இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி (பாக்ஸிங் டே டெஸ்ட்), மெல்போர்ன் மைதானத்தில் நாளை மறுதினம்(டிச.26) தொடங்குகிறது. இதில், ஆஸ்திரேலிய அணியில், 15வது வீரராக 7 வயது சிறுவன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
'அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா டீம் ரொம்ப மோசமா போயிடுத்தா!?' என்று ஜெர்க் ஆகிவிட வேண்டாம். அதற்கு பின்னால், ஒரு நெகிழ்ச்சியான குட்டிக் கதை இருக்கிறது.
Virat Kohli posing with *Archie Schiller* Australia's Co-captain for Boxing Day Test ! ❤????#INDvAUS pic.twitter.com/CkcKjb2RAg
— GovINd VIRAT (@imgovindd) 24 December 2018
அந்த 7 வயது சிறுவனின் பெயர் ஆர்கி சில்லர் (archie schiller). அவன் பிறக்கும் போதே இதய வால்வில் பல்வேறு சிக்கல்களோடு பிறந்தவன். 7 வயதுக்குள் அவனுக்கு பல்வேறு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு விட்டன. இதன் காரணமாக இயல்பான குழந்தைகள் போல் அவனால் வெளியில் ஓடியாடி விளையாட முடியாது. எந்த விளையாட்டையும் அவனால் விளையாட முடியாது. இதனால், மற்ற சிறுவர்கள் விளையாடுவதை தினம் ஏக்கத்துடன் பார்த்து வந்திருக்கிறான் ஆர்கி சில்லர். மேலும், பள்ளிக்கூடம் செல்வதைக் கூட தவிர்த்து, அவனை மிக கவனமாக வீட்டிலேயே வைத்து பெற்றோர்கள் பராமரித்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சில்லரின் தந்தை, அவனிடம் "உன்னுடைய ஆசை என்ன?" என்று கேட்க, சட்டென்று 'நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேண்டும்" என்று கூறியிருக்கிறான். இதையடுத்து, அவனது தந்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் கூறி, ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திடம் இந்த வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.
இதையறிந்த, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், சிறுவன் ஆர்கி சில்லரின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தது. இதையடுத்து, மெல்போர்ன் பார்க்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில் ஆர்கி சில்லர் சேர்க்கப்பட்டு, துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டான்.
Christmas has come early for cricket-mad Archie Schiller, who will co-captain Australia alongside @tdpaine36 in the iconic Boxing Day Test at the MCG. The 7-year-old’s inclusion has been made possible through @MakeAWishAust. @7Cricket #AUSvIND #7News pic.twitter.com/RE3CKJVb2y
— 7 News Adelaide (@7NewsAdelaide) 23 December 2018
இந்த நிகழ்ச்சியில், ஆர்கி சில்லரை அறிமுகம் செய்து வைத்து அவனை விராட் கோலியும், டிம் பெய்னும் உற்சாகப்படுத்தினார்கள். இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், "வாழ்வின் கடினமான நாட்களை சில்லர் கடந்திருக்கிறான். அவனின் முகத்தில் மகிழ்ச்சியை காண இது ஒரு வாய்ப்பாக அமையும்" எனத் தெரிவித்தார்.
ஆர்கி சில்லர் நன்றாக லெக் ஸ்பின் வீசுவதால், நாதன் லயன் அவனுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார்.
மேலும் படிக்க - ஹர்திக் பாண்ட்யாவா? ஹனுமா விஹாரியா? 3வது டெஸ்ட்டில் யாருக்கு வாய்ப்பு?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.