ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நேற்று வியாழக்கிழமை (டிச.26) முதல் பாக்சிங் டே போட்டியாக தொடங்கி நாடடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்திருந்தது. பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி ஜடேஜா மற்றும் பண்ட்டின் விக்கெட்டை விரைவில் பறிகொடுத்து திண்டாடியது. இந்தியா பாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்றால் 275 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்த ஜோடியில் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இவர்கள் 275 ரன்களை கடக்க உதவி செய்து இந்தியா பாலோ ஆனை தவிர்க்க காரணமாக இருந்தார்கள்.தொடர்ந்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் சுந்தர் 50 ரன்னிலும், அடுத்து வந்த பும்ரா ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிதானமாக ஆடி வந்த நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதமாகும்.
இதையடுத்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் முடிக்கப்பட்டது. இறுதியில் 3ம் நாள் முடிவில் இந்தியா 116 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் நிதிஷ் குமார் 105 ரன்னுடனும் , சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை 4-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் நிதிஷ் ரெட்டி 99 ரன்களில் இருந்தபோது அவர், சதம் அடிக்க வேண்டும் என்று மைதானத்தில் இருந்த அவரது தந்தை கண்களை மூடி பிரார்த்தனை செய்தார். நிதிஷ் பவுண்டரி அடித்து சதத்தை அடித்ததும் உற்சாகத்தில் பொங்கிய அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.