MS Dhoni: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஒரு நாள் தொடரிலிருந்து இருந்து விரைவில் விலகக் கூடும் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இந்தியாவுக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனி, கடைசியாக கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடியவர்.
இது குறித்து முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்த சாஸ்திரி, “மகேந்திர சிங் தோனியுடன் நான் ஆலோசனை நடத்தினேன். குறிப்பிட்ட காலத்துக்கு அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் இடைவிடாது கலந்துகொண்டார் என்பது நமக்கு தெரியும். சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்றார். ஒரு நாள் தொடரிலிருந்தும் விரைவில் ஓய்வுபெறுவார். ஐபிஎல் போட்டியில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து, 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து தோனியே முடிவு செய்வார்” என்றுக் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் கடைசியாக விளையாடிய தோனி, அரை சதம் அடித்து ரன் அவுட் ஆனார். மிகப்பெரிய நிகழ்விற்கு குறுகிய அணியைத் தேர்ந்தெடுக்கும் போது, அனுபவமும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் சாஸ்திரி கூறினார். “ஒரு நபரின் அனுபவத்தையும் ஃபார்மையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் 5-6 என்ற இடத்தில் பேட்டிங் செய்வார்கள். தோனி ஐ.பி.எல். இல் சிறப்பாக விளையாடினால், அவர் கருத்தில் கொள்ளப்படுவார்” என்றார் சாஸ்திரி.