Top 5 sports news in tamil, 25 November 22 - 5 1/2 அடியில் உலக கோப்பை கேக்… ஹீரோ கோப்பையில் மேஜிக் காட்டிய சச்சின்… இன்னும் பல விளையாட்டு செய்திகள்! | Indian Express Tamil

5 1/2 அடியில் உலக கோப்பை கேக்… ஹீரோ கோப்பையில் மேஜிக் காட்டிய சச்சின்… இன்னும் பல விளையாட்டு செய்திகள்!

பிரேசில் வீரர் ரிசார்லிசன் அடித்த மேஜிக் கோல் வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

5 1/2 அடியில் உலக கோப்பை கேக்… ஹீரோ கோப்பையில் மேஜிக் காட்டிய சச்சின்… இன்னும் பல விளையாட்டு செய்திகள்!
top sports news today in tamil

Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. நெய்மர் காயம்: அடுத்த போட்டியில் ஆடுவாரா?

22வது உலகக் கோப்பை போட்டி அரபு நாடான கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் – செர்பியா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறி இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது பிரேசில் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மருக்கு காயம் ஏற்பட்டது. ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் நெய்மர் பந்தை கடத்தி சென்ற போது எதிரணி வீரர் பறிக்க முயன்றார். அப்போது, கால் இடறி நெய்மர் கீழே விழுந்தார். இதில் கணுக்காலில் ஏற்பட்ட வலியால் அவர் துடித்தார்.

உடனே அணியின் மருத்துவர் களத்துக்குள் வந்து நெய்மரை பரிசோதித்தார். பின்னர் நெய்மர் போட்டியில் இருந்து வெளியேறினார். மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த அவரது கண்கள் கலங்கி இருந்தன. காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பிரேசில் அணியின் பயிற்சியாளர் நெய்மர் உலக கோப்பையின் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட், “நெய்மர் உலக கோப்பையில் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்” என்று கூறினார்.

நெய்மரின் காயம் குறித்து பேசிய மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர்,” நெய்மரின் காயத்தின் தன்மை குறித்து மதிப்பீட்டை பெற நாங்கள் 24 முதல் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. நாளை (இன்று) காயம் குறித்து புதிய மதிப்பீட்டை பெறுவோம்” என்று கூறினார்.

  1. ரெய்னாவின் 13 வருட சாதனையை தகர்த்த வாஷிங்டன் சுந்தர்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 16 பந்துகளை மட்டுமே சந்தித்த இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் 13 வருட சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். நியூசிலாந்து மண்ணில் அதிவேகமாக (16 பந்துகளில்) 30 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

2009-ம் ஆண்டு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். அதன்பின்னர் ஒரு வீரரால் கூட அடிக்க முடியவில்லை.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற நிலையில், இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.

இதையும் படியுங்கள்: IND VS NZ 1st ODI: சதமடித்து மிரட்டிய டாம் லாதம்… நியூசிலாந்துக்கு அபார வெற்றி!

  1. 240 முட்டை, 85 கிலோ எடை, 5 1/2 அடி உயரம்… உலக கோப்பைக் கேக் செய்து அசத்திய பிரபல பேக்கரி

கத்தாரில் உலக கோப்பைக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா பேக்கரிஸ் நிறுவனம் சார்பாக உலக்கோப்பைக் கால்பந்து போட்டியை கொண்டாடும் விதத்திலும், இன்றைய இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் விதத்திலும், கால்பந்து உலக கோப்பையை ஆளுயர கேக்காக வடிவமைத்து, வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இந்த உலக கோப்பைக் கேக்கை வாடிக்கையாளர்களும், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் இதனை ரசித்து செல்கின்றனர். மேலும், அங்கு நின்றபடி செல்ஃபிகளை க்ளிக் செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஐஸ்வர்யா பேக்கரியின் உரிமையாளர் வெங்கடசுப்பு பேசுகையில், “உலக கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டும் வகையிலும், உலக கோப்பை வடிவிலான ஆளுயர கேக் செய்து பேக்கரி முன்பு வைத்துள்ளோம்.

இந்த கேக் 60 கிலோ சக்கரை, 240 முட்டையுடன் 85 கிலோ எடையில் ஐந்தரை அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேக்கை நான்கு மாஸ்டர்கள் இணைந்து 4 நாட்களாக வடிவமைத்துள்ளனர். இது ரசிகர்கள், வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

  1. 1993 இதே நாள் – ஹீரோ கோப்பை அரையிறுதி – மேஜிக் காட்டிய சச்சின்.

கடந்த 1993 ஆம் ஆண்டில் வங்க தேச கிரிக்கெட் சங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இந்த தொடருக்கு ஹீரோ மோட்டார் நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் செய்ததால் ஹீரோ கோப்பை கிரிக்கெட் போட்டியாக இருந்தது.

இந்த தொடருக்கான லீக் சுற்றின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்தன. இதில் இந்தியா – தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் முதல் அரையிறுதியில் விளையாடின. இப்போட்டி இதே நாளில் (நவம்பர் 24) தான் அரங்கேறியது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது அசாருதீன் 90 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, இந்திய அணியின் கேப்டன் அசாருதீன், சச்சினை பந்துவீச அழைத்தார். ஆனால், சச்சின் அந்த போட்டியில் அதுவரை ஒரு ஓவர் கூட வீசமால் இருந்தார்.

எனினும், தன்னை நம்பி அழைத்த கேப்டனின் நம்பிக்கையை காப்பற்றிய சச்சின் மிகத் துல்லியமாக பந்துகளை வீசி, 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதன்மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட இந்தியா, அந்த அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

  1. பிரேசில் வீரர் ரிசார்லிசன் அடித்த மேஜிக் கோல் – வைரல் வீடியோ

கத்தாரில் நடைபெற்று பிபா உலகக் கோப்பை 2022-ன் குரூப் ஜி போட்டியில் செர்பியாவை பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் பிரேசில் வீரர் ரிசார்லிசன் 2 கோல்களை அடித்து அசத்தினார். அவர் அடித்த இரண்டாவது கோல் அற்புதத்தின் உச்சமாக இருந்தது. மேஜிக்கல் கோல் என்பார்களே அதுதான் இந்த கோல். இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல் என்று இது வர்ணிக்கப்படுகிறது.

பிரேசில் வீரர் ரிசார்லிசன் அடித்த மேஜிக் கோல் வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 sports news in tamil 25 november 22