ஐ.பி.எல் போட்டிகளில் இன்றைய 2 போட்டிகளில் முதல் ஆட்டத்தில், கடந்த சீசனின் இறுதிப் போட்டியாளர்களான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராயல்ஸ், கடந்த சீசனில் பர்பிள் நிற தொப்பி (அதிக விக்கெட் எடுத்தவர்) மற்றும் ஆரஞ்சு நிற தொப்பி (அதிக ரன் எடுத்தவர்) ஆகிய இரண்டு வீரர்களால் நிரம்பி வழிகிறது.
இதையும் படியுங்கள்: LSG vs DC Live Score: மார்க் வுட் அபாரம் : 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அசத்தல் வெற்றி
மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஐ.பி.எல்.,லின் முந்தைய இரண்டு சீசன்களில் தோல்விகளுக்குப் பிறகு மீண்டு எழ முயற்சித்து வருகிறது. இந்த ஆண்டு, தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் ஐடன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார். ஏனெனில் கேப்டனாக நியமிக்கப்பட்ட எய்டன் மார்க்ரம் நெதர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய பிறகு ஏப்ரல் 3 ஆம் தேதி தான் ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்குவார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இரு அணி விளையாடும் வீரர்களின் விவரம்:
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), உம்ரான் மாலிக், அடில் ரஷித், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), டி நடராஜன், ஃபசல்ஹாக் ஃபரூக்கி
ராஜஸ்தான் பேட்டிங்
ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். ஒருபுறம் பட்லர் சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாச, மறுமுனையில் ஆடிய ஜெய்ஷ்வால் பவுண்டரிகளாக அடித்தார். பவர்ப்ளேயில் இருவரும் ஹைதராபாத் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 5.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 85 ரன்களை எடுத்திருந்தப்போது, தனது முதல் விக்கெட்டை இழந்தது. பட்லர் 22 பந்துகளில் 54 ரன்கள் விளாசி வெளியேறினார்.
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் சிக்ஸர்களாக விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் அரை சதம் கடந்த நிலையில், அவுட் ஆனார். 37 பந்துகளில் 54 ரன்கள் அடித்த ஜெய்ஷ்வால், 9 பவுண்டரிகளை அடித்தார். இருவரையும் பரூக்கி வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 2 ரன்களில் வெளியேறினார். உம்ரான் மாலிக் அவரை போல்டாக்கினார். அடுத்து வந்த ரியான் பராக் 7 ரன்களில் வீழ்ந்தார். அவர் நடராஜன் பந்தில் பரூக்கியிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து வந்த ஹெட்மயர் கம்பெனி கொடுக்க, மறுமுனையில் ஆடிவந்த சஞ்சு சாம்சன் பவுண்டரிகளாக விளாசினார். 19 ஆவது ஓவரில் அதிரடியாக ஆடிவந்த சாம்சன் அவுட் ஆனார். அவர் நடராஜன் பந்தில் அபிஷேக்கிடம் கேட்ச் கொடுத்தார். 32 பந்துகளைச் சந்தித்த சாம்சன் 55 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய அஷ்வின் 1 ரன் எடுத்த நிலையில், ராஜஸ்தான் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 22 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் பரூக்கி மற்றும் நடராஜன் தலா 2 விக்கெட்களையும், உம்ரான் மாலிக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஹைதராபாத் பேட்டிங்
ஹைதராபாத் அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக இருந்தது. 3ஆவது பந்திலேயே அபிஷேக்கை போல்ட் வெளியேற்றினார். முதல் ஓவரின் 5ஆவது பந்தில் அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி டக் அவுட் ஆகி வெளியேறினார். அவர் போல்ட் பந்தில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்தார். இதனால் ஹைதராபாத் அணி ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
மறுமுனையில் ஆடிய துவக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் விக்கெட் இழப்பை தடுக்கும் வகையில் பொறுமையாக விளையாடினார். இருப்பினும் சாஹல் அவரை 13 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னிலும், க்ளென் பிலிப்ஸ் 8 ரன்களிலும் வெளியேறினர். அப்துல் சமத் இறங்கி கம்பெனி கொடுத்த வந்த நிலையில், அதுவரை நிதானமாக ஆடி வந்த மயங்க் அகர்வால் 27 ரன்களில் அவுட் ஆனார். இதனால் ஹைதராபாத் அணி 52 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்ததாக சமத் உடன் அடில் ரஷித் ஜோடி சேர்ந்தார். இருவரும் சற்று அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இருப்பினும் 18 ரன்களில் அடில் ரஷித் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 8 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து உள்ளே வந்த உம்ரான் மாலிக் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடினார். அவர் 2 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி அடித்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிந்ததால் ஹைதராபாத் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சாஹல் 4 விக்கெட்களையும், போல்ட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.