scorecardresearch

பதக்கத்தை உறுதி செய்த இந்தியா.. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அப்டேட்.. மேலும் செய்திகள்

மிகப் பெரிய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் எலைட் குரூப் எச் பிரிவு ஆட்டத்தில் தமிழகம்-சத்தீஸ்கர் மோதுகின்றன.

ரேபிட் செஸ்: காலிறுதி வாய்ப்பை இழந்தார் பிரக்ஞானந்தா

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. இதில் 15-வது மற்றும் கடைசி சுற்றில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா (16 வயது) ரஷியாவின் விளாடிஸ்லாவ்வை தோற்கடித்தார். 

முன்னதாக, 8-வது சுற்றில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்னையும் (நார்வே) அவர் வீழ்த்தி பாராட்டுகளை பெற்றார்.

முதல் 8 இடங்களுக்குள் இடம் பிடிக்க முடியாததால் காலிறுதி வாய்ப்பை  இழந்து வெளியேறினார்.

லீக் சுற்று முடிவில் 5 வெற்றி, 4 டிரா, 6 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்ற பிரக்ஞானந்தா 11-வது இடத்தை பெற்றார். 16 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் தான் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும். 

தென்னாப்பிரிக்கா-நியூஸிலாந்து இடையே நாளை 2-ஆவது டெஸ்ட்

நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நாளை 2-ஆவது டெஸ்ட் ஆட்டம் நடைபெறவுள்ளது.

டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து 2 வீரர்கள் விலகல்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது.

சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

இந்திய அணி அடுத்து இலங்கையுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.இதில் பங்கேற்பதற்கான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.

முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் நாளை (24-ஆம் தேதி) மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் மற்றும் மிட்டில் ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். 

இதுகுறித்து பிசிசிஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பீல்டிங் முயற்சியின் போது சூர்யகுமாருக்கு ஒரு சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது,  தீபக் பந்துவீச்சின் போது வலது தசைபிடிப்பு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

IND vs SL T20: இன்று முதல் போட்டி; முக்கிய வீரர்கள் இடத்தை நிரப்புவது யார்?

பதக்கத்தை உறுதி செய்த இந்தியா

73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 81 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை நந்தினி, கஜகஸ்தானின் வாலெரியா ஆக்ஸ்னோவாவை சந்தித்தார்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நந்தினியின் சரமாரியான குத்துகளை சமாளிக்க முடியாமல் வாலெரியா திணறினார். 

இதையடுத்து 3-வது ரவுண்டில் போட்டியை நிறுத்திய நடுவர் நந்தினி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனால் அரைஇறுதிக்கு முன்னேறிய நந்தினி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார். அவர் அரைஇறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கம் கிடைக்கும். 

70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி ஜெர்மனியின் மெலிசா ஜெமினியையும், 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன், கஜகஸ்தானின் அய்டா அலிகெயேவாவையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்:

தமிழ்நாடு அணி பேட்டிங்

மிகப் பெரிய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் எலைட் குரூப் எச் பிரிவு ஆட்டத்தில் தமிழகம்-சத்தீஸ்கர் மோதுகின்றன.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று தமிழக அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தமிழக அணிக்கு கேப்டன் விஜய் சங்கர் ஆவார். தொடக்க ஆட்டக்காரரான கெளசிக் காந்தி 27 ரன்களில் ரன் அவுட்டானார்.

லக்மேஷா சூர்யபிரகாஷ், பாபா அபராஜித் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Sports news in tamil cricket ranji trophy sports round up416333