பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நாளை வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்குகிறது. தொடரின் முடிவை நிர்ணயிக்கும் கடைசி போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும். அத்துடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் நீடிக்கும். மறுபுறம், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் பல வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை மீண்டும் கைப்பற்றும். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2-வது முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
ரோகித் இல்லை - கேப்டனாக பும்ரா
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய டெஸ்ட் கேப்டன்ரோகித் சர்மாவுக்கு 'ஓய்வு' அளிக்கப்பட உள்ளது. அவருக்குப் பதிலாக அணியை முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவழிநடத்த உள்ளார்.
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்களின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் ரோகித் விலகுவதற்கான தனது முடிவை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. அவரது முடிவை இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் அறியப்படுகிறது.
இந்த ஆண்டு கோடையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணத்துடன் தொடங்கும் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான திட்டத்தில் ரோகித் சர்மா இடம் பெற வாய்ப்பில்லை. அதனால், மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டி தான் அவர் இந்தியாவிற்காக ஆடிய கடைசியாக இருக்கும். தற்போதைய சுழற்சியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவது சாத்தியமில்லை.
சிட்னி போட்டிக்கு ரோகித் இல்லாத நிலையில், மெல்போர்ன் டெஸ்டில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில், ரோகித்துக்கு பதிலாக ஆடுவார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கே.எல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார். எனவே, கில் மூன்றாவது இடத்தில் பேட் செய்வார். இதற்கிடையில், ரிஷப் பண்ட், ஆடும் லெவன் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள உள்ளார். மேலும், காயம் அடைந்த ஆகாஷ் தீப்பிற்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா விளையாடுவார்.
இன்று பீல்டிங் பயிற்சிகள் நடந்து கொண்டிருந்த போது, கம்பீர் பும்ராவுடன் நீண்ட நேரம், தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். அதேநேரம், ரோகித் சிறிது நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். உண்மையில், அவர் பயிற்சிக்காக கடைசியாக நடந்தவர்களில் ஒருவர். வழக்கமான ஸ்லிப் பயிற்சி அமர்வுகளின் போது அவர் காணவில்லை.
நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரோகித் அணியில் இடம் பெறுவது பற்றி கம்பீரிடம் கேட்கப்பட்டபோது, அவர் அதுபற்றி எதுவும் உறுதியளிக்காமல் இருந்தார். “ரோகித்துடன் எல்லாம் நன்றாக இருக்கிறது. நாங்கள் ஆடுகளத்தைப் பார்த்த பிறகு, ஆடும் லெவன் வீரர்கள் பட்டியலை நாளை அறிவிக்கப் போகிறோம், ”என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் விளையாடிய கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெறும் 6.2 சராசரியையும், கடைசி ஒன்பது டெஸ்டில் 10.93 என்ற சராசரியையும் கொண்ட ரோகித், டெஸ்டில் ரன்கள் சேர்க்க கடுமையாக போராடி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது மற்றும் பும்ராவின் தலைமையில் இந்தியா தொடக்க டெஸ்டில் வெற்றி பெற்றது, தற்போது நடந்து வரும் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு தொடர் தோல்விகள் என தனது கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்தும் ரோகித் பெரும் சரிவைக் கண்டுள்ளார். அதனால் தான் அவருக்கு சிட்னி போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
ரோகித்துக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளதால், முக்கியமான ஐந்தாவது டெஸ்டில் அணியை வழிநடத்த பும்ராவுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் இந்தியா வென்று தொடரை 2-2 என சமன் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைக்க வேண்டும் என நினைக்கும்.
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன்: சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.