வரும் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியில் பாஜக - அதிமுக இடையே ஏற்கனவே உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்திருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் தலா 50 சதவிகித இடங்களில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகி நேற்று(ஜன.11) தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "புதுச்சேரி உட்பட மொத்தம் உள்ள 40 இடங்களில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்க எங்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது. அதில், பாஜக 20 இடங்களையும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடம் ஒதுக்கி போட்டியிடும்" என்று தெரிவித்து இருக்கிறார்.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி தங்கமணி ஆகியோர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பாஜகவுடனான இந்த தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க - பாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்
அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலதரப்பட்ட இடங்களில் இருந்தும் கிடைத்த தகவலின் படி, அதிமுக மட்டும் தனித்து 20 இடங்களில் போட்டியிடும் என்றும், பாஜக தனது 20 இடங்களை பாமக மற்றும் தேமுதிகவுக்கு பகிர்ந்து அளித்து போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பழைய நண்பர்களுக்கு பாஜக கதவுகள் திறந்தே இருக்கிறது' என பிரதமர் மோடி சமீபத்தில் பூத் பணியாளர்களிடம் உரையாற்றிய போது அறிவித்த பிறகே, இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
மேலும் படிக்க - தமிழ்நாட்டில் ‘பழைய நண்பர்களு’க்கு அழைப்பு: மோடி விரும்பும் கட்சிகள் எவை?
"பாஜகவின் 20 சீட்டில், தேமுதிகவுக்கு 4 தொகுதியும், பாமகவுக்கு 6 தொகுதியும் கிடைக்கலாம். எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சைமுத்து பாரிவேந்தருக்கு ஒரு இடமும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரனுக்கு ஒரு இடமும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு ஒரு இடமும் கிடைக்கலாம் என தெரிகிறது" என்று பாஜக தரப்பு கூறியுள்ளது.
தென் சென்னை, கோவை, திருச்சி மற்றும் கன்னியாகுமரியில் கட்சி சின்னத்தில் நிற்கவும், மதுரை, சேலம், ராமநாதபுரம் அல்லது வட தமிழகம், டெல்டா பகுதிகளில் போட்டியிட்டுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அமமுகவின் துணை பொதுச் செயலாளருமான டிடிவி தினகரனும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளரும் எம்.பியுமான மைத்ரேயன் கூறுகையில், "தேர்தல் நெருங்கும் சமயத்தில் நாங்கள் இதுகுறித்து ஒரு முடிவு எடுப்போம்." என்றார்.
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுகவின் டெல்லி முகமுமான தம்பிதுரை கூறுகையில், "இந்த கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கட்சியின் தலைமை எனக்கு எதுவும் சொல்லவில்லை. அதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகும் கூட மத்தியின் சில திட்டங்களை நாங்கள் ஏற்க புறக்கணித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.