உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியும், விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியும் ஒரே நாளில் நடந்ததால், ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட விளையாட்டு விருந்து அளித்திருக்கிறது நேற்றைய ஞாயிற்றுக் கிழமை.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், சூப்பர் ஓவர் மூலம் இங்கிலாந்து வெற்றிப் பெற்று முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது, நியூசிலாந்து அணி தொடர்ந்து இரு உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டியில் தோற்று பெரும் ஏமாற்றமடைந்தது. அதிலும், நேற்றைய தோல்வியெல்லாம் வேற ரகம் எனலாம். அதை தோல்வி என்றே நம்மால் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது நியூசிலாந்தின் போராட்டம்.
மேலும் படிக்க – நியூசிலாந்தின் அசராத போராட்டத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா? – ஐசிசி விதிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்களின் கண்டனக் குரல்கள்!
எது எப்படியோ, இங்கிலாந்து தான் இப்போது சாம்பியன்! அதை மறுப்பதற்கில்லை.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் மொத்த பரிசுத் தொகை $10 மில்லியன்.(ரூ.69.6 கோடி). இதில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு $4 மில்லியன் பரிசும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு $2 மில்லியன் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே இதுதான் அதிக பரிசுத் தொகையாகும்.
அரையிறுதியில் தோற்ற அணிக்கு $800,000 பரிசும் வழங்கப்பட்டது. இந்திய அணி இத்தொகையை தான் பெற்றது.
கிரிக்கெட்டின் இந்த பரிசுத் தொகைக்கே ஆச்சர்யப்பட்டால் எப்படி… விம்பிள்டன் டென்னிஸ் கதையை கேளுங்க..
நேற்று நடந்த விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரும், நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர். இதில், ஜோகோவிச் ஐந்தாவது முறையை விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதில், விம்பிள்டன் தொடரின் மொத்த பரிசுத் தொகை $49 மில்லியன் டாலராகும். இந்தியத் தொகையில் 341 கோடி. உலகக் கோப்பை கிரிக்கெட் பரிசுத் தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு $3.14 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கிடைக்கும்.
கிட்டத்தட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் அணிக்கு பகிர்ந்து அளிக்கப்படும் தொகையை, விம்பிள்டன் சாம்பியன் தனியாக தட்டிச் செல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்…
கடைசியாக, உச்சபட்ச பரிசுத் தொகை கொண்ட விளையாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள். 2018ல் நடந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மொத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
$400 மில்லியன் டாலர். அதாவது, ரூ.2,786 கோடி. 2018 ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையின் மதிப்பு என்பது, 6க்கும் மேற்பட்ட ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகையை விட அதிகமாகும்.
இப்பவே கண்ண கட்டுதே!!