ADMK MP OP Ravindranath meet CM Stalin at secretariat: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகனும் எம்.பி.,யுமான ரவீந்திரநாத், தேனி மக்களவை தொகுதிக்கான கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தார்.
தேனி மக்களவை தொகுதி எம்.பி.,யும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினார்.
முன்னதாக, மாநில வளர்ச்சிக்குழுக் கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுகரசர், அதிமுக எம்.பி ஓ.பி. ரவிந்திரநாத் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் சார்பில் நடைபெறக்கூடிய மாநில அளவிலான முதல் ஆய்வுக் கூட்டம் இந்தக் கூட்டமாக அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்குவதற்காக வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்வதற்காக வந்திருக்கிறீர்கள். இந்த ஆட்சி அமைந்தபோதே நான் குறிப்பிட்டு ஒன்றை சொல்லி இருந்தேன். இது என்னுடைய அரசு கிடையாது. நம்முடைய அரசு என்று சொன்னேன். நம்முடைய அரசு என்ற பரந்த உள்ளத்தோடு நீங்கள் எல்லாரும் இங்கே வந்துள்ளது மகிழ்ச்சி. நம் மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஆலோசனைகளை சொல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: நிர்வாகம் தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்; நீதித்துறை மீறலா?
பின்னர் கூட்டம் முடிந்ததும், முதல்வர் தனது அலுவலகத்துக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில், முதல்வர் ஸ்டாலினை அவரது அலுவலகத்திற்கேச் சென்று, ஓ.பி. ரவீந்திரநாத் தனியாக சந்தித்து பேசினார். அப்போது, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் செய்துதர வேண்டும் என்றும், தேனி மக்களவை தொகுதிக்கான மற்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வரிடம் அளித்தார். மேலும் பாரதியார் கவிதைகள் புத்தகத்தையும் முதல்வருக்கு எம்.பி., ரவீந்திரநாத் பரிசாக அளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil