உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் நார்வே நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன். இவர் நியூயார்க் நகரில் வால் ஸ்ட்ரீட் பகுதியில் டிசம்பர் 26 முதல் 31 வரை நடைபெற்று வரும் 2024 ஆம் ஆண்டுக்கான உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மேக்னஸ் கார்ல்சன் 2 ஆம் நாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்ததாக அவரை உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே. மேலும், போட்டியின் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொண்டு போட்டியில் பங்கேற்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு கார்ல்சன் மறுப்பு தெரிவித்த நிலையில் போட்டியின் 9வது சுற்றிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஃபிடே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து வெளியேறினார்.
விஸ்வநாதன் ஆனந்த் விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக உலக செஸ் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவரும், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், "மேக்னஸ் கார்ல்சன் வெறுமனே விதிகளைப் பின்பற்ற மறுத்துவிட்டார், எங்களுக்கு வேறு வாய்ப்பு எதனையும் வழங்காமல் அவர் சென்று விட்டார். இன்று இந்த முடிவு உணர்ச்சிகரமானதாகத் தோன்றியது. மேக்னஸ் சமரசம் செய்ய தயாராக இல்லை.
வெளிப்படையாக சொல்வதென்றால், இது நாங்கள் எடுக்க விரும்பிய முடிவு அல்ல. மேக்னஸுக்கு நாங்கள் பல விருப்பங்களை வழங்கினோம். ஒன்பதாவது சுற்றுக்கு முன் மேக்னஸ் தனது ஜீன்ஸை மாற்றும் வரை அது சரியாக இருக்கும் என்று நடுவர் கூறினார். ஆனால் அதை கொள்கை அடிப்படையில் செய்யப்போவதில்லை என்று மேக்னஸ் கூறினார். அது அவருக்குக் கொள்கையுடையது என்று அவரே கூறியுள்ளார். நடுவர் வெறுமனே விதிகளைப் பயன்படுத்தினார், நாங்கள் அதை ஆதரித்தோம்.
சம்பவத்திற்குப் பிறகு கார்ல்சனுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றாலும், மேலும் ஏதேனும் விளக்கங்கள் உள்ளதா என்று அவரது தந்தை ஹென்ரிக்கிடம் கேட்டாம். அவர்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று அவர் கூறினார். மற்ற ஒவ்வொரு வீரரும் விதிகளைப் பின்பற்றுகிறார்கள்.இயன் நெபோம்னியாச்சியை மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், அவர் அவ்வாறு செய்தார். அதனால்தான் அவரால் தொடர முடிந்தது. மேக்னஸ் அதைப் பின்பற்ற மறுத்ததால், எங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது." என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.