அடுத்த டி20 உலகக்கோப்பை 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதில், சூப்பர் 12 சுற்றில் நேரடியாகப் பங்குபெறும் தகுதியை முன்னாள் சாம்பியன் இலங்கையும், வங்கதேச அணியும் இழந்துவிட்டதாக ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதனால், இவ்விரு அணிகளும் தகுதிச்சுற்றுகளில் விளையாடி தகுதிப் பெற்று, உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஐசிசி விதிமுறைப்படி, டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க முடியும். அந்த வகையில் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, விண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் மட்டுமே நேரடியாகப் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளன. இலங்கையும், வங்கேதசமும் 9, 10வது இடத்தில் இருப்பதால் அந்த அணிகள் நேரடியாகப் பங்கேற்கும் தகுதியை இழந்துவிட்டன.
2014 உலக சாம்பியன், 3 முறை ஃபைனலிஸ்ட் என்ற பெருமை கொண்ட இலங்கை அணி, உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறாதது இலங்கை ரசிகர்களை மட்டுமல்ல, பரவலாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள், இந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. அதில் விளையாடி முதல் இரு இடங்களைப் பெறும் அணிகளே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும். அதில் இலங்கையும், வங்கதேசமும், மற்ற சிறிய அணிகளோடு மோதி வென்றாக வேண்டும்.
இதுகுறித்து இலங்கை அணியின் கேப்டன் லசித் மலிங்கா வேதனை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிப் பெற முடியாதது வேதனை அளிக்கிறது. சூப்பர் 12 பிரிவில் நேரடியாகத் தகுதி பெற முடியாவிட்டாலும், உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன். ஒவ்வொரு அணியும் ஆண்டின் கடைசியில் முதல் 8 இடங்களில் இடம் பெறுவது அவசியம் என்று எண்ணுவது இயல்புதான். குரூப் பிரிவில் எங்களுக்கு மற்ற நாடுகளுடன் விளையாடுவதற்குக் கூடுதலாக வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.
மேலும் படிக்க - அதலபாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி!