2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசி. க்கு இன்னும் 332 ரன்கள் தேவை
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
இந்நிலையில் 2வது டெஸ்ட் ஆட்டம் கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இறுதியில் அந்த அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கியது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. காலின் டி கிராண்ட்கோம் 120 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்து 211 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் ஒருமுனையில் தென் ஆப்பிரிக்க அணியின் கெய்ல் வேரின்னே நின்று விளையாடினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 9 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்திருந்த போது தென்னாப்ரிக்க அணி டிக்ளேர் செய்தது. கெய்ல் வேரின்னே 136 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
426 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 6 விக்கெட்கள் மட்டுமே மீதம் இருக்க நியூசிலாந்து அணி வெற்றி பெற 332 ரன்கள் தேவைப்படுகிறது.
மகளிர் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை தலையில் தாக்கிய பந்து
மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறவுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 6ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இந்த நிலையில் இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்க வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் வீசிய பந்து மந்தனாவின் தலையில் தாக்கியது. களத்திற்குள் உடனடியாக வந்த இந்திய அணியின் மருத்துவ குழுவினர் மந்தனாவை பரிசோதித்தனர். பின்னர் அவர் ஆட்டமிழக்காமல் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர் மருத்துவ குழு அவரை பரிசோதித்தனர். இந்த நிலையில் அவர் போட்டிகளில் பங்கேற்க முழு உடல் தகுதியோடு இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் சதம் விளாசினார். இதனிடையே, இன்று வங்கதேசம்-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
டாஸ் ஜெயித்த வங்கதேச அணி, பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.,
கோலியின் சாதனையை முறியடித்த இந்திய இளம் வீரர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தர்மசாலாவில் நேற்று நடந்த 3-வது ஆட்டத்திலும் வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் உறுதியுடன் நின்று 73 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற உதவினார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இவர் அரைசதம் கடந்து இருந்தார். நேற்று நடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இவர் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்ரேயஸ் அய்யர். அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் அய்யர் 204 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் விராட் கோலி 199 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
ஸ்ரேயஸ் அய்யரை சக வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
புரோ ஹாக்கி லீக்: இந்தியா தோல்வி
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற புரோ ஹாக்கி லீக் ஆட்டத்தில் ஸ்பெயினிடம் 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது இந்தியா.
3-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.
புவனேஸ்வர் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 3-5 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இதனிடையே, மகளிர் பிரிவு ஆட்டத்திலும் இந்தியா தோல்வி அடைந்தது
ஸ்பெயின் மகளிர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணியை வென்றது.
ஐ.எஸ்.எல்.: மோகன் பகான் அணி வெற்றி
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.
IND vs SL : டி20 தொடரை ஒயிட் வாஷ் செய்த இந்தியா; 3-வது போட்டியிலும் இலங்கை தோல்வி
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி சார்பில் லிஸ்டன் கோலகோ ஆட்டத்தின் 45+2 வது நிமிடத்திலும் மன்வீர் சிங் 85 ஆவது நிமிடத்திலும் கோல் பதிவு செய்தனர்.
பெங்களூரு அணி ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. இதையடுத்து ஏடிகே மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.