Tamil Nadu Cricketer Vijay Shankar : இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.ல்.ராகுல் இருவரும் கடந்த வாரம், காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, பெண்கள் பற்றி சர்ச்சை மிகுந்த பதில்களை கூறியதால், தேசம் முழுவதும் பெரிய விவாதம் ஏற்பட்டது.
அவர்களின் சொந்த வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள் குறித்த கருத்துகள் என்றாலும், விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு பொதுத்தளத்தில் அவர்கள் பேசியதால், இருவரையும் தற்காலிகமாக அணியில் இருந்து நீக்கியது பி.சி.சி.ஐ.
ஆஸ்திரேலியாவுடனான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து தற்போது தாயகம் திரும்பிவிட்டனர். அவர்களுக்கு பதில், யார் களம் இறங்குவார்கள் என்ற கேள்விக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஆல் -இந்தியா சீனியர் செலக்சன் கமிட்டி.
ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், மற்றும் பேட்ஸ்மென் சுப்மான் கில் இருவரும், ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுலுக்கு பதிலாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில், இந்திய அணியில் இடம் பெற்று விளையாட உள்ளனர்.
கே.எல்.ராகுலுக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற சுப்மான் கில்
மேலும் படிக்க : சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா.. காஃபி வித் கரணில் பேசியது என்ன ?
Tamil Nadu Cricketer Vijay Shankar - எந்தெந்த போட்டிகளில் விளையாட உள்ளனர் ?
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன்னரே அணியில் இணைகிறார் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர்.
இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் ஏற்கனவே விஜய் சங்கர் விளையாடி உள்ளார். இதுமட்டுமல்லாமல், ஏற்கனவே இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரிலும் பங்கேற்று சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் இவர்.
பஞ்சாப்பை சேர்ந்த சுப்மான் கில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளார். ராஞ்சி கோப்பைக்கான சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியதால், இவரை தேர்வு செய்துள்ளனர்.