scorecardresearch

‘நினைவு இழந்த நிலையில் எனது மனைவி… நான் அழுதேன்… அப்போது சென்னையில் கிடைத்த உதவி…’: வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி

சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாவைப் பற்றிக் கவலைப்படாமல், என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னார்கள். என்னால் மறக்க முடியாத நினைவு அது – பாகிஸ்தான் முன்னாள் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்

‘நினைவு இழந்த நிலையில் எனது மனைவி… நான் அழுதேன்… அப்போது சென்னையில் கிடைத்த உதவி…’: வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி
வாசிம் அக்ரம்

முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அவரது மனைவி ஹுமா அக்ரம், இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் இறந்த, உணர்ச்சிகரமான நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று அழைக்கப்படும் வாசிம் அக்ரம், 1984 கிரிக்கெட்டில் அறிமுகமானார், அவர் 104 டெஸ்ட், 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 460 போட்டிகளில் 926 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1992 உலகக் கோப்பை வென்றவர் 2003 உலகக் கோப்பைக்குப் பிறகு ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை 2002 இல் முடித்தார்.

இதையும் படியுங்கள்: சர்வதேச பாரா எறிபந்து போட்டி: கோவை மாற்றுத் திறனாளிகள் தங்கம் வென்று அசத்தல்

இந்தநிலையில், வாசிம் அக்ரம் ஸ்போர்ட்ஸ்டார் இதழில் தனது சுயசரிதையான ‘சுல்தான்: சுயசரிதை’ புத்தகத்தில் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைவுக் கூர்ந்துள்ளார்.

வாசிம் அக்ரம் தன் மனைவியுடன் சிங்கப்பூருக்கு விமானத்தில் சென்றுக் கொண்டிருந்ததாகவும், திட்டமிடப்பட்ட எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டபோது அவரது மனைவி மயக்கமடைந்ததாகவும் கூறினார். இந்திய விசா இல்லாதபோதும் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சென்னையில் உள்ள அதிகாரிகள் எப்படி உதவினார்கள் என்பதை அவர் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

“நான் எனது மறைந்த மனைவியுடன் சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தேன், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் ஒரு நிறுத்தம் இருந்தது. நாங்கள் தரையிறங்கியபோது, ​​​​எனது மனைவி சுயநினைவின்றி இருந்தாள், நான் அழுது கொண்டிருந்தேன், விமான நிலையத்தில் மக்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். எங்களிடம் இந்திய விசா இல்லை. எங்களிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட்கள் இருந்தன,” என்று வாசிம் அக்ரம் கூறினார்.

“சென்னை விமான நிலையத்தில் உள்ளவர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், சுங்கத்துறை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் விசாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும், விசாவை ஒழுங்குபடுத்தும்போது என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் சொன்னார்கள். ஒரு கிரிக்கெட் வீரராக மற்றும் ஒரு மனிதனாக, அது என்னால் மறக்க முடியாத ஒன்று,” என்று அவர் கூறினார்.

பின்னர் 1999 சென்னை டெஸ்ட் குறித்தும் தனது நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டார். “சென்னை டெஸ்ட் எனக்கு மிகவும் விசேஷமானது… கடும் வெயில் இருந்தது, ஆடுகளம் வெறுமையாக இருந்தது, ஏனென்றால் நாங்கள் ரிவர்ஸ்-ஸ்விங்கை நம்பியிருந்தோம் அந்த காலக்கட்டத்தில் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான சக்லைன் முஷ்டாக் எங்களிடம் இருந்தார். அந்த நேரத்தில் அவர் கண்டுபிடித்த தூஸ்ரா டெலிவரியை யாராலும் அடிக்க முடியவில்லை,” என்று வாசிம் அக்ரம் கூறினார்.

“சச்சின் (டெண்டுல்கர்) முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு சக்லைன் முஷ்டாக் பந்தை நன்றாக விளையாடினார். ஒவ்வொரு முறை அவர் தூஸ்ரா வீசும்போதும், சச்சின் ‘கீப்பருக்குப் பின்னால் லேப் ஷாட் அடித்தார். ஆஃப் ஸ்பின்னர்கள் தூஸ்ராவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம், ஆனால் சச்சின் சிறப்பாக விளையாடினார். அதனால் தான் சச்சின் எல்லா காலத்திலும் சிறந்தவர்களில் ஒருவராக இருந்தார்” என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Wasim akram remembers how chennai airport officials helps his wife hospitalization in his biography

Best of Express