/tamil-ie/media/media_files/uploads/2019/05/z799.jpg)
World cup 2019 all teams strength and weakness
உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், வரும் மே மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் பலம், பலவீனம் குறித்து இங்கே பார்ப்போம்,
ஆப்கானிஸ்தான்
முகமது ஷாசத், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணியின் நான்கு பில்லர்கள் என்றால் அது மிகையாகாது. எப்பேற்பட்ட பவுலராக இருந்தாலும் விட்டு விளாசுவதில் கில்லாடியான ஓப்பனர் முகமது ஷாசத் அந்த அணியின் சேவாக் எனலாம். முகமது நபியின் ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் குறைந்தது 3 போட்டிகளிலாவது ஆப்கனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என நம்பலாம். ரஷித் கான் பற்றில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தகவமைத்துக் கொள்ளுதலில் கெட்டிக்காரப் பிள்ளை. ஸ்பின் மூலம் அனைத்து பேட்ஸ்மேன்களையும் மிரட்டக் காத்திருக்கிறார். அதேபோல், முஜீப் உர் ரஹ்மானின் ஸ்பின்னும் எதிரணிக்கு சவால் அளிக்கக் கூடியதே.
அனுபவமின்மை, வலிமையான பேட்டிங் ஆர்டர் இல்லாதது இவர்களது குறை எனலாம்.
வங்கதேசம்
இன்றைய தேதியில் 'Experienced and Dangerous' அணி என்றால் அது வங்கதேசம் தான். 'கத்துக்குட்டி' என்ற பெயரைக் கடந்து கான்ஃபிடன்ட் லெவலில் வேறு தளத்தில் நிற்கிறார்கள். எப்பேற்பட்ட எதிரணியாக இருந்தாலும், எந்த பிட்சாக இருந்தாலும் நேர்த்தியான டஃப் கொடுக்க காத்திருக்கிறது புலிக் குட்டிகளைக் கொண்ட வங்கதேச அணி. 'நாகினி டான்ஸ்' போடாமல் இருந்தால், நிச்சயம் டாப் 4-க்குள் நுழைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க - அசுர வளர்ச்சியுடன் மிரட்டும் வங்கதேச கிரிக்கெட் அணி! உலகக் கோப்பை உங்கள் கைக்கு மிக அருகில்!
இலங்கை
முன்னாள் உலக சாம்பியன் என்று சொல்லத் திராணியற்று இருக்கும் அணி என்றால் அது தான் இலங்கை. மாதத்திற்கு ஒரு கேப்டனை மாற்றுவது, பிளேயர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் ஏற்படும் பிரச்சனை என்று கடந்த 2,3 வருடங்களாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி இருக்கிறது இலங்கை. ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா, டிமுத் கருணரத்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, லசித் மலிங்கா ஆகியோரை நம்பியே அந்த அணி களமிறங்க உள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி வாய்ப்பு மங்கிய நிலையில் இருக்கும் ஒரே அணி இது தான். இருப்பினும், களத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
வெஸ்ட் இண்டீஸ்
இந்த உலகக் கோப்பையில் 'Un Predictable Team'-ஆக வலம் வரப் போவது வெஸ்ட் இண்டீஸ் தான். க்றிஸ் கெயில், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லெவிஸ், ஆந்த்ரே ரசல், கார்லஸ் பிரத்வெயிட், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், கெமார் ரோச் என்று மெகா பட்டாளத்துடன் களமிறங்குகிறது வெஸ்ட் இண்டீஸ். இம்முறை இவர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது உறுதி!. அதிரடி பேட்டிங், அதிரடி ஆல் ரவுண்டர்ஸ், டீசன்ட்டான ஃபேஸ் பவுலிங் என்று அசத்தக் காத்திருக்கிறது ஜேசன் ஹோல்டர் தலைமையிலான விண்டீஸ் அணி. இங்கிலாந்துடன் இறுதிப் போட்டியில் மோதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீசுக்கு கொடுக்கப்பட்ட அதே அடைமொழி இவர்களுக்கும் பொருந்தும். 'Un Predictable Team'. சமீப காலங்களில் இவர்களது பேட்டிங்கில் அசுர முன்னேற்றத்தை காணமுடிகிறது. ஃபக்கர் சமான், பாபர் அசம், ஆசிஃப் அலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ், சர்பராஸ் அஹ்மது, ஹசன் அலி, வாஹாப் ரியாஸ், முகமது ஆமிர் என்று பலமான கூட்டணியை களமிறக்கியுள்ளது பாகிஸ்தான்.
நியூசிலாந்து
'Well Balanced Team' என்று நம்மால் நியூசிலாந்தை நிச்சயம் அழைக்க முடியும். அவ்வளவு பெர்ஃபெக்டாக அமைந்திருக்கிறது இந்த அணி. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி., அணியில் மார்டின் கப்தில், காலின் மன்ரோ, ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீசம், காலின் டி கிராண்ட் ஹோம், மிட்சல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட், டிம் சவுதி, இஷ் சோதி என்று எதிரணி வீரர்களையுடைய பக்காவான டீம் ரெடி. பேட்டிங்கும், வேகப்பந்து வீச்சும் இவர்களது மிகப்பெரிய பலம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த இங்கிலாந்து கண்டிஷனை முழுமையாக அனுபவித்து ரசித்து ஆடும் அணி நியூசிலாந்து. ஆகையால், இவர்களுடன் மோதும் எதிரணி யாராக இருந்தாலும், எந்நேரத்திலும் வீழ்வதற்கு தயாராக இருத்தல் வேண்டியது அவசியம்.
ஆஸ்திரேலியா
முன்னாள் உலக சாம்பியன். சொல்வதற்கே எவ்வளவு கம்பீரமாக இருக்கு!, ஆனால், இந்த கம்பீரம் ஆஸ்திரேலிய அணியின் கடைசி ஒன்றரை ஆண்டுகால ஆட்டத்தில் டோட்டல் மிஸ்ஸிங். ஐபிஎல்-க்கு முந்தைய இந்திய டூரில் தான் இழந்த பார்ம், மரியாதை, கவுரவம் என அனைத்தையும் மீட்டெடுத்தார்கள். அதை உலகக் கோப்பையில் தக்க வைக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது. ஆனால், அதை கச்சிதமாக செய்து முடிக்க இருவர் திரும்ப வந்திருக்கின்றனர். ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர். இவர்கள் இருவரின் வருகைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் பலம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. இவர்கள் வராமல் இருந்திருந்தால் இங்கிலாந்துக்கு சவாலே இல்லாமல் போயிருந்திருக்கும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். அணியின் கலவை சரிவிகிதமாக இருப்பதால், டாப் 4 உறுதி எனலாம்.
தென்னாப்பிரிக்கா
நல்ல அணி, வலிமையான அணி, அருமையான அணி, அபாரமான அணி, அட்டகாசமான அணி, அற்புத அணி, தரமான அணி, தாறுமாறான அணி, தகதகக்கும் அணி, சவாலான அணி, சளைக்காத அணி, சக்கைப் போடு போடும் அணி, வீரமான அணி, விவேகமான அணி, வைராக்யமான அணி, வரலாறுகளை கொண்ட அணி.
ஆனால், கோப்பையை வெல்லுமா-னு கேட்டா எங்களிடம் பதில் இல்லை!
இந்தியா
தற்போதைய நிலையை நினைத்துப் பார்த்தால் சற்று பீதியாகத் தான் உள்ளது, மாபெரும் சவாலை எப்படி சமாளிக்கப் போகிறதோ என்று!. ஃபார்மில் இல்லாத டாப் ஆர்டர், மோசமான மிடில் ஆர்டர் என்று களமிறங்குகிறது இந்தியா. லோ ஆர்டர் ஓகே. ஆனால், தோனி சிஎஸ்கே-விடம் காண்பிக்கும் விஸ்வாசத்தை, ஆக்ரோஷத்தை இந்திய அணியிலும் சற்று காண்பித்தால் பலம் கூடும். பவுலிங்கில் பும்ரா பலம். ஷமியை கொஞ்சம் நம்பலாம். புவனேஷ் நிலை பரிதாபம். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், சாஹல் நல்ல ஃபார்மில் உள்ளார்களா என இப்போது வரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
இந்தியா இத்தொடரில் கோப்பையை வெல்லுமா என்பதை சொல்வதைவிட, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், பும்ரா ஆகிய மூவருக்கும் இத்தொடர் அட்டகாசமான தொடராக அமையும் என்பதை உறுதியாக கூறலாம்.
இங்கிலாந்து
கோப்பை வெல்வதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ள ஒரே அணி இங்கிலாந்து. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிரட்டுகிறது அந்த அணி. உள்ளூர் வேறு. Flat பிட்ச்களில் இவர்களது பேட்ஸ்மேன்கள் 500 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டியில் ஆல்ரெடி ஒரு துண்டு போடப்பட்டாச்சு!. வேறு என்ன சொல்ல?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.