முதல் முறையாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோபப்படுவதை நான் கண்டேன்
2008ல் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக இரண்டு முறை தவறு செய்துவிட்டேன் என்ற முன்னாள் அம்பயர் ஸ்டீவ் பக்னர் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள இர்பான் பதான், மொத்தம் 7 தவறுகளை செய்ததை மன்னிக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Advertisment
சிட்னி டெஸ்ட்டின் கதைச் சுருக்கம்:
2008-ம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய அணி எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக விளையாடியது. ஆனால், சிட்னி டெஸ்ட்டில் அம்பயர்களின் மோசமான தீர்ப்புகளால், ஆஸி., வெற்றிப் பெறாமல் போயிருந்தால், இந்தியா தட்டித் தூக்கியிருக்கும். ஆஸ்திரேலியாவில் தொடரை அனில் கும்ப்ளே 2-1 என்று கைப்பற்றியிருப்பார்.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு கிட்டத்தட்ட 8 அவுட்கள் தரப்படவில்லை. கடைசி நாளில் கங்குலி, டிராவிடுக்கு மோசமாக தீர்ப்பு கொடுக்கப்பட்டதால்,இந்தியா தோற்றது. கங்குலிக்கு ஆஸி. கேப்டன் பாண்டிங்கே அவுட் கொடுத்தார். இதை ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தான் 12 ஆண்டுகள் கழித்து நடுவர் ஸ்டீவ் பக்னர் சமீபத்தில் தன் தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
“நான் 2008 சிட்னி டெஸ்ட் போட்டியில் 2 தவறுகள் செய்தேன்.
முதல் தவறு இந்தியா நன்றாக ஆடிக்கொண்டிருந்த போது ஆஸி. பேட்ஸ்மெனுக்கு அவுட் கொடுக்காமல் அவர் சதம் எடுத்தது. 5ம் நாளில் செய்த மற்ற தவறு. இது இந்தியாவுக்கு போட்டியையே பறித்தது.
இருந்தாலும் 5 நாட்களில் இரண்டு தவறுகள்தான். நான் மட்டும்தான் முதன் முதலில் டெஸ்ட்டில் தவறு இழைத்தேனா? ஆனாலும் இந்த 2 தவறுகள் என்னை இன்றும் என்னை அச்சுறுத்தி வருகிறது” என்றார்.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ரிக்கி பாண்டிங் இருவருக்கும் அவுட் கொடுக்காமல் விட்டதை மறுத்தார் ஸ்டீவ் பக்னர்.
பக்னரின் இந்த தன்னிலை விளக்கத்தை இப்போதுதான் பதான் பார்த்தாரோ என்னவோ, பொங்கி தீர்த்துவிட்டார்.
“சிட்னி டெஸ்ட் போட்டியில், வெறும் ஒரு தவறு மட்டும் நடக்கவில்லை. ஏழு தவறான தீர்ப்புகள் எங்களுக்கு தோல்வியைக் கொடுத்தன. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விளையாடும் போது, அவருக்கு அவுட் கொடுக்கப்படவே இல்லை. அவர் கிட்டத்தட்ட மூன்று முறை அவுட்டானார், எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், நடுவர் அவருக்கு அவுட் கொடுக்கவேயில்லை.
"அவர் தான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நாங்கள் 122 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றோம். ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு எதிரான ஒரு சரியான அவுட் கொடுக்கப்பட்டிருந்தால், நாங்கள் அந்த போட்டியை எளிதாக வென்றிருப்போம்.
“முதல் முறையாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோபப்படுவதை நான் கண்டேன். சரி. இதுபோன்று நடப்பது சகஜம் என்று எடுத்துக் கொள்வோம் என்றாலும், ஏழு தவறான தீர்ப்பை எப்படி ஏற்றுக் கொள்வது? நீங்கள் என்னை விளையாடுகிறீர்களா? இதை எங்களால் என்றுமே ஜீரணிக்க முடியாது" என்று காட்டமாக முடித்தார் பதான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil