கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.க.வின் உறவில் விரிசல் ஏற்பட்டதற்கு ஒரு காரணியாகக் கருதப்படும் கே.அண்ணாமலை விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளார்.
பா.ஜ.க.,வின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.,வுடனான உறவை முறித்துக் கொள்ளுமாறு பா.ஜ.க.,வுக்கு அழைப்பு விடுத்தார், மேலும், கட்சி அவ்வாறு செய்ய உடன்படவில்லை என்றால் “சாதாரண தொண்டராக” பணியாற்ற தயார் என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள்: தேர்தல் கூட்டணி, அண்ணாமலை பேசியது தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்
கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.,வின் உயர்மட்ட தலைவர் ஒருவர் கூறியதாவது: தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே, ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக கட்சி திறம்பட போராடி, நல்லாட்சியை மேம்படுத்த முடியும் என்று அண்ணாமலை வாதிட்டார். கஷ்டமில்லாமல் நல்ல பாதை இருக்காது, என்று ஒரு தலைவன் போல் உணர்ச்சிமிக்க அண்ணாமலை கூறினார். “ஆனால், கட்சியை அடித்தளத்தில் இருந்து கட்டியெழுப்ப தேவையான அசாதாரண வலியை ஏற்றுக்கொள்ளுமாறு கட்சி உறுப்பினர்களிடம் அவர் வலியுறுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிப்பதாகவும், கூட்டணி குறித்த அவரது நிலைப்பாட்டை மேலும் விவாதிப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.”
ஐ.பி.எஸ் பதவியிலிருந்து வி.ஆர்.எஸ் எடுத்த பிறகு கட்சி வரிசையில் அண்ணாமலையின் விரைவான எழுச்சியைக் கண்ட பா.ஜ.க.,வில் உள்ள பல மூத்த தலைவர்களுக்கு, அண்ணாமலையின் இந்தப் பேச்சு இளம், அவசரத் தலைவரின் வழக்கமான கொந்தளிப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பிராந்தியக் கட்சிகள் தங்கள் தேசிய கூட்டணி கட்சிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட மரியாதையை எதிர்பார்க்கின்றன, என்பதை அக்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன, அதேநேரத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இறுதியாக கட்சி ரீதியாக வலுப்பெறும் நேரத்தில் அண்ணாமலை பா.ஜ.க.,வின் நோக்கத்தைப் புண்படுத்துகிறார்.
குறைந்தபட்சம் இரண்டு மூத்த பா.ஜ.க தலைவர்கள் மற்றும் மாநிலத்தின் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் அண்ணாமலையின் அறிவுரையை கட்சி ஏற்க வாய்ப்பில்லை என்று கூறினர்; அந்தத் தலைவர்களில் ஒருவர் அவரது கருத்தை முட்டாள்தனமானதாக கருதலாம் என்று கூறினார்.
முன்னதாக, அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு கொண்ட 13 பா.ஜ.க தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், அவர்களை அ.தி.மு.க.வினர் இருகரம் நீட்டி வரவேற்றதையடுத்து, அண்ணாமலை தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த 13 பேரில், பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அண்ணாமலையின் செயல்பாடு மற்றும் தன்னிச்சையான நடத்தையைத் தாக்கி பா.ஜ.க.,வில் இருந்து விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அ.தி.மு.க.,வின் உயர்மட்டத் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்பட்டார்.
அதேநேரத்தில், “நான் ஒரு தலைவராக வேலை செய்ய விரும்புகிறேன், மேலாளராக அல்ல. ஜெயலலிதாவும், கருணாநிதியும் தங்கள் கட்சிகளை நடத்திய விதத்தில் இந்தக் கட்சியை நடத்த எண்ணுகிறேன். இது எனது கட்சியில் உள்ள ஒரு பிரிவினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது,” என்று அண்ணாமலை கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷின் ஆதரவிலிருந்தும், மத்திய தலைமையிடம் இருந்து இதுவரை அவருக்குக் கிடைத்துள்ள அசைக்க முடியாத ஆதரவிலிருந்தும் அண்ணாமலை தனது பலத்தைப் பெற்றதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், குறிப்பாக 2024 பொதுத் தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி, தெற்கில் பா.ஜ.க தனது எண்ணிக்கையை அதிகரிக்க முயலும் நேரத்தில், அ.தி.மு.க.வுடன் உறவை முறித்துக் கொள்ள முடியும் என்ற மாயை பா.ஜ.க.,வுக்குள்ளேயே இல்லை.
ஆர்.எஸ்.எஸ்ஸின் உயர்மட்ட தலைவர் ஒருவர் அண்ணாமலையின் பேச்சு "உணர்ச்சி மிக்கது", ஆனால், தலைமை பதவியை வகிப்பவருக்கு பொருந்தாது என்று நிராகரித்தார். மேலும், “மாநில தலைவர் பதவியை வகிக்கும் அவர், இதுபோன்ற கருத்துக்களை வெளியிட முடியுமா? அவர் தேர்தல் அரசியலில் ஈடுபட்டால், நடுநிலை களத்தைக் கண்டுபிடிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலில் ஈடுபட வேண்டும், ”என்று அந்தத் தலைவர் கூறினார். அண்ணாமலைக்கு அவரது வயதின் காரணமாக (30 வயது) அவர் இப்படி பேசியிருக்கலாம் என்றும் அந்த தலைவர் கூறினார்.
அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை முறிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். மேலும், “தேசிய அரசியலிலும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம். நாங்கள் இணைந்து போட்டியிடுவோம், கூட்டணியில் பா.ஜ.க குறைந்தது 10 இடங்களையாவது உறுதி செய்யும். ஒன்று அண்ணாமலை கூட்டணி குறித்த தனது ஆக்ரோஷமான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையேல் விரைவில் சாதாரண தொண்டராக செயல்படத் தொடங்குவார்” என்றும் அந்தத் தலைவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.