உலகக் கோப்பை 2019 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 240 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா, 49.3வது ஓவரில், 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது.
லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்திய அணி, நான்காவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்திடம் தோற்றிருப்பது ரசிகர்களை சோகமடையைச் செய்துள்ளது.
மேலும் படிக்க : இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டியின் அசாத்திய தருணங்கள்!
இந்நிலையில், தோல்வி குறித்து விராட் கோலி பேசுகையில், "முதல் பாதியில், நாங்கள் மிக மிக சிறப்பான நிலையில் இருந்தோம். கையில் பந்துடன் பீல்டிங்கில் நாங்கள் நினைத்ததை செய்து முடித்தோம். அப்போது, அந்த சூழலில் என்ன தேவைப்பட்டதோ அதை செய்தோம். நியூசிலாந்தை நாங்கள் எட்டக் கூடிய ஸ்கோரில் கட்டுப்படுத்திவிட்டோம் என்றே நினைத்தோம். ஆனால், கையில் பந்துடன் வந்த நியூசிலாந்து, முதல் அரை மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றிவிட்டது. நேற்றைய நாள் எங்களுக்கு நல்ல நாளாக அமைந்ததை நினைத்து பெருமைப்பட்டோம். நியூசிலாந்து பவுலர்களுக்கே பெருமை அனைத்தும் சென்று சேரும். புதிய பந்தில் சரியான திசையில் பந்து வீசினார்கள். நியூசிலாந்து பவுலர்களின் தரத்தை அது வெளிக்காட்டியது. இரு அருமையான ஆட்டங்கள் ஜடேஜாவுக்கு அமைத்திருக்கிறது என நினைக்கிறேன். இன்றைய அவரது செயல்பாட்டில் அதிகபட்ச நேர்மறை தெரிந்தது. தோனியும் ஜடேஜாவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் மீண்டும், மீண்டும் ஒரு மெல்லிய கோட்டில் அவர் அவுட்டாகி இருக்கிறார், ரன் அவுட் ஆக்கப்பட்டார்.
தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி விட்டு, 45 நிமிடத்தில் நீங்கள் விளையாடிய மோசமான கிரிக்கெட்டால் வெளியேறுவது என்பது எப்போதும் மோசமான தருணங்களையே கொடுக்கிறது. இதயம் நொறுங்கியுள்ளது. கடும் அழுத்தத்தில் விளையாடிப் பெற்ற இந்த வெற்றிக்கு, நியூசிலாந்து தகுதியான அணியாகும். எங்களது ஷாட் தேர்வு இன்னும் சிறந்ததாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதைத் தவிர்த்து, உண்மையில் நாங்கள் தரமான கிரிக்கெட்டையே வெளிப்படுத்தினோம். இத்தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறோம். நான் முன்பே சொன்னது போன்று, நாக் அவுட் சுற்று என்று வரும் போது நியூசிலாந்து எங்களை விட தைரியமாக விளையாடியது. இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்களே. திரளான எண்ணிக்கையில் வந்து எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு எனது நன்றி" என்றார் உருக்கமாக.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.