Pro Kabaddi League | Tamil Thalaivas: தென் குமரிக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி தென் மாவட்டங்களை புரட்டப் போட்டது. விடிய விடிய பெய்த அதிகன மழை மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க செய்தது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஊர், நகரம், மாவட்டம் என அனைத்தையும் மூழ்கடித்தது.
தென் மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்கள் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தன. மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் காற்றாற்று வெள்ளத்தால் மக்கள் தங்களின் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வரும் நிலையில், அரசு மக்களுக்கு உதவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி வீரரான தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு கனமழையில் இடிந்தது. அவரது குடும்பத்தினர் பாதுக்காப்பாக இருந்தாலும், வீட்டை மழை வெள்ளத்துக்கு பறிகொடுத்த தவிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், 'தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க உதவுவேன்' என தமிழ் தலைவாஸ் அணி வீரர் மாசானமுத்து லட்சுணன் கூறியுள்ளார். அறிமுக வீரரான அவரை கடந்த ஆண்டு நடந்த புரோ கபடி லீக் சீசன் 10 ஏலத்தில் 31.6 லட்ச ரூபாய்க்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கியது.
வெள்ளத்தால் வீட்டை இழந்து தவித்து வரும் தனது பெற்றோருக்கு புதிய வீடு கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், யு மும்பா அணிக்கு விளையாடும் தமிழக வீரர் விஸ்வந்த் உடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் சீரமைக்க நிதி வழங்க உள்ளதாகவும் மாசானமுத்து தெரிவித்துள்ளார்.
"எனது பெற்றோர் தற்போது கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அரசு பள்ளியில் தற்காலிக வீடுகளை உருவாக்கியுள்ளது. புதிய வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் நாங்கள் ஒரு குடிசையைக் கட்டப் போகிறோம்.
தூத்துக்குடியைச் சேர்ந்த வி விஸ்வந்த் மற்றும் நானும் எங்கள் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி வழங்க உள்ளோம். கடந்த ஆண்டு புரோ கபடி லீக் ஏலத்தில் நான் சம்பாதித்த முழுத் தொகையையும் (ரூ 31.6 லட்சம்) நன்கொடையாக வழங்க உள்ளேன்." கூறியுள்ளார்.
மாசானமுத்து தனது கபடி வாழ்க்கை குறித்து பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எனது கிராமத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கபடி விளையாட ஆரம்பித்தேன். பதினொன்றாம் வகுப்பில் வேறு பள்ளிக்குச் சென்று அந்த பள்ளியில் இருந்த பயிற்சியாளர்களைக் கொண்டு எனது விளையாட்டை மேலும் மேம்படுத்தினேன். பள்ளிப்படிப்புக்குப் பிறகு எனது ஆட்டம் கொஞ்சம் மேம்பட்டது. அதிலும் நான் சென்னையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்தபோது எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்திக் கொண்டேன்.
என்னுடைய பெற்றோர்கள் என்னை கபடி வீரராக பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் இது காயம் ஏற்படக்கூடிய விளையாட்டு என்பதால் அரை மனதுடன் என்னை சென்னைக்கு அனுப்பினர். 18 வயதில் எனது கிராமத்திலிருந்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் விடுதிக்கு மாறினேன்.தற்போது நான் விடுதியில் இருந்து வெளியேறி, சமீபத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளேன். நான் கபடி விளையாடாதபோது சென்னையில் வருமான வரித்துறையில் வரி உதவியாளராகப் பணிபுரிகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
புரோ கபடி லீக் சீசன் 10ல் இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள மாசானமுத்து லக்ஷ்ணன், இந்த சீசனில் வரும் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணிக்கு முக்கியப் பங்காற்றும் நம்பிக்கையில் களமாடி வருகிறார்.
இதையும் படியுங்கள்: வெள்ளத்தில் இடிந்து விழுந்த வீடு...'அப்பா - அம்மாவுக்கு உதவ முடியல, கஷ்டமாக இருக்கு' - தமிழ் தலைவாஸ் வீரர் மாசானமுத்து!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.