Mahesh Pithiya says dismissed Steve Smith 6 times in first day itself and Ashwin wished me, 'பயிற்சியின் முதல் நாளே 5- 6 முறை ஸ்மித்தை அவுட் செய்தேன்': டூப்ளிகேட் அஷ்வின் பேட்டி | Indian Express Tamil

‘பயிற்சியின் முதல் நாளே 5- 6 முறை ஸ்மித்தை அவுட் செய்தேன்’: டூப்ளிகேட் அஷ்வின் பேட்டி

ஆஸ்திரேலியா வலைப் பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து வீசுவதே எனது வேலை. அவர் என்னிடம் குறிப்பிட்டு எந்த முறையிலும் பந்து வீசச் சொல்லவில்லை – மகேஷ் பித்தியா

‘பயிற்சியின் முதல் நாளே 5- 6 முறை ஸ்மித்தை அவுட் செய்தேன்’: டூப்ளிகேட் அஷ்வின் பேட்டி
மகேஷ் பித்தியா, வலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பந்து வீசியது மற்றும் அஸ்வின் வாழ்த்தியது குறித்து பேசியுள்ளார்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் டிராபி, போட்டிக்கு முன்னதாகவே நாளுக்கு நாள் விறுவிறுப்பை அடைந்து வருகிறது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க ஆஸ்திரேலியா வீரர்கள் கடும் பயிற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பயிற்சிக்கு உதவிய டூப்ளிகேட் அஸ்வின், பயிற்சியின் முதல் நாளிலே ஸ்மித்தை 6 முறை அவுட் ஆக்கினேன் என்று தெரிவித்துள்ளார்.

வியாழன் தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆஸ்திரேலியாவிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருப்பார். இதனைக் கருத்தில் கொண்டு அஸ்வினுக்கு எதிராக தங்களை சிறப்பாக ஆக்கிக் கொள்ள, ஆஸ்திரேலியா வீரர்கள் சுழலுக்கு உகந்த ஆடுகளங்களில் பயிற்சி செய்தனர். மேலும், உதவிக்காக ‘அஷ்வின்’ போல் பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை பந்து வீசச் சொல்லி பயிற்சி பெற்றனர்.

இதையும் படியுங்கள்: 4 ஸ்பின்னர்களை தயார் படுத்தும் இந்தியா: நாக்பூர் பிட்ச் யாருக்கு சாதகம்?

21 வயதான மகேஷ் பித்தியா, அஷ்வினுடன் ஒரு விசித்திரமான ஒற்றுமையைக் கொண்டுள்ளார், அவரது பந்துவீச்சு அஸ்வினை போல் இருக்கும், எனவே ஆஸ்திரேலியா ஏன் மகேஷை அவர்களின் பயிற்சி பந்துவீச்சாளர்களில் ஒருவராக ஆக்கியது என்பதில் ஆச்சரியமில்லை.

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் அணிகளின் பயிற்சி அமர்வுகளின் போது கடந்த ஒரு வாரமாக மகேஷ் பித்தியா, செவ்வாய்க்கிழமை தனது ரோல் மாடலை சந்தித்தபோது கனவு நனவாகும் தருணத்தை அனுபவித்தார்.

“முதல் நாளில் ஸ்மித்தை 5-6 முறை அவுட்டாக்கியிருந்தேன். இன்று என் கனவு நாயகனிடமிருந்து ஆசிர்வாதம் பெற்றேன். அவரைப் போல் பந்துவீச வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு. அவர் வலைக்குள் நுழையும் போது அவரைச் சந்தித்தபோது, ​​அவரது கால்களைத் தொட்டு வணங்கினேன் மற்றும் அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றேன். அவர் என்னைக் கட்டிப்பிடித்து, ஆஸ்திரேலியர்களுக்கு நான் எப்படி பந்து வீசுகிறேன் என்று கேட்டார். விராட் கோலியும் என்னைப் பார்த்து சிரித்து, கட்டைவிரலை உயர்த்தி, என்னை வாழ்த்தினார்” என்று மகேஷ் பித்தியா பி.டி.ஐ.,யிடம் கூறினார்.

டிசம்பரில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் வாங்காமல் போன மகேஷ் பித்தியா, பரோடாவின் ரஞ்சி டிராபி அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்துவதே தனது தற்போதைய இலக்கு என்று கூறினார். அவரது ரோல் மாடலான அஸ்வினைப் போலவே, மகேஷும் பல தந்திரங்களைக் கொண்டுள்ளார், மேலும் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் பிற ஆஸ்திரேலிய வீரர்களுடன் பயிற்சி பெற்றிருப்பது தனது வாழ்க்கையில் விளையாட்டை மாற்றியமைக்கும் அனுபவமாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார்.

“நான் கேரம் பந்து அல்லது தூஸ்ரா பந்து வீசுவதில்லை. என்னுடைய ஸ்டாக் பால் ஆஃப் ப்ரேக் மற்றும் நானே உருவாக்கிய மற்றொரு பந்து வீச்சு முறையில் சிறிது பேக்ஸ்பின் உள்ளது. ஆனால் நான் அதை ஒயிட்-பால் கிரிக்கெட்டில் வீசுகிறேன்,” என்று மகேஷ் பித்தியா சுட்டிக்காட்டினார்.

“ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து பணியாற்றுவது ஆச்சரியமாக உள்ளது. ஆஸ்திரேலியா வலைப் பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்து வீசுவதே எனது வேலை. அவர் என்னிடம் குறிப்பிட்டு எந்த முறையிலும் பந்து வீசச் சொல்லவில்லை,” என்று மகேஷ் பித்தியா கூறினார்.

நாதன் லியானிடமிருந்து சில மதிப்புமிக்க குறிப்புகளை மகேஷ் பித்தியா கற்றுக்கொண்டார். மேலும் டெல்லியில் இரண்டாவது டெஸ்ட் முடியும் வரை அவர் இருக்கும் வரை, இளம் சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் பித்தியா பல்வேறு ஆலோசனைகளை கற்றுக் கொள்ள விரும்புகிறார்.

“லியோன் முதலில் நான் பந்தைப் பிடிக்கும் விதத்தைக் காட்டும்படியும், என் விரல்களை உருட்டும்போது நான் என்ன செய்கிறேன் என்பதை விளக்கும்படியும் என்னிடம் கேட்டார். பிறகு நான் எப்படி பந்தில் அதிக ரிவ்ஸ் (சுழற்சி) பெறுவது மற்றும் எனது முன் கால் (இடது) எப்படி தரையிறங்க வேண்டும் என்பதை விளக்கினார். அவர் என்னிடம் சொன்னார். எனது திறமையில் நம்பிக்கை வைத்துள்ளேன். பிப்ரவரி 17 வரை நான் அணியுடன் இருக்கிறேன். இது எனது வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது” என்று மகேஷ் பித்தியா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Mahesh pithiya says dismissed steve smith 6 times in first day itself and ashwin wished me