திருச்சி, பொன்மலை ஜி கார்னரில் மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் அ.தி.மு.க 51-ம் ஆண்டு தொடக்க விழா என முப்பெரும் விழா மாநாடு ஓ.பி.எஸ் தலைமையில் இன்று நடைபெறவிருக்கிறது.
இதற்காக மேடை அமைக்கும் பணி, நாற்காலிகள் போடும் பணி, மின் விளக்குகள் அமைக்கும் பணி, ஃபிளக்ஸ் பேனர் கட்டும் பணிகள் மிகவும் தீவிரமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றன. ‘அ.தி.மு.க-வின் கொடி மற்றும் சின்னங்களை ஓ.பி.எஸ் தரப்பு பயன்படுத்தக் கூடாது’ என ஏற்கெனவே திருச்சி அ.தி.மு.க.,வினர் முன்னாள் எம்.பி ப.குமார் தலைமையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்: ‘குறைந்த வாக்குகள் பெற்றால் அசிங்கம்’: கர்நாடகாவில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர்கள் வாபஸ்

இப்படியான நிலையில், ஓ.பி.எஸ் மாநாட்டின் மேடையானது அச்சு அசலாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் போன்ற தோற்றத்தோடு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை என்ற பெயர் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து திருச்சி அ.தி.மு.க தெற்கு மாவட்ட புறநகர் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தெரிவிக்கையில்; இந்த மாநாடு மூலம் பொதுமக்களையும், அ.தி.மு.க.,வின் விசுவாசிகளையும் ஓ.பி.எஸ்.தரப்பினர் குழப்பும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
திருச்சியில் ஓ.பி.எஸ்.க்கு பெரும் ஆதரவு இல்லாத நிலையில், யாரை வைத்து இவர் மாஸ் காட்டுவார். சட்டப்படி ஓ.பி.எஸ் அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தவே கூடாதுன்னு கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தும் அந்த புகாருக்கு போலீஸார் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை, தமிழ்நாட்டின் எதிர்கட்சி என்ற முறையில் நாங்கள் கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், சாதாரண பொதுமக்களில் ஒருவனாக நினைத்தாவது எங்கள் புகாருக்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

நாங்கள் கொடுத்த புகார் மனுக்கு சி.எஸ்.ஆர்.கூட அன்று எங்களுக்கு போட்டுத்தரல, மனு ரசீது கொடுப்பதில் இழுத்தடித்த காவல்துறை, இன்னைக்கு சற்று முன் போலீஸ் மூலம் எங்களுக்கு 22-ம் தேதி கணக்கின்படி சி.எஸ்.ஆர் காப்பியை கொண்டு வந்து இன்று 24-ம் தேதி நண்பகல் கொடுக்கிறாங்க. சட்டப்படி முதற்கட்ட நடவடிக்கையாக போலீஸாரிடம் புகார் கொடுத்தோம், பலனளிக்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்தை நாடியே இதற்கு ஒரு முடிவு கட்டவிருக்கின்றோம் என்றார்.

மொத்தத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.,வின் பக்கபலத்தாலும், போலீஸ் பாதுகாப்புடனுமே இந்த மாநாடு நடக்குது. காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும், மாநாட்டுக்கு தடை விதிக்கவோ, அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்த தடை விதித்தோ, பேனர் வைக்க கட்டுப்பாடுகளை விதிக்காமல் கையைக் கட்டி கொண்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள் காவல்துறையினர். இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம் மு.க.ஸ்டாலினுக்கும், ஓ.பி.எஸ்.க்கும் இருக்கும் நெருக்கம் என்றார் ஆதங்கத்துடன்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil