4 ஆவது பந்தில் 1 ரன் எடுத்தார். 5ஆவது பந்தை தூக்கி அடித்த ராகுல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால் லக்னோ அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியுள்ளது. பெங்களூரு அணியில் ஹேசல்வுட், கரண் சர்மா தலா 2 விக்கெட்களையும், சிராஜ், மேக்ஸ்வெல், ஹசரங்கா, ஹர்சல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.