ரஷ்யா மற்றும் பெலாரசை அனைத்து வயது பிரிவிலும் சர்வதேச ஐஸ் ஹாக்கி மற்றும் எல்லை தாண்டிய ஐஸ் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக சர்வதேச ஐஸ் ஹாக்கி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ஐஸ் ஹாக்கி அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐஸ் ஹாக்கி போட்டிகளை நடத்துவதற்கான உரிமைகளும் ரஷ்யாவிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டது.
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐஸ் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரக்பி மற்றும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருந்த நிலையில் ஐஸ் ஹாக்கி போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரக்பி போட்டிகளில் பங்கேற்வும் தடை
இதனிடையே, ரஷியா மற்றும் பெலாரசை அனைத்து சர்வதேச ரக்பி மற்றும் எல்லை தாண்டிய கிளப் ரக்பி போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உலக ரக்பி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
ரக்பியின் மதிப்புகளான ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் மரியாதை ஆகியவற்றின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
World Rugby confirms sporting sanctions for Russia and Belarus:
1. Suspension of Russia & Belarus from international & cross border rugby
2. Suspension of Russia from World Rugby membership
(Belarus is not a World Rugby member)
Effective immediately https://t.co/l3xRNgsMQa— World Rugby Media (@worldrugbymedia) February 28, 2022
மேலும் உலக ரக்பி உறுப்பினரிலிருந்து ரஷியாவை இடைநீக்கி செய்து உத்தரவிட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.கே அபார முயற்சி… தமிழகத்தில் 2 இடங்களில் கிரிக்கெட் அகாடமி!
கால்பந்து அணிகளுக்கும் தடை
அத்துடன், ரஷ்யாவின் தேசிய மற்றும் உள்ளூர் கால்பந்து அணிகள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கால்பந்து சங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன.
அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ரஷ்ய வீரர் முதலிடம்
டென்னிஸ் வீரர்களுக்கான உலக தரவரிசையை வழங்கும் ஏ.டி.பி. தரவரிசை பட்டியலில் ரஷ்யா வீரர் மெத்வதேவ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, மொத்தம் 361 வாரங்கள் வரை முதலிடத்தில் நீடித்து வந்தவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பின்னுக்குத் தள்ளி இந்தச் சாதனையை 26 வயதுடைய டேனில் மெத்வதேவ் செய்துள்ளார்.
அவர் 8,615 புள்ளிகள் பெற்று உள்ளார். இரண்டாவது இடத்துக்கு சரிந்த 34 வயதான ஜோகோவிச் 8,465 புள்ளிகளுடன் உள்ளார்.
ஜெர்மன் வீரர் அலெக்சாண்ட் ஸ்வரேவ் 3-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
2020-ம் ஆண்டு உலக டூர் இறுதி சுற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மெதவதேவ், கடந்த ஆண்டு (2021) அமெரிக்க ஓபன் பட்டம் பெற்றார்.
"I am happy to reach No. 1. It was my goal since I was young and especially my goal in the latest times.” - @DaniilMedwed
You did it, congratulations 🙌🥇 #ATPRankings pic.twitter.com/PLXHkGYSYS— ATP Tour (@atptour) February 28, 2022
அத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி அசத்தினார். அவர் நம்பர் ஒன் இடம் பிடித்த 3-வது ரஷிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கு முன்பு ரஷிய வீரர்களில் கபெல் நிகோவ் (1999-ம் ஆண்டு), மரட் சபின் (2000) ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற 35 வயதான ரஃபேல் நடால் (ஸ்பெயின்) ஒரு இடம் முன்னேறி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
முதல் இடம் பிடித்ததுபற்றி மெதவதேவ் அளித்த பேட்டியில், முதல் இடம் அடைந்ததற்காக நிச்சயம் நான் மகிழ்கிறேன். இளம் வயதில் இருந்தே முதல் இடம் அடைய வேண்டும் என்பது எனது இலக்காக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாக். முக்கிய வீரர்கள் விலகல்
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந் தேதி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் தொடங்குகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் ஆகியோர் முதலாவது டெஸ்ட் ஆட்டத்துக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து விலகினர்.
இருவரும் ஒதுங்கி இருப்பது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாகும். அவர்களுக்கு பதிலாக இப்திகர் அகமது, முகமது வாசிம் ஜூனியர் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கராச்சியில் வருகிற 12-ஆம் தேதி தொடங்கும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இரு வீரர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்கா
நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.
முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது டெஸ்ட் கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இறுதியில் அந்த அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கியது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. காலின் டி கிராண்ட்கோம் 120 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்து 211 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் ஒருமுனையில் தென் ஆப்பிரிக்க அணியின் கெய்ல் வேரின்னே நின்று விளையாடினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 9 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்திருந்த போது தென்னாப்ரிக்க அணி டிக்ளேர் செய்தது. கெய்ல் வேரின்னே 136 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
426 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 6 விக்கெட்கள் மட்டுமே மீதம் இருக்க நியூசிலாந்து அணி வெற்றி பெற 332 ரன்கள் தேவைப்படுகிறது.
5-ஆவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 93.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை எடுத்தது. இதையடுத்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க வென்றது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டெவன் கான்வே 92 ரன்களும் விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 44 ரன்களும் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சுருட்டினர்.
ஆட்ட நாயகனாக ரபாடா தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக மாட் ஹென்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆப்கன் ஆறுதல் வெற்றி
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி.
முதல் இரண்டு ஒரு நாள் ஆட்டங்களில் வங்கதேசம் வென்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், மூன்றாவது ஒரு நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் எடுத்தது.
லிடான் தாஸ் மட்டும் 86 ரன்கள் எடுத்தார். ஷாகிப் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆப்கன் தரப்பில் அதிகபட்சமாக நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் நபி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து விளையாடிய ஆப்கன் அணி 40.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி கண்டது. தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மனுல்லா குர்பாஜ் சதம் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஹ்மத் ஷா 47 ரன்களும், ரியாஸ் ஹசன் 35 ரன்களும் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவ்வாறாக 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து ஆப்கன் அணி வென்றது.
மெஹிடி ஹசன் 2 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இதன்மூலம் ஆறுதல் வெற்றி கண்டது ஆப்கன்.
மார்ச் 3-ஆம் தேதி முதலாவது டி20 ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டி டாக்கா நகரில் நடைபெறவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.