ஆர்.எஸ்.எஸ். குறித்து தனது மனைவி ரிவாபா பேசும் வீடியோ ட்விட்டரில் பகிர்ந்த ரவீந்திர ஜடேஜா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்ந்து பதிவிட்டு உள்ளார். இதற்கு இணையவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள்: பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து; குடும்பத்தினருக்கு லேசான காயம்
இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பாக ரிவாபா அளித்த நேர்காணல் வீடியோவை பதிவிட்டு உள்ள ஜடேஜா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில், "ஆர்.எஸ்.எஸ் பற்றிய உங்கள் புரிதலைப் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் நமது சமூகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கான இலட்சியங்களை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். உங்கள் அறிவும் கடின உழைப்பும்தான் உங்களை தனித்து தெரியவைத்துள்ளது. தொடர்ந்து கடைபிடியுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஜடேஜாவின் இந்தப் பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இது உங்களிடம் இருந்து வந்திருக்க கூடாது. உங்கள் மனைவியை ஊக்குவிப்பதும் ஆதரிப்பதும் முழுமையாக புரிந்து கொள்ளக்கூடியது ஆனால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியின் அரசியல் கருத்துக்களை ஆமோதிப்பதற்கு, நீங்கள் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை காத்திருந்திருக்கலாம்” என ஒரு ட்விட்டர்வாசி பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஆர்.எஸ்.எஸ் புகழ் பாடுங்கள் என பதிவிட்டுள்ளனர். அதேநேரம் ஜடேஜாவுக்கு ஆதரவாகவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil