ஆசைத் தம்பி
பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி லண்டனில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடர், நாளை மறுநாள் ஆகஸ்ட் 5-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது.
ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி ‘பி’ பிரிவல் இடம்பெற்றது. முதல் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா, அப்போட்டியை 1-1 என டிரா செய்தது. பலம் வாய்ந்த அணி என்பதால், இங்கிலாந்து எளிதில் வெற்றிப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா டிரா செய்தது அனைவரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த இங்கிலாந்து பயிற்சியாளர் டேனி கெர்ரி, இந்திய அணி நெகட்டிவ் யுக்திகள் பயன்படுத்தி விளையாடியதாக குற்றம் சாட்டினார்.
பின்னர், ஜூலை 26ம் தேதி நடந்த 2வது போட்டியில், அயர்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் போராடி தோற்றது. ஜூலை 29ம் தேதி அமெரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி, அப்போட்டியையும் 1-1 என டிரா செய்தது. லீக் போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெறவில்லை என்றாலும், கோல்கள் வித்தியாசத்தால் லீக் சுற்றில் தனது பிரிவில் 3-வது இடம் பிடித்ததன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெற்றது.
பின்னர்,17-வது இடத்தில் உள்ள இத்தாலியுடன் நாக்-அவுட் சுற்றில் மோதிய இந்திய அணி, 3-0 என வென்று, உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. நாட் அவுட்டில், தோற்றால் வெளியேற நேரிடும் என்பதால், இந்திய வீராங்கனைகள் அபாரமாக ஆடினர். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் லால்ரேம்சியாமி (Lalremsiami) முதல் கோல் அடிக்க, நேஹா கோயல் 45-வது நிமிடத்தில் கோல் அடித்தார். பின்னர், 55-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறியது.
காலிறுதிப் போட்டியில் அயர்லாந்தை மீண்டும் இந்தியா எதிர்கொள்ளவிருந்த நிலையில் பேட்டியளித்த இந்திய கேப்டன் ராணி, "அயர்லாந்து அணியுடனான ஆட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம். லீக் சுற்றில் அவர்களிடம் தோற்றோம். மறுக்கவில்லை. ஆனால், இது உலகக் கோப்பை காலிறுதிப் போட்டி. இந்த சூழல் முற்றிலும் வேறானது" என்று பேசியிருந்தார்.
அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை, லீக் சுற்றில் 'பி' பிரிவில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கிலும், இந்திய அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. ஆனால், இங்கிலாந்திடம் 1-0 என தோல்வி கண்டது.
இருப்பினும், இதில் முக்கியமான அம்சம் என்னவெனில், உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக அயர்லாந்து அணி கால் இறுதிக்கு தனது பிரிவில் இருந்து நேரடியாக தகுதி பெற்றிருக்கிறது.
இதனால், பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று இரவு இந்தியாவும், அயர்லாந்தும் காலிறுதிப் போட்டியில் மோதின. இதில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. குறிப்பாக, இந்தியாவின் வசம் பந்து அதிக நேரம் இருந்தது. இதேபோல், இந்திய வீராங்கனைகள் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்தது.
அதேசமயம், அயர்லாந்து அணி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அவற்றினை கோலாக கன்வெர்ட் செய்ய அவர்களால் முடியவில்லை. இதனால், இறுதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. எனவே ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
இதில், முதலில் அயர்லாந்தின் நிக்கோலா டெய்லி ஷாட் அடிக்க, அதனை இந்திய கோல் கீப்பர் சவிதா சிறப்பாக தடுத்துவிட்டார். அடுத்ததாக, இந்திய கேப்டன் ராணி ஷாட் அடிக்க, அதனை அயர்லாந்து கோல் கீப்பர் மெக் ஃபெர்ரன் தடுத்தார்.
தொடர்ந்து, அயர்லாந்து அணியின் ஓ'ஃப்லானாகன் ஷாட் அடிக்க, மீண்டும் அது தடுக்கப்பட்டது. இதனால், அயர்லாந்தின் இரண்டாவது கோல் வாய்ப்பும் வீணானது. அதேசமயம், மோனிகா ஷாட் அடிக்க அதுவும் தடுக்கப்பட்டது.
மூன்றாவது வாய்ப்பாக, அயர்லாந்தின் ராய்ஸின் ஷாட் அடிக்க, அது முதல் கோல் ஆனது. ஆனால், இந்தியாவின் 3வது வாய்ப்பை நவ்ஜோத் வீணடித்தார்.
தொடர்ந்து அயர்லாந்தின் மீகே அலின்சன் கோல் அடிக்க, அயர்லாந்து 2-0 என முன்னிலை வகித்தது. பின்னர் ஒருவழியாக இந்தியாவின் ரீனா கோக்கர் முதல் கோல் அடிக்க, ஆட்டம் 1-2 என்றானது. இறுதியில் அயர்லாந்து 3வது கோல் அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிப் பெற்று அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணி கடைசியாக உலகக் கோப்பை தொடரில் 1974-ம் ஆண்டு அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்திய அணி 4-வது இடம் பிடித்திருந்தது.
@TheHockeyIndia congratulations! Definitely not the results we wanted but it’s a start. The team has performed very well and the players coaches and entire team deserves applaud. Well fought!! ✨#CheerForEves #INDvIRE #HWC2018
— P.T. Usha (@PTUshaOfficial) August 3, 2018
ஆனால், நேற்றைய தோல்வியின் மூலம், 44 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.