scorecardresearch

என்னை மிரட்டிப் பார்க்க ஸ்டாலின் நினைத்தால் முடியாது: ரெய்டுக்கு பிறகு எஸ்.பி வேலுமணி பேட்டி

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை; என்னை மிரட்டி பார்க்க நினைத்தால் முடியாது – எஸ்.பி.வேலுமணி பேட்டி

என்னை மிரட்டிப் பார்க்க ஸ்டாலின் நினைத்தால் முடியாது: ரெய்டுக்கு பிறகு எஸ்.பி வேலுமணி பேட்டி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் கோவையில் 10 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.

இதையும் படியுங்கள்: சூத்திரர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதியில் இழிவுபடுத்தியது ஏன்? ஆ. ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை!

கோவை மாநகரில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், கே.சி.பி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம், சபரி எலக்ட்ரிகல்ஸ், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் இல்லம், ஏஸ் டெக் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் இல்லம், சி.ஆர். கன்ஸ்ட்ராக்ஸ்சன்ஸ் நிறுவனம், ஏஸ் டெக் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டனர்.

அ.தி.மு.க தொண்டர்கள் குவிய அனுமதி மறுத்த காவல் துறையினர், அங்கு திரண்டிருந்தவர்கள் கைது செய்ய முயன்றனர். அப்போது அ.தி.மு.க தொண்டர்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் காவல் துறையினருக்கும், அ.தி.மு.க தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 7 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 100″க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஒன்பது மணி நேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை இன்று மாலை நிறைவடைந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,”மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்தது. காவல் துறையை தொடர்ந்து தவறான முறையில் தி.மு.க பயன்படுத்துகிறது.

எந்த முதலமைச்சரும் இது போல நடந்து கொள்ளவில்லை. இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. 7500 ரூபாய் பணம், அம்மாவின் கம்மல் உள்ளிட்ட சிறு பொருட்களை எடுத்துள்ளனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கடந்த இரண்டு முறை நடந்த சோதனையிலும் எதுவும் கைப்பற்றவில்லை.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயன்றார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்ததால் வழக்கு போடுகிறார்கள். அ.தி.மு.க கட்சி, இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றினோம். இதனால் பழிவாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மின்சார கட்டண உயர்வை திசை திருப்ப சோதனை நடைபெற்றது. தி.மு.க அரசு பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க.,வினரை முழுமையாக பழிவாங்குகிறார்கள். ரெய்டு மூலம் காவல் துறையை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது.

நீதிமன்றத்தில் எனது வழக்கு வரும் போது எல்லாம், பொய் செய்தியை பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின் போது முழு ஒத்துழைப்பு அளித்தோம்.

அ.தி.மு.க தொண்டர்கள், வக்கீல் சட்டையை கிழித்து துன்புறுத்தி, மண்டபத்தில் அடைத்துள்ளார்கள். காவல் துறை அத்துமீறலில் ஈடுபட்டார்கள். இது அரசியல் பழிவாங்குதலில் உச்சகட்டம். வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க வெற்றி பெறும். மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வருவார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை முடக்க சோதனை நடத்தியுள்ளார்கள். எல்.இ.டி திட்டம் ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்கை தி.மு.க போடுகிறது. எல்லா ஒப்பந்தமும் சட்டப்படி நடந்துள்ளது. ஸ்டாலின் என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தால் முடியாது.

தி.மு.க ஆட்சியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் அமைச்சர்களிடம் ஸ்டாலின் குடும்பம் வாங்கியுள்ளது.

தி.மு.க அரசு ஊடகங்களை மிரட்டி, காவல் துறை கைக்கூலியாக வைத்துக் கொண்டு எந்த திட்டத்தையும் செய்யாத கையாளாத அரசாக உள்ளது. எந்த திட்டத்தையும் தி.மு.க செய்யவில்லை. அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க விடாமல் தடுத்து, அ.தி.மு.க கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் முக்கிய எதிரியாக என்னை ஸ்டாலின் நினைக்கிறார். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்தார்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Admk sp velumani speech after vigilance raid