18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம் வழக்கு அனைத்து தரப்பு வாதங்கள்!!!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ள நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்கள் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம்.

அரசு கொறடா தரப்பு வாதம்:

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு மனு அளித்ததன் மூலம் கட்சியை விட்டு வெளியேறிவிட்டதாக அர்த்தம். எடியூரப்பா வழக்கு இந்த வழக்குக்கு பொருந்தாது. டிடிவி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

கட்சி தலைமை மீது தான் அதிருப்தி. கட்சி மீது அதிருப்தி இல்லை என்றால் உள்கட்சியில் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து கவர்னருக்கு எடுத்து சென்று பிரச்னையை பெரிதுபடுத்திவிட்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்:

கட்சி தாவல் தடை சட்டத்தை பொறுத்தவரை தகுதி நீக்க அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு அதிகாரம் கொண்டதல்ல. கட்சியில் பொதுக்குழு, சட்டமன்ற குழுக்கள் உள்ளன. அவற்றில் முறையிடலாம். சபாநாயகரிடம் முறையிட்டிருக்கலாம். அதை விடுத்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என கவர்னரிடம் மனு அளிப்பது என்பது கேலிக்கூத்தானது. இது தகுதி நீக்கம் செய்ய தகுந்த வழக்கும் கூட.

பிப்ரவரி 18 நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பன்னீர்செல்வம் அணியினருக்கு கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

சபாநாயகர் தரப்பு வாதங்கள்:

ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ களின் நோக்கம். அதன் பின்புலத்தில் டிடிவி.தினகரன் செயல்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலாவை தலைவராக ஏற்க முடியாது என ஒரு குழு முடிவு செய்தது. கட்சியின் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் பன்னீர்செல்வம் அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியாது.அரசை பெரும்பான்மை பெற வைப்பதற்காக தினகரன் ஆதரவு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யவில்லை.

முதல்வர் மீதுள்ள அதிருப்தியை உள்கட்சி பிரச்சினையாக கட்சிக்குள் எழுப்பாமல், ஆளுநரை சந்தித்து கடிதமாக கொடுத்ததன் உள்நோக்கம் என்ன?. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

இது கட்சி விதிகளுக்கு எதிரானது. குற்றச்சாட்டை அரசு கொறடாவும் நிரூபித்துள்ளார். அதனால் தான் அந்த 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். முதல்வரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வைப்பது முறையல்ல. தகுதி நீக்கம் முடிவெடுப்பதற்கு முன்னர் சட்டவிதிகள் அனைத்தையும் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த விசயத்தில் இயற்கை நியதி மீறப்படவில்லை. கட்சி தவால் புகாரில் நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை காலத்தில் விளக்கமளிப்பதற்காக ஆஜராகாத உறுப்பினர்கள் அந்த நீக்கத்தை ரத்து செய்ய எவ்வித உரிமையும் கோரமுடியாது.

தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ கள் தரப்பு வாதம்:

சபாநாயகரின் இந்த நடவடிக்கை உள்நோக்கத்துடன் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டம் 10 வது அட்டவணைப்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இரண்டு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யலாம். ஒன்று, தான் சார்ந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து திருப்பி கொடுக்கும் போதும், இரண்டாவதாக, கட்சி உத்தரவுக்கு மாறாக சட்டமன்றத்தில் வாக்களிக்கும் போதோ எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம். இந்த இரண்டு காரணங்களும் தங்களுக்கு பொருந்தாது.

அரசியல் அமைப்பு சட்டம் 10 வது அட்டவணைக்கு மாறாக, சபாநாயகர் செயல்பட்டு, எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். சபாநாயகர், அரசின் அதிகாரத்துக்கு கட்டுபட்டு இணைந்து, உள்நோக்கத்துடன் செயல் படுகிறார்.

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி அரசு மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டனர். இதுகுறித்து, சபாநாயகரிடம் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி அரசு கெறாடா அளித்த புகார் மீது அவசர, அவசரமாக விசாரித்து, 28 நாட்களுக்குள், எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த அதிகாரத்தின் நோக்கத்தை தவறாக பயன்படுத்தி, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்பட்சத்தில், அதற்கு சாதகமாக ஆளும் அரசுக்கு உதவிடவே எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எங்களை தகுதி நீக்கம் செய்ததாக செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு அறிவித்தனர். ஆனால், அது தொடர்பான உத்தரவு அன்று இரவு 8.30 மணிக்கு இணையதளத்தில் அரசிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, நீதிமன்றத்தில் உடனே வழக்கு தொடர்வதை தடுப்பதற்காக இந்த கால தாமதம். இதுவே சபாநாயகர் உள் நோக்கத்துடன் செயல்பட்டார் என்பதற்கான் மற்றொரு ஆதாரம்.

கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி 19 எம்.எல்.ஏ.க்களும் தமிழக ஆளுநரைச் சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி மனு அளித்தோம்.

அரசு கொறடா ராஜேந்திரன், ஆகஸ்டு 24 ஆம் தேதி , எங்களுக்கு எதிராக அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணைப்படி, எங்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கையை மேற்கொண்டார். இதுதொடர்பாக அவர் சபாநாயகருக்கு அனுப்பிய புகார் மனுவில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அடிப்படை ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.எங்களுக்கு எதிராக அளித்த புகார் கடிதத்தில் அரசு கெறாடா கையெழுத்து போடவில்லை.

பன்னீர் செல்வம் அணியினருக்கு எதிரான மனு மீது ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர் எங்கள் மீது உடனடியாக அவசர அவசரமாக புகார் அளித்த 24 நாட்களில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பெரும்பான்மை ஓட்டெடுப்பில் பங்கேற்க விடாமல் செய்வதற்காக, முதல்வரின் தூண்டுதலின் பேரில், எங்களை தகுதி நீக்கம் செய்தது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. சபாநாயகர் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளார்.

எங்களுடன் வந்து ஆளுநரிடம் புகார் அளித்த ஜக்கையன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரை ஒரு விதமாகவும், எங்களை வேறு விதமாகவும் சபாநாயகர் நடத்தியுள்ளார். சட்டசபை கட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லை எனக் கூறுவது கட்சியில் இருந்து விலகுவது ஆகாது.

கட்சித் தாவல் என்பது ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது தான். முதல்வருக்கான ஆதரவை தாங்கள் விலக்கி கொண்டோமே தவிர, அரசுக்கு அல்ல. அரசியல் சாசனத்தை மீறவில்லை. முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, கவர்னரிடம் மனு அளிப்பது கட்சியில் இருந்து விலகியதற்கு சமமாகாது.

2011 ஆம் ஆண்டு எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்தது. அந்த வழக்கின் தீர்ப்பு எங்கள் வழக்குக்கு பொருந்தும். ஆட்சியை குறை கூறியவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த பிறகும், முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நீடிக்கிறார். சபாநாயகர் என்பவர், நடுநிலையுடன், பாரபட்சமில்லாமல், எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது. தற்போது, சபாநாயகர், ஆளும் அரசின் முதல்வருக்கு சாதகமாக செயல்படுகிறார். தனது அதிகாரத்தை தவறாக, உள்நோக்கத்துடன் பயன்படுத்தி உள்ளார்.

இந்த வழக்கு குறித்து பிற செய்திகள் அறிய:

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு!

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை…ஒரு கண்ணோட்டம்!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close