அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிடுவார்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ க்களும் ஒ.பிஎஸ் மற்றும் இ.பி.எஸ் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட்ட பல்வேறு மாவட்ட உறுப்பினர்களுடன் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார் . அ.தி.மு.க. நிர்வாகிகள், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று, இரவு தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பன்னீர் செல்வத்தை சந்தித்து அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இதற்கிடையே, வரும் 6-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் தங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அலுவல்பணிக்காக மட்டுமே அமைச்சர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
5ம் தேதி நடக்கும் அமைச்சர்கள் உடனான கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளார் குறித்த முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுக்க உள்ளதாக அரசியல் வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. 7ம் தேதி அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் தன்னை முதல்வர் வேட்பாளாராக அறிவிக்க ஏதுவாக அமைச்சர்களின் கூட்டம் அமையும் என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், அமைச்சர்களின் முடிவு கட்சியின் முடிவாகுமா? என்ற கேள்வியும் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், " அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க் கட்சிகள் திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால், அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது " என்று தெரிவித்தார்.
அதிமுக பிளவுபடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் ஏமாற்றமடைவார்கள் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil