மதுரை, கோவையில் அதிமுகவினர் போராட்டம்... சர்கார் காட்சிகள் ரத்து! விநியோகஸ்தர்கள் அவசர ஆலோசனை

அதிமுகவினர் போராட்டத்தால் சினிப்பரியா தியேட்டரில் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் மதியம் 2 மணி படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன

‘சர்கார்’ படத்திற்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாலும், படத்தில் நெகட்டிவ் கேரக்டரான வரலக்ஷ்மிக்கு கோமளவள்ளி என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாலும் அதிமுகவினர் சர்கார் படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயரே அல்ல என்று டிடிவி தினகரன் கூறிய பிறகும், அதிமுகவினர் விடுவதாக இல்லை.

மதுரை அண்ணா நகரில் உள்ள சினிப்பிரியா திரையரங்கில் சர்கார் திரைப்படத்தின் காலை காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அப்போது மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க தொண்டர்கள், திரையரங்கு முன் திரண்டனர். சர்கார் திரைப்படத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனைக் கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

அரைமணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், திரையரங்கு மேலாளர் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்னரே சர்காரை திரையிட வேண்டும் என்று எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் திரையரங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, “கலாநிதி மாறன் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ என்கிற திரைப்படம் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். அதுமட்டுமல்ல தமிழக அரசின் இலவசப் பொருட்களை எரித்து, இலவசத் திட்டங்களை மறுத்து வன்முறையைத் தூண்டுவதாக திரைப்படம் அமைந்துள்ளதாக அனைவரும் கருதுகிறார்கள்.

இந்தத் திரைப்படம் குறுகிய நோக்கத்தோடு ஆளுங்கட்சியை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. ஆகவே மதுரையில் இந்தத் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்கிற கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆகவே மதுரை மாவட்டம் முழுவதும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகளை மாற்றியமைக்கும் வரை படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம். காட்சிகள் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.

மதுரை விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தின் காட்சி மாற்றியமைக்கும் வரை படத்தை திரையிடக்கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம். ஆகவே தியேட்டர் உரிமையாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். எங்கள் பிரதிநிதிகள் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை சந்தித்து கோரிக்கை வைப்பார்கள். மேற்கண்ட காட்சிகளை நீக்கிவிட்டு திரைப்படத்தைத் திரையிட கோரிக்கை வைப்பார்கள். நிறுத்தாவிட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, அதிமுகவினர் போராட்டத்தால் சினிப்பரியா தியேட்டரில் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் மதியம் 2 மணி படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கான அறிவிப்பும் தியேட்டர் முன் ஒட்டப்பட்டது. இதையடுத்து, அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தியேட்டருக்கு ‘சர்கார்’ படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். மதுரை மாவட்ட ‘சர்கார்’ படத்தின் விநியோகஸ்தர், அதிமுகவினர் போராட்டம் நடத்திய தியேட்டரின் உரிமையாளர் என்பதால் அந்த தியேட்டரை தேர்ந்தெடுத்து அவர்கள் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மதுரையைத் தொடர்ந்து, கோவையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்டிருந்த சர்கார் படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது. அங்கு திரண்ட அதிமுக தொண்டர்கள், தியேட்டருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால், அங்கும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அதிமுகவினர் போராட்டத்தால் தென் மாவட்ட விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் தொகை சர்கார் படத்தை வாங்கியுள்ளதால், இதுபோன்ற போராட்டங்களால் வசூல் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிலைமை கையை மீறி செல்வதற்குள், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தலையிட்டு அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க : ஜெயலலிதா இருக்கும்போது இந்த படம் எடுத்திருந்தால் இவர்கள் வீரர்கள் – சர்கார் குறித்து அமைச்சர் ஜெயகுமார்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close