![உலகக் கோப்பையை வென்ற அதே ஆண்டில் தோனியை நீக்க நடந்த திட்டம்: சீனிவாசன்](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2020/08/a72-3.jpg)
சார், அவர்கள் (தேர்வாளர்கள்) தோனியை கேப்டனாக தேர்வு செய்ய மறுக்கிறார்கள்
Shamik Chakrabarty
மகேந்திர சிங் தோனியை மீண்டும் கேப்டனாக்க தக்க வைப்பதை உறுதி செய்வதில், 2011-12 ஆம் ஆண்டில் பிசிசிஐ தலைவராக தனது அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை என்.ஸ்ரீனிவாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
2011-12 ஆம் ஆண்டில் இந்தியா தனது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, டெஸ்டில் 0-4 தோல்வியைத் தழுவியது. அப்போதைய தேர்வுக் குழு, தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தது. இந்த நடவடிக்கையைத் தடுக்க ஸ்ரீனிவாசன் கோல்ஃப் மைதானத்திலிருந்து நேராக தேர்வுக் கூட்டத்திற்கு வந்தார்.
“இது 2011. இந்தியா உலகக் கோப்பையை வென்றது. பின்னர் ஆஸ்திரேலியாவில், நாங்கள் டெஸ்டில் சிறப்பாக செயல்படவில்லை. எனவே, தேர்வாளர்களில் ஒருவர் அவரை (தோனி) ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பினார். ஆனால், விஷயம் என்னவென்றால், அவரை எப்படி ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது? அவர் சில மாதங்களுக்கு முன்பு தான் உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்திருந்தார். அதேசமயம், தோனிக்கு பதிலாக வேறு எவரை கேப்டனாக்குவது என்று அவர்கள் (தேர்வாளர்கள்) யோசிக்கவில்லை. ஒரு கலந்துரையாடலுக்கு பிறகு, அவர் வெறும் ஒரு வீரராக மட்டும் இருக்க வழி இல்லை என்று கூறினேன்.
“உண்மையில், அது ஒரு விடுமுறை காலமாகும். நான் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தேன். நான் திரும்பி வந்த போது, அங்கு (பி.சி.சி.ஐ) செயலாளர் சஞ்சய் ஜக்தேல் இருந்தார், அவர் என்னிடம், 'சார், அவர்கள் (தேர்வாளர்கள்) தோனியை கேப்டனாக தேர்வு செய்ய மறுக்கிறார்கள். அதேசமயம், ஒரு வீரராக தோனி அணியில் நீடிக்க விரும்புகிறார்கள்' என்றார். உடனே நான் சென்று, 'எம்.எஸ் தோனி தான் அணியின் கேப்டனாக இருப்பார்' என்றேன். பி.சி.சி.ஐ தலைவராக எனது அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தினேன், ”என்று ஸ்ரீனிவாசன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
தவிடுபொடியான ‘ஒன் மேன் ஷோ’ பாணி; தலை தொங்கிய G.O.A.T.
அப்போது தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்த இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் மொஹிந்தர் அமர்நாத், தோனியை கேப்டனாக பதவி நீக்கம் செய்வதற்கான "ஒருமித்த முடிவை" சீனிவாசன் தடுப்பதைப் பற்றி பேசியிருந்தார். "மகேந்திர சிங் தோனியை மாற்றுவதற்கான ஏகமனதான முடிவை வாரியத் தலைவர் ஏற்கவில்லை" என்று அமர்நாத் சிஎன்என்-ஐபிஎன்னிடம் 2012 ல் தெரிவித்தார்.
பழைய பி.சி.சி.ஐ அரசியலமைப்பின் படி, குழுத் தேர்வுகளுக்கு வாரியத் தலைவரின் ஒப்புதல் தேவை. லோதா சீர்திருத்தங்கள் தேர்வு விஷயங்களில் இறுதி அழைப்பை எடுக்க தலைமை தேர்வாளருக்கு அதிகாரம் அளித்துள்ளன.
ஏப்ரல் 2011 இல் தோனியின் கேப்டன் தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது, ஆனால் டெஸ்ட் அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வாஷ் அவுட் ஆனது. ஆனால் டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதில் ஸ்ரீனிவாசன் எந்த லாஜிக்கும் காணவில்லை. ஸ்ரீனிவாசன் தான் அப்போது எடுத்த முடிவில் இன்னும் உறுதியாக இருக்கிறார்.
"பாருங்க, அவர் (தோனி) உங்களுக்காக உலகக் கோப்பையை வென்றுள்ளார். 1983 க்குப் பிறகு, இந்தியா அதை மீண்டும் வென்றது, ‘அவர் ஒருநாள் கேப்டனாக இருப்பதை நான் விரும்பவில்லை’ என்று நீங்கள் கூறுகிறீர்கள்! தேர்வாளர்கள் தோனியை ஒரு வீரராகக் கூட அணியில் அனுமதிக்காமல் இருந்திருக்கலாம். எனக்கு தெரியாது. இது மிகவும் நியாயமற்ற நகர்வு என்று நான் நினைக்கிறேன், நான் எனது முடிவில் உறுதியாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்" என்று சீனிவாசன் நம்மிடம் கூறினார்.
2008 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) தொடக்க சீசனில் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக நியமிப்பதில் சீனிவாசன் முக்கிய பங்கு வகித்தார். பல ஆண்டுகளாக, சீனிவாசன் மற்றும் சென்னை உடனான முன்னாள் இந்திய கேப்டனின் பிணைப்பு வலுவானது. தோனியின் சர்வதேச ஓய்வைத் தொடர்ந்து, சீனிவாசன் சிறந்த ’கீப்பர்-பேட்ஸ்மேனுக்கு' இவ்வாறு மரியாதை செலுத்தினார்.
"மகேந்திர சிங் தோனி ஒரு விதிவிலக்கான நபர், விதிவிலக்கான கிரிக்கெட் வீரர் மற்றும் மிகவும் நியாயமான நபர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவருடன் சேர்ந்து அவரை அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எனது வாழ்நாளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை, சிறந்த கிரிக்கெட் திறன்களைக் கொண்டவர்களைச் சந்தித்துப் பார்த்திருக்கிறேன். எம்.எஸ் ஒரு விதிவிலக்கு. அவர் இந்தியா மற்றும் அவர் விளையாடிய அணியைப் பற்றி மட்டுமே நினைத்தார்" என்று சீனிவாசன் கூறினார்.
“நான் அவரை தேர்வுக் குழு கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். அவர் வெளிப்படுத்திய எந்த பார்வையும் லாஜிக்கானது. அவர் எந்த பாரபட்சத்தையும் காட்டவில்லை. இந்த அம்சத்தில் அவர் மற்ற அனைவருக்கும் மேலாக உயர்ந்தார் என்று நான் நினைக்கிறேன். வணிக வாழ்க்கையில், விளையாட்டு வாழ்க்கையில் நான் பலரைக் கண்டிருக்கிறேன், ஆனால் அவரது சமநிலை மற்றும் நியாயமான விளையாட்டின் உணர்வை சமன் செய்வது எளிதல்ல. ”
தோனியின் தலைமைத்துவ திறன்களை பற்றி அனில் கும்ப்ளே பதிவு செய்த வார்த்தைகளை ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார். “களத்தில், அவர் (தோனி) தோற்கடிக்க முடியாதவர். உண்மையில், அனில் கும்ப்ளே அதைச் சொன்னபோது - சி.எஸ்.கே மீண்டும் ஐபிஎல் களத்திற்கு திரும்பியிருந்தது. அப்போது நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணித் தேர்வை அனைவரும் விமர்சித்தனர். நிர்வாகத்தை விமர்சித்தனர். அணி வயதான வீரர்களைக் கொண்டிருக்கிறது என்றனர். ‘நான் அந்த அணிக்கு 10க்கு 6 என்று மதிப்பளித்தேன். களத்தில், இது 10 இல் 10 பெற்றது. ஏனெனில் அங்கு தோனி கேப்டன். அவருக்கு இதைவிட பெரிய மரியாதை செலுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை".
ஸ்ரீனிவாசன் மேலும்கூறுகையில், "ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறந்ததை எவ்வாறு பெறுவது என்பது அவருக்கு (தோனி) தெரியும். அவர் அதை ஆரவாரம் இல்லாமல், விளம்பரம் இல்லாமல் செய்கிறார்.
நீல மேகம் இனி மஞ்சள் மேகம் – ‘விண்டேஜ்’ தோனியின் அதகளம் சிஎஸ்கேவில் ஆரம்பம்!
ஆனால் எல்லோரும் அவருடன் விளையாட விரும்புகிறார்கள். அவர்கள் சிறந்து விளங்க விரும்புகிறார்கள். அவர் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரின் ஹீரோ. டீம் மீட்டிங் என்பது சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும், அவ்வளவுதான். அவர் வீரர்களுடன் தனித்தனியாக நேரடியாக பேசுவார். அவர் விளையாட்டின் போது தொடர்புகொள்வார், (அல்லது) விளையாட்டுக்கு முன் பேசுவார். ஆனால், வீரர்களுடனான அவரது தொடர்பு ஒருபோதும் பகிரங்கமாக இருந்ததில்லை.
“அவர் இயல்பான நபர். அடிப்படையில், அவர் ஒரு சிக்கலான நபர் அல்ல. அவர் தெளிவான சிந்தனை கொண்ட நபர். ஐ.பி.எல் உட்பட டி20 கிரிக்கெட்டில் மக்கள் அதிக கவனம் பெற்றதில் தோனி பெரும் பங்கு வகித்ததாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் உள்ளிட்ட டி 20 லீக் கிரிக்கெட்டில் மக்கள் ஆர்வம் பெருகியதற்கு மகேந்திர சிங் தோனி ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். இந்திய மக்கள் டி20 கிரிக்கெட்டையும் (அதன்) பல ஹீரோக்களையும் கொண்டாடினர். ஆனால் அதிலும் எம்.எஸ் தோனி தனிச் சிறப்பு வாய்ந்தவர்.
"சில மாதங்களுக்கு முன்பு, அதன் கோவிட் பரவலுக்கு முன்பு (சிஎஸ்கே) அணி ஐபிஎல் பயிற்சி தொடங்க சென்னையில் கூடியது. 15,000 முதல் 20,000 பேர் மைதானத்திற்கு வந்து, ‘தோனி, தோனி, தோனி’ என்று கோஷமிட்டனர்… இந்தியாவில் பல இடங்களில் ஒரு டெஸ்ட் போட்டிக்கு கூட அந்தக் கூட்டத்தை நீங்கள்காண முடியாது. பயிற்சிப் போட்டிகளுக்கு எந்த விளம்பரமும் செய்யவில்லை. அவர் பயிற்சி செய்வதை மக்கள் கேள்விப்பட்டார்கள், அவர்களே வந்தார்கள். அதுவே அவரது புகழ். அவர் இந்தியாவின் சின்னமாக உள்ளார், தமிழ்நாடு மற்றும் சென்னையில் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.
“அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் சென்னைக்கும் இடையிலான பிணைப்பு எவ்வாறு வளர்ந்தது என்பது எனக்குத் தெரியாது. ஐ.பி.எல் ஆரம்ப சீசன்களில், அவர் வருவார், அவர் தனது மோட்டார் சைக்கிளில் (வெளியே) செல்வார். மக்கள் அவரை நோக்கிச் சென்றார்கள். ”
ஐ.பி.எல்-ல் தோனி சி.எஸ்.கே கேப்டனாக தொடருவார், அணி அதன் நான்காவது கோப்பையை இலக்காகக் கொண்டுள்ளது. "அவர் விரும்பும் வரை அவர் சிஎஸ்கே-வுக்காக விளையாட முடியும். தோனியின் கீழ் சிஎஸ்கே வெற்றிபெற ஒரு காரணம், அவர் ஒருபோதும் போட்டிக்கு அப்பால் நினைப்பதில்லை. அவர் ஒருபோதும் மனச்சோர்வடைவதில்லை. இப்போதும் அதே கொள்கையை நாங்கள் பின்பற்றுவோம்" என்று சீனிவாசன் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.