IPL 2020: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020 இல் எம்.எஸ். தோனி நிச்சயம் பங்கேற்பார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். "நாம் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்," என்று அவர் கூறியுள்ளார்.
Advertisment
செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2020 தொடரில் பங்கேற்பதன் மூலம், எம்.எஸ். தோனி 13 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். மேலும் அனைவரது கண்களும் 39 வயது தோனியின் பெர்ஃபாமன்ஸை காண ஆவலோடு காத்திருக்கின்றன. 2019 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, தோனி எந்தவிதமான கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் இந்தியா டுடேவிடம் கூறுகையில், "ஆம். எம்.எஸ். தோனி 2020 மற்றும் 2021 ஆகிய இரு சீசனிலும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கலாம். அநேகமாக 2022ல் கூட அவர் விளையாடுவார் என்று நம்புகிறோம்" என கூறியுள்ளார்.
"தோனி ஜார்கண்டில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்கள் மூலமாக மட்டுமே செய்திகளைப் பார்த்தேன். ஆனால் நாம் கேப்டனைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவரைப் பற்றி எப்போதும் கவலைப்பட வேண்டாம். அவர் தனது பொறுப்புகளை அறிவார், அவர் தன்னையும் அணியையும் கவனித்துக்கொள்வார்" என்று கூறினார்.
மார்ச் 2 ஆம் தேதி சூப்பர் கிங்ஸ் தங்கள் பயிற்சியைத் தொடங்கியது. தோனி முதல் நாளில் இருந்தே பயிற்சியைத் தொடங்கினார். ஆனால், கொரோனா அனைத்தையும் முடக்கிப் போட, இப்போது தான் ஐபிஎல் 2020 மீண்டும் துளிர்விட தொடங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil