வாசக தளத்தை மேம்படுத்தும் சென்னை புத்தக கண்காட்சி... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகள் இது தான்...

book exhibition in chennai 2019 : ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறுகிறது புத்தக கண்காட்சி...

சென்னை புத்தக கண்காட்சி 2019 : சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ  மைதானத்தில் கோலகலமாக தொடங்கியுள்ளது 42வது சென்னை புத்தக கண்காட்சி (book exhibition in chennai 2019) . ஒரு புத்தகம் சிறந்த தேடலை உருவாக்கினால் அது தான் அந்த புத்தகத்தின் மகத்தான வெற்றி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள் பிடிக்கும். கவிதை, கதை, நாவல்கள் என்று பயணிப்பவர்கள் ஒரு ரகம்.

வரலாறு, அரசியல், சமூக சிந்தனைகள், ஆன்மீகம், சித்தாந்தம் என்று பயணிப்பவர்கள் மற்றொரு வகை. இவர்கள் அனைவருக்கும் தீணியிடும் விதமாகவே அமைந்திருக்கிறது சென்னை புத்தக கண்காட்சி.

17 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி (book exhibition in chennai 2019 )

ஜனவரி 4ம் தேதி தொடங்கிய புத்தக கண்காட்சி, ஜனவரி 20ம் தேதி வரையில் தொடர்ந்து நடைபெற்று வரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்குமான புத்தகங்கள் எப்போதும் புத்தக கண்காட்சியில் இடம் பெறுவது வழக்கம்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் Booksellers and Publishers Association of South India (BAPASI) இந்த கண்காட்சியை நடத்துகிறது. எப்போதும் 13 அல்லது 14 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி இந்த வருடம் 17 நாட்கள் நடைபெறுகிறது.

ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்குள் நுழைந்துவுடன் மிகவும் பிரம்மாண்டமாய் வரவேற்கிறது நிகழ்ச்சி திடல். அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக சிந்தனையாளர்களுக்கான களம் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு நாள் மாலையிலும் உரைகள் மற்றும் பட்டிமன்றங்கள், புத்தக அறிமுக விழாக்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை புத்தக கண்காட்சி 2019 : கட்டணம்

பெரியவர்கள் சிறியவர்கள் என்ற பேதம் எதுவும் கிடையாது. அனைவருக்கும் ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கண்காட்சி நடைபெறும் 16 நாட்களுக்கும் ஒருவர் நான்கு நபர்களை அழைத்துச் செல்வதிற்கு 100 ரூபாய் பாஸ் வழங்கப்படுகிறது.

ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் தங்களின் அடையாள அட்டையை காட்டி, அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை புத்தக கண்காட்சி 2019 அரங்கங்கள்

ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக கண்காட்சியில் கிட்டத்தட்ட 800 அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2018 வருடங்களில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விடியல் பதிப்பகத்தாரின் பெரியார் இன்றும் என்றும் (தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) புத்தகத்திற்கு இந்த வருடம் நல்ல வரவேற்பு இருப்பதை கண் கூட காண முடிந்தது.

கதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற புத்தகங்களுக்கு எத்தனை தூரம் முக்கியத்துவம் கிடைக்கின்றதோ அதே அளவிற்கு கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மற்றும் வரலாற்று தகவல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள் வாசகர்கள்.

இந்த வருடம் மக்களின் மனதை முக்கியமான அரங்காக செயல்படுகிறது நீலம் பண்பாட்டு மையம். தலித் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் சிலையுடன் சில முக்கியமான புத்தகங்களும் அங்கு இடம் பெற்றிருக்கின்றன. அடிக்கடி அங்கு இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ்ஜின் வருகை வாசகர்களுக்கான செல்ஃபி களமாக அது மாறியுள்ளது.

விகடன் பதிப்பகத்தாரின் வேள்பாரி என்ற வரலாற்று புதினம் மக்களை வெகுநாட்களாக காக்க வைத்திருக்கும் புத்தகமாக இருக்கிறது என்றாலும் மிகையல்ல. வருபவர்கள் எல்லாம் புத்தகம் இல்லை என்று சொல்லி மிகவும் வருத்தத்துடன் திரும்பி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

குழந்தைகளுக்காகவே சில புத்தக அரங்கங்கள் செயல்பட்டு வருவதால் உங்கள் செல்லக்குட்டிகளுடன் நீங்கள் அங்கு ஒரு அரை நாள் செலவு செய்யலாம்.

அரங்குகளுக்கு வெளியே உணவுக்கடைகள் வைக்கப்பட்டிருப்பதால், வாரக்கடைசிகளை அறிவுப்பூர்வமாக செலவிடவும் சிறந்த இடமாக அமைகின்றது ஒய்.எம்.சி.ஏ மைதானம்.

மேலும் படிக்க : புத்தக கண்காட்சியில் மக்களை ஈர்த்த நரேந்திர மோடி புத்தகம்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close